என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சுதந்திரம் மற்றும் குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழா நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடுவது வழக்கம்.
    • பொம்மி, ரகு உள்பட 15-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் வரிசையாக அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் மற்றும் குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி ஆகிய விழா நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடுவது வழக்கம்.

    நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நேற்று முதுமலையில் வனத்துறையினர் கொண்டாடினர். இதையொட்டி தெப்பக்காடு முகாம் வளாகத்தில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டது. தொடர்ந்து பொம்மி, ரகு உள்பட 15-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் வரிசையாக அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டது.

    பின்னர் கரும்பு, ராகி, கேழ்வரகு உள்ளிட்ட உணவுகள் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினரின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பின்னர் வனச்சரகர் மனோகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து வனச்சரகர்கள் விஜயன், பவித்ரா, மனோஜ் உள்பட வனத்துறையினர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். இதேபோல் வளர்ப்பு யானைகள் துதிக்கையை தூக்கி பிளிறியவாறு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தின. இதை சுற்றுலா பயணிகள் கண்டு நெகிழ்ந்தனர். முன்னதாக சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தேசிய கொடிகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து வளர்ப்பு யானைகளுடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.50 விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • செப்டம்பர் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் சங்கம் சார்பில், கடந்த ஒரு மாத காலமாக பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்க வலியுறுத்தி மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்துவதற்காக அனைத்து கிராமங்களிலும் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்று வந்தது.

    அதன் கடைசி கூட்டம் கக்குச்சி கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் போஜன் தலைமை தாங்கினார். 11 ஊர்த் தலைவர் நஞ்சா கவுடர், ஆண்டிகவுடர், அருணா நந்தகுமார், 94 ஊர் பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.50 விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயிக்க வேண்டும்.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், குன்னூரில் உள்ள தேயிலை வாரியம் முன்பு வருகிற செப்டம்பர் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டம் முழுவதும் இருந்து 30 ஆயிரம் விவசாயிகள் பங்குபெற வேண்டும்.

    வருவாய்த்துறை மற்றும் வனத்துறையின் எவ்வித தலையீடும் இன்றி, விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிரிட்டு உள்ள சில்வர் ஓக் மரங்களை தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக வெட்டி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளின் பட்டா நிலங்களை உட்பிரிவு செய்து தனி பட்டாவாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சதீஷ் நன்றி கூறினார்.

    • நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டமைக்கு எனது பாராட்டுகள்.
    • நீலகிரி மாவட்ட மக்கள் அதிகபடியாக கேரட், கிழங்கு, பீட்ரூட், தேயிலை போன்றவற்றினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

    ஊட்டி:

    சுதந்திர தினவிழாவையொட்டி, நீலகிரி மாவட்டம், நஞ்சநாட்டில் கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.இக்கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    சுதந்திர தினத்தி னையொட்டி, நஞ்சநாடு ஊராட்சியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டமைக்கு எனது பாராட்டுகள்.

    ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

    நீலகிரி மாவட்ட மக்கள் அதிகபடியாக கேரட், கிழங்கு, பீட்ரூட், தேயிலை போன்றவற்றினை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

    இவா்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மானியத்துடன் பல்வேறு கடனுதவிகளும், வங்கிகள் மூலமாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    மேலும், மகளிா் திட்டத்துறையின் சாா்பில், மகளிா் தங்கள் வாழ்வாதாரத்தினை உயா்த்தி கொள்வதற்காக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ஏராளமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிா்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகாவில் உள்ள கோடமூளா என்ற பழங்குடியினர் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் பெட்டகுரும்பா இனத்தைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தங்கி இருக்கும் வீடுகள், அனைத்தும் மேற்கூரை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதையடுத்து தங்களுக்கு அரசு புதிதாக வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து இவர்களுக்கு 2018-ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சுமார் 46 வீடுகள் கட்டப்படுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வீடு கட்டும் பணி

    தொடங்கியது.வீடு கட்டும் பணி தொடங்கி 5 ஆண்டுகளை கடந்தும், இதுவரை 10 வீடுகள் மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 36 வீடுகள் முழுமையடையாமலும், மேற்கூரை அமைக்கப்படாமலும் பாதியிலேயே நிற்கிறது.

