என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சுய உதவி பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கரிக்கையூர் கிராமத்தில் நடத்தப்பட்டது.
    • தொழில் துவங்க ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு கடனுதவிகள் குறித்து விளக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே அரக்கோடு, கடினமாலா, தேனாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுய உதவி பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கரிக்கையூர் கிராமத்தில் நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு தொழிலுக்கும் வழங்கப்படும் கடனுதவிகள், தேவைபடும் ஆவணங்கள், எவ்வாறு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்புவது குறித்து ஆலோசனை வழங்கபட்டது.

    இப்பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் களபணியளார்கள் சிவகுமார், சுதாகரன், சிவகுமார், தமிழ்செல்வன் தியாகராஜன் ஆகியோருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மற்றும் கனரா வங்கி அலுவலர் யூ.என்.சி.எஸ் தலைமை அலுவலர், களப்பணி அலுவலர்கள் சுய உதவிகுழு பெண்கள் மற்றும் இளைஞர்கள் 37 பேர் கலந்து கொண்டனர். 

    • யானைகள் நடமாட்டம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.
    • குட்டிகளுடன் வரும் யானைகள் குட்டிகளை பாதுகாக்க சாலையில் வரும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்துகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதி.

    இந்த பகுதிகள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது.

    குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு காட்டுயானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக ஊருக்கு மத்தியில் உள்ள சாலைகளில் ஒய்யார நடைபோட்டு சென்றன.

    பின்னர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகள் அங்குள்ள வீடுகளின் முன்பு சில நிமிடங்கள் நின்று பார்த்து விட்டு தெருக்களில் சுற்றி திரிந்தன.

    யானைகள் நடமாட்டம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.

    வீடுகளில் இருந்தபடியே யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். சிறிது நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. அதன்பின்னரே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இதனால் இரவு நேரங்களில் வெளியூர் சென்று வீடு திரும்புவர்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை உள்ளது.

    குட்டிகளுடன் வரும் யானைகள் குட்டிகளை பாதுகாக்க சாலையில் வரும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்துகின்றன. இதனால் அந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர்.

    எனவே, வனச்சரகத்தினா் மலை கிராமத்தில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் கூட்டத்தை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 ரூபாய் வழங்க வேண்டும்
    • தேயிலை தூளுக்கு 150 ரூபாய்க்கு குறையாமல் ஏலம் எடுக்க வேண்டும்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 30 வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கண்டித்து குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சமீப காலத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாத நிலையில் மலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு இதுவரை எந்த தீர்வும் காணப்படாத நிலையில் இன்று உண்ணாவிரத. போராட்டம் நடைபெற்றது.

    அப்போது பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 ரூபாய் வழங்க வேண்டும். தேயிலை ஏல மையத்தில் செயற்கை வணிகத்தை மத்திய அரசு விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேயிலை ஏல மையங்களில் குறைந்தபட்சம் தேயிலை தூளுக்கு 150 ரூபாய்க்கு குறையாமல் ஏலம் எடுக்க வேண்டும்.

    கலப்பட‌ தேயிலை தூளினால் தேயிலை விவசாயம் பாதிக்கப்படுகிறது மற்றும் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும் உட்பட‌ பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும்‌உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    • 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பூண்டு உள்பட காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பூண்டு கொள்முதல் விலை ரூ.100 ஆக குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பூண்டு உள்பட காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் பூண்டிற்கு இந்தியா முழுவதும் வரவேற்பு உள்ளது.

    நீலகிரியில் ஏப்ரல், மே மாதங்களில் நடவு செய்யப்பட்ட வெள்ளை பூண்டு, நடப்பு மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பின்னர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள 4 மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வழக்கத்தை விட வெள்ளை பூண்டு வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக பூண்டு விலை வீழ்ச்சியடைந்து உள்ளது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மத்திய பிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் பூண்டு சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. இதனால் தரமான பூண்டு விதைகள் வாங்குவதற்காக அங்கிருந்து மேட்டுப்பாளையத்திற்கு வந்து பூண்டு வாங்கி செல்கின்றனர். இதனால் கடந்த ஆண்டு ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது. தற்போது, வடமாநில விவசாயிகளுக்கு மானியம் நிறுத்தப்பட்டதால், அவர்கள் இங்கு வரவில்லை.

    இதனால் பூண்டு தேக்கமடைந்ததால், கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. இந்தநிலையில் பூண்டு கொள்முதல் விலை ரூ.100 ஆக குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் மொத்த வியாபாரிகளும் வாங்க ஆர்வம் காட்டாததால், சில விவசாயிகள் பூண்டை அறுவடை செய்து இருப்பு வைத்து உள்ளனர். பூண்டு சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு அதிக செலவாகும் நிலையில், தற்போது விலை குறைந்து இருப்பது நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புலியை நேரில் காண்பது மிக அரிதாகவே இருந்து வருகிறது.
    • புலி மெதுவாக எழுந்து புதருக்குள் சென்றது.

    குன்னூர்,

    முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனம் மற்றும் வன விலங்குகளை காண்பதற்காக வனத்துறை வாகனம் மூலம் தினசரி சவாரி நடைபெற்று வருகிறது.

    இதனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து வனப்பகுதியில் சவாரி செய்யும் போது காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகளை மட்டுமே காண முடியும்.

