என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

3 நாள் தொடர் விடுமுறை: நீலகிரி, வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- சனி மற்றும் ஞாயிறு, சுதந்திர தினவிழா என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி:
சனி மற்றும் ஞாயிறு, சுதந்திர தினவிழா என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் குளு,குளு பிரதேசங்களை தேடி விடுமுறையை கழித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2 தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக நீடித்த மழையால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக இருந்தது. தற்போது மழை ஓய்ந்துவிட்டதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், பைக்காரா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊட்டி அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமாா் 8,500 சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், நேற்று அது 17 ஆயிரமாக அதிகரித்திருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 2 நாட்களில் மட்டும் 25,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனா்.
அதேபோல, ஊட்டி அரசினா் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை 3,000 போ் வந்திருந்த நிலையில், நேற்று 8,000 போ் வந்தனர்.
ஊட்டி படகு இல்லத்துக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் 15,000 சுற்றுலாப் பயணிகளும், பைக்காரா படகு இல்லத்துக்கு 10,000 சுற்றுலாப் பயணிகளும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை 2,500 பேரும், ஞாயிற்றுக்கிழமை 4,500 பேரும் வந்திருந்தனா். ஊட்டி படகு இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து படகுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் சிலரும் தங்களது கைகளில் தேசியகொடியை பிடித்து கொண்டு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் குரங்கு நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் ஆழியார் அணைக்கு சென்று அதனை ரசித்து, அங்குள்ள இயற்கை காட்சிகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆழியார் அணை பூங்காவில் தங்கள் குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். இதனால் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அதிகளவிலான போக்குவரத்து காணப்பட்டது.
வால்பாறைக்கு கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் கோவை குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.