    இதனால் புதிய வீடுகளில் குடியேறலாம் என்று நினைத்த பழங்குடியின மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் ஒழுகும் கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் தார்பாய்கள், பிளாஸ்டிக் தாள்களை வைத்து மறைத்து வீடுகளில் வசித்து வருகிறோம். இது தொடர்பாக கூடலூர் நகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி பாதியில் நிற்கும் வீடுகளை கட்டி ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மகாமுனி பக்கத்து விட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் சென்று குடிக்க பணம் கேட்டார்.
    • கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    கோவை:

    கோவை பாப்பம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு மணி என்கிற மகாமுனி (43) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் மகாமுனிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி லட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல மகாமுனி, லட்சுமியிடம் பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் தரவில்லை.

    இதனால் மகாமுனி பக்கத்து விட்டை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் சென்று குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவரும் பணம் தர மறுத்து விட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்தநிலையில் மகாமுனி பக்கத்து வீட்டுகாரரிடம் பணம் கேட்டது லட்சுமிக்கு தெரியவந்தது.

    இதனை அவர் தட்டிக்கேட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த மகாமுனி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து லட்சுமியின் கழுத்தில் வெட்டினார்.

    பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சுறுண்டு விழுந்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தின் ஓடி வந்தனர்.

    அங்கு லட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மகாமுனியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல இடங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.
    • பள்ளிக்கூட கட்டிடங்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.

    கூடலூர்,

    கூடலூர் பகுதியில் 15 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. தொடர்ந்து சூறாவளி காற்றும் பலமாக வீசியது. இதனால் பல இடங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.

    மேலும் ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் சரிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமானது. இதேபோல் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் சேதமடைந்தது. மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் கூடலூர் பகுதியில் முகாமிட்டனர்.

    இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் தாலுகா பகுதியில் சாலையோரம் மற்றும் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூட வளாகங்களில் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள ஆபத்தான மரங்களை கண்டறிந்து உடனடியாக வெட்டி அகற்றும் பணியும் தொடங்கப்பட்டது.

    பெரும்பாலான அரசு பள்ளிக்கூட வளாகங்களில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த நிகழ்ச்சிகளில் பழ வகை மற்றும் எந்த பயன்பாட்டுக்கும் உதவாத அந்நிய நாட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

    தற்போது தொடர் கனமழை பெய்ததால் பள்ளிக்கூட கட்டிடங்கள் மற்றும் மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக குந்தலாடி அரசு பள்ளியில் பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த மாமரங்கள் வெட்டப்பட்டு உள்ளது.

    இது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- மா, நாவல், அத்தி உள்ளிட்ட பழ மரங்கள் நிலத்தில் உறுதித்தன்மை கொண்டவை. ஆனால், எதற்கும் பயன்படாத அந்நிய நாட்டு மரங்கள் எளிதில் உடைந்து விழக்கூடியவை. பழ மரங்களை வளர்ப்பது கடினம்.

    பறவை, குரங்கு, அணில் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பயன்படுகிறது. அந்நிய நாட்டு மரங்கள் சில மாதங்களிலேயே பெரியதாக வளர்ந்து விடுகிறது. எதற்கும் பயன்படாது. எனவே, அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்களில் அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்றிவிட்டு பழ மரங்களை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கூடலூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
    • விளைச்சல் மூலம் வருவாய் ஈட்டலாம் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.

    கூடலூர்,

    கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்தது. இதனால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 250-க்கும் மேற்பட்ட மக்கள் தொரப்பள்ளி, புத்தூர் வயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மழையின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக காணப்பட்டதால் கூடலூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இஞ்சி, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டது.

