என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலா பயணிகள்
    X
    சுற்றுலா பயணிகள்

    ஆங்கில புத்தாண்டை கொண்டாட நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
    ஊட்டி:

    நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், இன்று இரவு 12 மணிக்கே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி விடும்.

    இதன் காரணமாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பிறபகுதிகள், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் நீலகிரிக்கு வந்து, இங்குள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகள், ரிசார்ட்டுகள் நிரம்பி வழிகின்றன.

    புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    இன்றும், நாளையும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தொட்டபெட்டா மலைசிகரம், தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, காட்டேரி பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பல்வேறு வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். இதனால், சுற்றுலா தலங்களில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாமல் இருக்க நீலகிரி காவல்துறை அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    போக்குவரத்துக்கு இடையூறாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது என மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

    சுற்றுலா தலங்களில் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×