என் மலர்
தமிழ்நாடு

புத்தாண்டை முன்னிட்டு ஊட்டி, குன்னூரில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி:
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 2-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தொடர் விடுமுறையை கொண்டாடும் வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நீலகிரிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலமான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். குறிப்பாக ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊட்டி படகு இல்லத்தில் எந்திரப் படகு, மிதி படகு, துடுப்பு படகு உள்ளிட்டவற்றில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து குளு குளு காலநிலையை அனுபவித்தனர். தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை , இந்திய வரைப்படம் ஆகிய வற்றில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள் கூறுகையில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஊட்டி வருகை புரிந்ததாகவும், சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக குளு, குளு காலநிலையை அனுபவிக்க இங்கு வந்துள்ளதாகவும் பகல் வேளையிலும் பனி சூழ்ந்த நிலையில் உலக புகழ் பெற்ற தாவரவியல் பூங்காவில் மலர்களை கண்டு ரசிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவை நேற்று ஒரே நாளில் 11 ஆயிரம் சுற்றுலாபயணிகள் ரசித்தனர். அதற்கு முந்தைய நாள் 7 ஆயிரம் பேரும், 30-ந் தேதி 9,369 பேரும் தாவரவியல் பூங்காவை கண்டுகளித்துள்ளனர்.
இதேபோல நீலகிரி மலை ரெயிலிலும் பயணம் செய்ய சுற்றுலாபயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.