    மேலும் 2 வாரங்களாக சூரிய வெளிச்சம் இல்லாததாலும், தொடர் மழையால் பச்சை தேயிலை விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்தநிலையில் மழையின் தாக்கம் குறைந்து பரவலாக வெயில் காணப்படுகிறது.

    இதன் காரணமாக விவசாய நிலங்களில் தேங்கி நின்ற தண்ணீர் வழிந்தோடியது. மேரக்காய் அழுகின இந்தநிலையில் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகள் மற்றும் பாடந்தொரை, கம்மாத்தி, குற்றிமுற்றி, ஒற்றவயல் உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மேரக்காய் விவசாயம் நடைபெற்று வந்தது.

    இதனிடையே தொடர் கனமழை பெய்ததால் ஏராளமான தோட்டங்களில் பயிரிட்டு இருந்த மேரக்காய் கொடிகள் அழுகி விட்டன. மேலும் சூறாவளி காற்றும் வீசியதால் பல இடங்களில் பந்தல்கள் சரிந்து மேரக்காய் கொடிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    விளைச்சல் மூலம் வருவாய் ஈட்டலாம் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மழையின் தாக்கத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால், அவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    எனவே, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் விவரங்களை கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
    • பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார்.

    கூடலூர்,

    பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சேரம்பாடி மற்றும் பாட்டவயல் பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் இரு பிரிவாக கூடலூரை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டனர்.

    பாட்டவயலில் தொடங்கிய பாத யாத்திரையை கட்சி மாநில பொதுச்செயலாளர் கோஷிபேபி தொடங்கி வைத்தார். இதேபோல் சேரம்பாடியில் தொடங்கி பந்தலூர் வழியாக வந்த பாதயாத்திரையை நிர்வாகி குஞ்சாபி தொடங்கி வைத்தார். நேற்று மாலை 4 மணிக்கு கூடலூர் காந்தி திடலை காங்கிரஸ் கட்சியினர் வந்தடைந்தனர். நிறைவு நிகழ்ச்சிக்கு கே.பி.முகமது மற்றும் நகர தலைவர் சபி ஆகியோர் தலைமை தாங்கினர். கூடலூர் நகராட்சி துணைத் தலைவர் சிவராஜ் உள்பட ஏராளமான கட்சியினர் கலந்துகொண்டனர். இதேபோல் பந்தலூர் அருகே உப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினரின் பாத யாத்திரை நடைபெற்றது. இதற்கு நெல்லியாளம் நகர தலைவர் சாஜி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.
    • அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் அம்ரித் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுகொண்டார்.பின்னர் பல்வேறு அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்து 90 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து பல்வேறு அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் அம்ரித் வழங்கினார். சுதந்திர தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. தூனேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தேசப்பற்று, ஊட்டி அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக மாணவிகள் பங்கேற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான நடன நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிலம்பாட்டம், போதை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சுழல் கலைநிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட மக்களின் கலாசார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கனரக வாகனங்கள் மட்டும் தரைப்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்த பாலமும் சேதமடைந்துள்ளது.
    • கிளன் மார்கன் அணையில் இருந்து நீர் மாயாற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது. குறிப்பாக கேரள மாநிலத்தை யொட்டிய கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.

    இதன் காரணமாக அங்குள்ள புன்னம்புழா, பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    வெள்ளப்பெருக்கால் மாயாற்றின் குறுக்கே கூடலூர்-மசினகுடியை இணைக்கும் தெப்பக்காடு பகுதியில் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கூடலூர்-மசினகுடி இடையே 5 நாட்களுக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டிருந்தது.

    தற்போது வெள்ளம் குறைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. வெளியூர் வாகனங்கள் எதுவும் தொடர்ந்து அந்த பாலத்தின் வழியாக அனுமதிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    முன்னதாக தெப்பக்காடு பகுதியில் இருந்த பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. ஆனால் தொடங்கி பல மாதங்களை கடந்தும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.

