என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே வருகை தந்தார்.
அவர் ஊட்டியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்தில் இருந்து அரிசி கொள்முதல் செய்த அளவு மும்மடங்காக உயர்ந்துள்ளது. 9 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 29 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் உயர்ந்துள்ளது.
அதேபோல, பெட்ரோல் நுகர்வில் நாட்டில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் 20 சதவீத எத்தனால் கலப்பு ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் நடப்பு ஆண்டில் எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு 10 சதவீதம் உயரும். வேளாண் கழிவுகளும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். 82 கோடி லிட்டர் எத்தனால் தேவை உள்ள நிலையில், 11 டிஸ்டிலரிகள் மூலம் 10 முதல் 11 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எத்தனால் கலப்பு பெட்ரோல் உற்பத்தி மூலம் வேலை வாய்ப்பு பெருகுவதோடு, சுற்றுச்சூழல் மாசும் குறையும். அத்துடன் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.
தமிழகத்தில் உணவு தானியங்களை சேமிக்க போதுமான வசதிகள் உள்ளன. இருப்பினும் தொலைவான பகுதிகளிலும் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொது வினியோக திட்டம் நாட்டிலேயே சிறப்பானது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் 50 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் 43 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ரூ. 34 ஆயிரம் கோடி மானியம் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘மேரா ரேஷன்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி 13 மொழிகளில் உள்ளதால் பயன்படுத்துவது எளிது. எனவே, அவர்கள் பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, தமிழக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ராஜாராமன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் உடனிருந்தனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரிந்த டி23 என்ற புலி 4 பேரை அடித்து கொன்றது.
இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர், வனத்துறையினர் இணைந்து புலியை பிடிக்கும் பணியை தொடங்கினர்.
ஆனாலும் புலி வனத்துறையினர் கண்ணில் சிக்கினாலும், பிடிபடாமல் போக்கு காட்டி வந்தது. நீண்ட நாட்கள் போராடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
புலியை பிடித்தபோது, அதன் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதை அறிந்த வனத்துறையினர் உடனடியாக புலிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர்.
அதன்படி இரும்பு கூண்டில் புலியை அடைத்து கர்நாடக மாநிலம் மைசூரு வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வனத்துறையின் கால்நடை மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது அந்த புலியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புலி நன்கு குணம் அடைந்தவுடன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்நீரஜ் குமார் மைசூரு வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு சென்றார். அங்கு ஆட்கொல்லி புலியின் உடல் நிலை குறித்து மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்து, புலியை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஆட்கொல்லி புலிக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிடிபட்டபோது மெலிந்து காணப்பட்ட புலி தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. அதன் உடல் எடை 200 கிலோ அதிகரித்துள்ளது. உடலில் இருந்த 2 பெரிய காயங்கள் குணம் அடைந்து விட்டன. சில இடங்களில் உள்ள காயங்கள் குணமாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மருத்துவக் குழுவினரின் உத்தரவுக்கு அந்த புலி கட்டுப்படுகிறது. இருந்த போதிலும் அதன் ஆக்ரோஷம் இன்னும் மாறவில்லை. எனவே அந்த புலி இரும்புக் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு 10 கிலோ மாட்டிறைச்சி சாப்பிடுகிறது. அடிக்கடி பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி அந்த புலிக்கு எந்தவித தொற்றும் ஏற்படவில்லை. மேலும் சில மாதங்களுக்கு புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி:
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 2-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொடர் விடுமுறையை கொண்டாடும் வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நீலகிரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். குறிப்பாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் எந்திரப் படகு, மிதி படகு, துடுப்பு படகு உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து குளு குளு காலநிலையை அனுபவித்தனர். தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை , இந்திய வரைப்படம் ஆகிய வற்றில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஊட்டி வருகை புரிந்ததாகவும், சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக குளு, குளு காலநிலையை அனுபவிக்க இங்கு வந்துள்ளதாகவும் பகல் வேளையிலும் பனி சூழ்ந்த நிலையில் உலக புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவில் மலர்களை கண்டு ரசிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவை நேற்று ஒரே நாளில் 11 ஆயிரம் சுற்றுலாபயணிகள் ரசித்தனர். அதற்கு முந்தைய நாள் 7 ஆயிரம் பேரும், 30-ந் தேதி 9,369 பேரும் தாவரவியல் பூங்காவை கண்டுகளித்துள்ளனர்.
இதேபோல நீலகிரி மலை ரெயிலிலும் பயணம் செய்ய சுற்றுலாபயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.
நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், இன்று இரவு 12 மணிக்கே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.
இதன் காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிறபகுதிகள், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் நீலகிரிக்கு வந்து, இங்குள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகள், ரிசார்ட்டுகள் நிரம்பி வழிகின்றன.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
இன்றும், நாளையும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தொட்டபெட்டா மலைசிகரம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதனால், சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க நீலகிரி காவல்துறை அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சுற்றுலா தலங்களில் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குழந்தை திருமணங்கள் மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதான போக்சோ வழக்குகள் அதிகரித்து உள்ளது. இதில் பள்ளிகளில் படித்து வந்தவர்கள், இடைநின்ற மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றவர்கள் போன்றோரும் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் வழக்குகள் அதிகரித்து இருக்கிறது.
கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்து உள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சைல்டு லைன், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை திருமணம் செய்யும் நபர்கள், அதற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 15 குழந்தை திருமணங்களை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
குழந்தை திருமணம் செய்துகொள்ள முயற்சித்த சிறுமிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி திருமணத்தை நடத்திய பெற்றோர், பாதுகாவலர், மணமகன், மதத்தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் குற்றம் செய்ததாக கருதப்படுகிறது. இது பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். நீலகிரி மாவட்டத்தில் ஏதேனும் இடத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட சமூக நல அலுவலர் 9655988869, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 9715310135 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றனர்.






