என் மலர்
நீங்கள் தேடியது "மாயாற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்-"
- கேரள மாநிலத்தையொட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
- மாயாற்றில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தையொட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்குள்ள புன்னம்புழா, பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மாயாற்றின் குறுக்கே கூடலூர்-மசினகுடியை இணைக்கும் தெப்பக்காடு தரைப்பாலம் உள்ளது. மாயாற்றில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் கூடலூர்- மசினகுடி இடையே 5 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லவில்லை.
மேலும் தெப்பக்காடு பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வேலைக்காகவும் கூடலூர் பகுதிக்கு தான் வருவார்கள். தற்போது தரைப்பாலம் மூழ்கியதால், பணிக்கு செல்வோா், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பள்ளி செல்ல முடியாமல், மக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக தரைப்பாலம் மூழ்கி இருப்பதாலும், போக்கு–வரத்து நிறுத்தப்பட்டு இருப்ப–தாலும் தெப்பக்காடு பகுதிக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர் மழையால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளோம். அத்தியாவசிய தேவைக்கு கூட அருகே உள்ள பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருட்களும் குறைந்த அளவே கிடைக்கிறது. வரும் நாட்களிலும் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு மாற்று வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