    இதனால் மாயாறு தரைப்பாலம் தான் மசினகுடி-கூடலூர் போக்குவரத்துக்கு ஆதாரம். தற்போது மாயாறு தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கனரக வாகனங்கள் மட்டும் தரைப்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்த பாலமும் சேதமடைந்துள்ளது.

    இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தை ராஜூ கூறியதாவது:-

    மாயாறு தரைப்பாலம் வனத்துறைக்கு சொந்தமானது. மழை மற்றும் கனரக வாகன போக்குவரத்தால் பாலம் சேதம் அடைந்துள்ளது. மாயாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததும் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மழை குறைந்த நிலையிலும் கிளன் மார்கன் அணையில் இருந்து நீர் மாயாற்றில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் காணப்படுகிறது. தெப்பக்காடு பாலத்துக்கான அஸ்திவார பணிகளுக்கு குழி தோண்டும் போது, தண்ணீர் சுரக்கிறது. ஆற்றில் தண்ணீர் குறைந்த பின்னரே கட்டுமான பணிகளை தொடங்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சனி மற்றும் ஞாயிறு, சுதந்திர தினவிழா என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி:

    சனி மற்றும் ஞாயிறு, சுதந்திர தினவிழா என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் குளு,குளு பிரதேசங்களை தேடி விடுமுறையை கழித்து வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த 2 தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக நீடித்த மழையால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக இருந்தது. தற்போது மழை ஓய்ந்துவிட்டதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், பைக்காரா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர்.

    சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமாா் 8,500 சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், நேற்று அது 17 ஆயிரமாக அதிகரித்திருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 2 நாட்களில் மட்டும் 25,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.

    அதேபோல, ஊட்டி அரசினா் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை 3,000 போ் வந்திருந்த நிலையில், நேற்று 8,000 போ் வந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்துக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் 15,000 சுற்றுலாப் பயணிகளும், பைக்காரா படகு இல்லத்துக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை 2,500 பேரும், ஞாயிற்றுக்கிழமை 4,500 பேரும் வந்திருந்தனா். ஊட்டி படகு இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படகுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் சிலரும் தங்களது கைகளில் தேசியகொடியை பிடித்து கொண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் குரங்கு நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் ஆழியார் அணைக்கு சென்று அதனை ரசித்து, அங்குள்ள இயற்கை காட்சிகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆழியார் அணை பூங்காவில் தங்கள் குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். இதனால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அதிகளவிலான போக்குவரத்து காணப்பட்டது.

    வால்பாறைக்கு கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் கோவை குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது.
    • கோத்தகிரி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஊட்டி:

    கோத்தகிரி பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை 6 மாதங்கள் பெய்வது வழக்கம். இதை பயன்படுத்தி குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பணப்பயிரான காபி, தேயிலை, குறுமிளகு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    குறிப்பாக காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது.வழக்கமாக மே மாதம் கோடை மழையை தொடர்ந்து காபி செடிகள் பூக்க தொடங்கி விடும். அதன் பின்னர் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து காபி விளைச்சல் இருக்கும்.

    பின்னர் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காபி அறுவடை சீசன் தொடங்கும். இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காபி செடிகள் பூத்துக்குலுங்கி உள்ளதோடு, காய் பிடிக்க தொடங்கி உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி மேலும் விளைச்சலும் அதிகரித்து வருகிறது.

    தற்போது மாமரம் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் காய்கள் கொத்து கொத்தாக காய்த்து உள்ளன. உரிய விலை கிடைக்கும் பட்சத்தில், விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோத்தகிரி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இது காபி செடிகளுக்கு உகந்ததாக உள்ளது. இதன் மூலம் காபி விளைச்சல் அதிகரித்து வருவதுடன், காபி செடிகளில் காய்கள் காய்த்து குலுங்கி வருகிறது. இதனால் காபி பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    ×