என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது.
    • சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    75-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் நாளை வரை 3 தினங்கள் மக்கள் தங்கள் வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது. இதனை ஏற்றும் நேற்று நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.

    மேலும் 75-வது சுதந்திர தின விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக குன்னூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்கா படகு இல்லத்தில் குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவா்படை சாா்பில் உன்னத் பாரத் அபியான் என்ற நீரின் இன்றியமையாமையினை விளக்கும் விழிப்புணா்வு நாடகம், சுதந்திர தின நடனமும் நடைபெற்றது. மாணவிகள் நடனமாடிய படி தேசிய கொடியை ‌ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    சுற்றுசூழல் பாதுகாப்பு, தேசப்பற்று குறித்து மாணவிகளின் எடுத்துரைத்தனர். இது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அதிகாரி லெப்டெனென்ட் சிந்தியா ஜாா்ஜ் செய்திருந்தாா்.

    • மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    • போலீசார், ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில நாட்களாக ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்

    ஊட்டி,

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (திங்கட்கி ழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா, ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

    விழாவில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்து கிறார். தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் உள்பட பல் வேறு பிரிவில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் காத்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்ததால், சமூக இடைவெளி விட்டு குறைந்த தபர்களுடன் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வழக்க ம்போல்கொண்டாட மாவட்ட நிர் வாக ம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி பழங்குடியினர் கலை நிகழ்ச்சி, பள்ளி கல்லூரி, மாணவர்களின் நடனங்கள் இடம்பெறும் மேலும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறுகிறது. இதையொட்டி போலீசார், ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில நாட்களாக ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல் மாவட்ட எல்லைகளில் உள்ள 13 சோதனைச்சாவடிகளில் போலீசார் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.மேலும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபர் கள் யாராவது தங்கி உள்ளார்களா என்று திடீர் சோதனை யும் நடத்தப்பட்டு வருகிறது.  

    • நிலுவையிலிருந்த 925 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 410 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது
    • அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    ஊட்டி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை, நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகன் தொடங்கி வைத்தாா். நீதிபதி ஸ்ரீதரன், மகளிா் நீதிமன்ற நீதிபதி நாராயணன், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் நீதித்துறை நடுவா் தமிழினியன், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி வி.மோனிகா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனகிருஷ்ணன் ஆகியோா் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பல்வேறு வழக்குகளுக்கு தீா்வு கண்டனா்.

    கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி ராஜ் கணேஷ், குற்றவியல் நீதிபதி வனிதா ஆகியோா் தலைமையிலும், குன்னூா் நீதிமன்றத்தில் சாா்பு நீதிபதி சந்திரசேகரன், குற்றவியல் நீதித் துறை நடுவா் இசக்கி மகேஷ்குமாா், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் ஆகியோா் தலைமையிலும், கூடலூா் நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி பிரகாசம், குற்றவியல் நீதிபதி சசிகுமாா், பந்தலூா் நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி சிவகுமாா் ஆகியோா் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றன.

    இதில் நிலுவையிலிருந்த 925 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 410 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 2 கோடியே 34 லட்சத்து 15,506 ஆகும். வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமான 510 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 118 வழக்குகள் தீா்வு காணப்பட்டன. அதன் மதிப்பு ரூ. 1 கோடியே 59 லட்சத்து 82,083 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர்.
    • வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன

    அரவேணு:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது.

    அதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் நாளை வரை, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று மக்களும் ஆர்வமுடன் கொடி ஏற்றி வருகின்றனர்.

    நீலகிரியில், 4 நகராட்சி, 11 பேரூராட்சி, 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர்.

    பா.ஜ., சார்பிலும் வீடுதோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது. தவிர, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் நேற்று ஏற்றப்பட்டன

    கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கோத்தகிரி அருகே உள்ள பூர்வக்குடி மக்களான கோத்தர் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு சென்று தேசிய கொடி வினியோகித்து, வீடுகளில் தேசிய கொடி ஏற்றுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து அவர்களும் தங்கள் வீடுகளில் தேசியை கொடி ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் கோத்தர் பழங்குடியின கிராமத்தில் உள்ள ஊர்தலைவர், பொது மக்கள் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது.
    • நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கூடலூர்-மசினகுடி இடையே உள்ள தெப்பக்காடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் உடனடியாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக தெப்பக்காடு பகுதிக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த பகுதி வழியாக கேரளா, கர்நாடகாவில் இருந்தும் அதிகளவில் வாகனங்கள் வருவது வழக்கம். தடை விதிக்கப்பட்டதால் அவர்களும் பல கிலோ மீட்டர் சுற்றி ஊட்டி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இதுதவிர எந்தவித போக்குவரத்தும் இல்லாததால் தெப்பக்காடு மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அருகே உள்ள பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது. இதனால் பெரும் சிரமத்தை சந்தித்த மக்கள் தங்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் தற்போது மழை குறைந்துள்ளதாலும், மாயாற்றில் வெள்ளம் குறைந்து காணப்படுவதாலும் இன்று 5 நாட்களுக்கு பிறகு உள்ளூர் போக்குவரத்திற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து உள்ளூர் பொதுமக்கள் மட்டும் தங்கள் வாகனங்களில், அருகே உள்ள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    • 25 செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    கோத்தகிரி,

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் நீலகிரி மண்டல மையம் உறுப்பு கல்லூரி சார்பில், 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார். செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பேராசிரியர் அம்பேத் ஆகியோர் பேசினர். தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த 25 செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் ஆலோசகர் ஜெபராஜ் நன்றி கூறினார்.

    • மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
    • புதிதாக உயிரியல் பாடப்பிரிவு மாணவர்களை கவர்ந்துள்ளது

    குன்னூர்,

    குன்னூர் அருகே உபதலை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நீலகிரி மாவட்டத்தின் பழமையான பள்ளிகளில் ஒன்றாக விளங்குகிறது. உபதலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆரம்ப கால கட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். பின்னர் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இந்தநிலையில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் ஆகியோரின் அறிவுரையின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் ஐயறின் ரெஜி மற்றும் ஆசிரியர்கள் ஒரு குழுவாக இணைந்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் மூலம் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 50 சதவீதம் உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம், அரசு வழங்கும் இட ஒதுக்கீடு, நிதி உதவி உள்பட பல்வேறு சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதே ஆகும். மேலும் அனைத்து வகுப்புகளிலும் ஆங்கில வழி கல்வி, புதிதாக உயிரியல் பாடப்பிரிவு தொடக்கம் ஆகியவை மாணவர்களை கவர்ந்துள்ளது. இதனால் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • மசினகுடியில் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு பேரணியும் நடந்தது.
    • யானைகள் பற்றிய கையேடும், துணிப்பையும் வழங்கப்பட்டன.

    ஊட்டி

    உலக யானைகள் தினத்தை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷின் உத்தரவின்படி, மசினகுடி கோட்ட துணை இயக்குநா் அருண்குமாா் முன்னிலையில் மசினகுடியில் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு பேரணியும் நடந்தது.

    அதனை தொடா்ந்து தெப்பக்காடு யானைகள் முகாமில் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றன. தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைகள் பற்றி வனக்கால்நடை உதவி மருத்துவா் ராஜேஷ், யானை ஆராய்ச்சியாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பள்ளிக் குழந்தைகளுக்கு விளக்க உரை அளித்தனா். பின்னா் யானைகள் வழித்தடம் மற்றும் பாதுகாப்பு பற்றி குறும்படம் காண்பிக்கப்பட்டது. வி

    ழாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு யானைகள் பற்றிய கையேடும், துணிப்பையும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியரோடு, திரளான பொதுமக்களும், தன்னாா்வலா்களும் கலந்து கொண்டனா்.

    • குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.
    • ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் தொட்டகம்பை, சேரனூர், குந்தாபாலம் பகுதியில் சுமார் 4 வீடுகள் சேதமடைந்தன.

    சேதமடைந்த வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி சேதமடைந்த வீடுகளை பார்வையிட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஒவ்வொரு வீடுகளுக்க்கும் தலா 5000 வீதம் 4 வீடுகளுக்கு மொத்தம் 20ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

    அவருடன் கீழ் குந்தா பேரூராட்சி செயலாளர் சிவராஜ், கீழ்குந்தா பேரூராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பெள்ளி, சக்ஸஸ் சந்திரன், பாசறை பேரூராட்சி செயலாளர் ஜெயபிரகாஷ், மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு பேரூராட்சி செயலாளர் சரவணன், கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ், கேத்தி ராஜூ, வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கேரள மாநிலத்தையொட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • மாயாற்றில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தையொட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்குள்ள புன்னம்புழா, பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றின் குறுக்கே கூடலூர்-மசினகுடியை இணைக்கும் தெப்பக்காடு தரைப்பாலம் உள்ளது. மாயாற்றில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.

    இதனால் கூடலூர்- மசினகுடி இடையே 5 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லவில்லை.

    மேலும் தெப்பக்காடு பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வேலைக்காகவும் கூடலூர் பகுதிக்கு தான் வருவார்கள். தற்போது தரைப்பாலம் மூழ்கியதால், பணிக்கு செல்வோா், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் பள்ளி செல்ல முடியாமல், மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக தரைப்பாலம் மூழ்கி இருப்பதாலும், போக்கு–வரத்து நிறுத்தப்பட்டு இருப்ப–தாலும் தெப்பக்காடு பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    அந்த பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர் மழையால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இதனால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளோம். அத்தியாவசிய தேவைக்கு கூட அருகே உள்ள பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருட்களும் குறைந்த அளவே கிடைக்கிறது. வரும் நாட்களிலும் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பங்களாவின் சுவரை தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்தது.
    • சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியில் அவ்வப்போது கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரத்தில் உலா வருவது வழக்கம்.

    இதனால் பொதுமக்கள் அச்சத்திலேயே உள்ளனர். மேலும் அந்த பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைந்தே காணப்படும்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இங்கு வசித்து முருகன் என்பவரின் பங்களாவின் சுவரை தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தது. அங்கு எந்த உணவும் கிடைக்காததால் மீண்டும், கேட்டை எகிறி குதித்து திரும்பிச் சென்றது.

    இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அன்மைக் காலமாக இந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர், எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
    • கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளது. நேற்று நடுவட்டம்(128 மி.மீ.), கூடலூரில்(107 மி.மீ.) அதிகபட்ச மழை அளவு பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் நடுவட்டம், பைக்காரா பகுதியில் இருந்து வரும் தண்ணீர் மாயார் ஆற்றில் கலந்து ஓடுவதாலும், முதுமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும் எம்.ஜி.ஆர். அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதேபோல் தரைப்பாலம் மூழ்கியவாறு உள்ளதால் கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பஸ் போக்குவரத்தும் இல்லாததால் மாணவ- மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வர முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    கூடலூர் நகரில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து லேசான வெயில் தென்பட்டது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதேபோன்று தேவர்சோலை பேரூராட்சி கணியம் வயல் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவரது வீடு மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் வாய்க்காலில் இன்றும் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தெருவுக்குள் வழிந்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கூடலூர் சின்னப்பள்ளி வாசல் தெருவில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் சாலையில் தேங்கியது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து அடைப்புகளை அதிகாரிகள் சரி செய்தனர். அதன் பின்னர் தண்ணீர் சீராக வழிந்து ஓடியது.

    ×