என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அம்ரித்
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நீலகிரி கலெக்டர் வலியுறுத்தல்
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 4-ம் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பள்ளி செல்லும் குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக குழந்தை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
குழந்தை திருமணத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல், கிராம, வட்டார, நகர பஞ்சாயத்து, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி, அந்தந்தப் பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், இளைஞர் நீதிக் குழும முதன்மை நடுவர் பாரதிராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நசாருதீன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






