என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
    X
    குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

    நீலகிரியில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

    இந்த ஆண்டில் நீலகிரியில் 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குழந்தை திருமணங்கள் மற்றும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதான போக்சோ வழக்குகள் அதிகரித்து உள்ளது. இதில் பள்ளிகளில் படித்து வந்தவர்கள், இடைநின்ற மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றவர்கள் போன்றோரும் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் வழக்குகள் அதிகரித்து இருக்கிறது.

    கூடலூர் சுற்றுப்புற பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடந்து உள்ளது.

    இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சைல்டு லைன், சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. 18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை திருமணம் செய்யும் நபர்கள், அதற்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் நடப்பாண்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 33 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 15 குழந்தை திருமணங்களை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    குழந்தை திருமணம் செய்துகொள்ள முயற்சித்த சிறுமிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி திருமணத்தை நடத்திய பெற்றோர், பாதுகாவலர், மணமகன், மதத்தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் குற்றம் செய்ததாக கருதப்படுகிறது. இது பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். நீலகிரி மாவட்டத்தில் ஏதேனும் இடத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால் மாவட்ட சமூக நல அலுவலர் 9655988869, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 9715310135 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றனர்.
    Next Story
    ×