    புலியை நேரில் காண்பது மிக அரிதாகவே இருந்து வருகிறது. ஆனால், சுற்றுலா பயணிகள் புலியை எப்படியாவது காண வேண்டும் என்ற ஆவலில் வாகனத்தில் சவாரி செல்கின்றனர். பெரும்பாலான நேரத்தில் புலியை காணாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனத்தில் சவாரி சென்றனர். அப்போது சர்க்கிள் ரோடு பகுதியில் சென்ற போது புதருக்குள் புலி ஒன்று படுத்து கிடந்தது. அதை கொசுக்கள் சில மொய்த்து கொண்டிருந்தது. இதனால் தலையை அசைத்தபடி புலி படுத்து கிடந்தது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் புலியை பார்த்து ரசித்தனர். மேலும் சாலையின் கரையோரம் இருந்ததால் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர்.

    சிலர் ஆர்வ மிகுதியால் புலியை பார்த்தவாறு ஒருவருக்கொருவர் பேசினர். இதைக்கண்ட வன ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை சத்தம் போடக்கூடாது என அறிவுறுத்தினர். பின்னர் புலி மெதுவாக எழுந்து புதருக்குள் சென்றது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புலியை பார்த்த திருப்தியுடன் சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகளை கண்டால் சத்தம் போட்டு இடையூறு செய்யக்கூடாது என்றனர்.

    • பல்வேறு வளர்ச்சி பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் 35 ஊராட்சிகள் உள்ளன. இதில் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலூர், பர்லியார், வண்டிச்சோலை, உபதலை, பேரட்டி, எடப்பள்ளி என 6 கிராம ஊராட்சிகள் உள்ளன.

    இந்த ஊராட்சிகளில் நடைபாதை அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டுதல், சாலை சீரமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மேலூர் ஊராட்சி உள்பட சில இடங்களில் வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், வளர்ச்சி பணிகள் சரியாக கண்காணிக்கப்படவில்லை என்பதால் தரம் இல்லாமல் நடைபெற்றதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர். பணியிடை நீக்கம் இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க தவறியதாக குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த சந்திரசேகர், பொறியாளர் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரியில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தட்டப்பள்ளம் சேட்டு பேட்டை பகுதியில் அதிவேகமாக. வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தப்பட்டது.
    • பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

    அரவேணு,

    புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அலுவ லகத்தில் துணைதலைவர் செல்வராஜ். தலைமையில் நடைபெற்றது. அமைப்பின் செயலாளர் ராஜன். அமைப்பின் கடந்த மாதத்தின் செயல்பாடுகள் மற்றும் வரும் எதிர்கால அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.

    அமைப்பின் மசினகுடி உறுப்பினர்கள் அமைப்பின் செயலாளர் ராஜனுக்கு அவரின்.சிறந்த.சேவையை பாராட்டி சால்வைஅணிவித்து கவுரவப்படுத்தினர். அமைப்பின் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    தட்டப்பள்ளம் சேட்டு பேட்டை பகுதியில் அதிவேகமாக. வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேகத்தடை அமைக்க வலியுறுத்துவது, கோத்தகிரி பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் பழுதடைந்த நடைபாதையை சரிசெய்ய வலியுறுத்துவது.

    பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் சில பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது.

    மசினகுடி பகுதியில் வாடகை டாக்சி. வாகன ங்கள் நிறுத்த போதுமான இட வசதி செய்து தர சம்மந்தப்பட்ட அதிகாரி களை வலியுறுத்துவது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் பொருளாளர் மரியம்மா. துணைதலைவர் ஜெயந்தி, இணை செயலாளர் கண்மணி, பி.ஆர்ஓ.முகமது இஸ்மாயில், கிரேஸி, செயற்குழு உறுப்பினர்கள், திரைசா, விக்டோரியா, லலிதா ரோஸ்லின், பீட்டர். ராமகிருஷ்ணா. விபின்குமார், செபாஸ்டின் வினோபா போப் மற்றும் மசினகுடி பகுதியை சேர்ந்த தேவஞானம்.

    அழகப்பன். சிவன் பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார். 

    • தொடக்க விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    • தோடா் பழங்குடியினருக்கு சொந்தமான இடம் மற்றும் ஐந்தாவது மைல் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

    ஊட்டி,

    மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடா், கோத்தா், இருளா், காட்டுநாயக்கா், பணியா், பெட்ட குரும்பா், முள்ளு குரும்பா் போன்ற 7 வகை யான பண்டைய பழங்குடி யினரில் ஒவ்வொரு பழங்குடி யினரும் தனித்தனியான கலாசாரம், உடைகள், இசை, நடனம், வீடு என தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனா்.

    இவா்களின் கலாசா ரத்தை எடுத்துரை க்கும் வகையில் ஊட்டியில் இருந்து கூடலூா் செல்லும் சாலையில் பழங்குடியினா் மாதிரி கிராமம் அமைக்க நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த மாதிரி கிராம தொடக்க விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், இதற்கான தேதி மற்றும் அவரது பயண விவரங்கள் குறித்த தகவல்கள் முடிவு செய்யப்படவில்லை.

    இந்நிலையில் இத்தி ட்டத்தை செயல்படுத்து வதற்காக ஊட்டி தாசில்தார் ராஜசேகா் தலைமையில் நீலகிரி பண்டைய பழங்குடியினா் நல சங்கத் தலைவா் ஆல்வாஸ் மற்றும் அதிகாரிகள் ஊட்டியில் இருந்து கூடலூா் செல்லும் சாலையில் அமைந்துள்ள தலைக்குந்தா பகுதியில் உள்ள தோடா் பழங்குடியினருக்கு சொந்தமான இடம் மற்றும் ஐந்தாவது மைல் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

    ஜனாதிபதி ஊட்டி வருகையையொட்டி மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த ஏற்பாடுகள் தொடா்பான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி திரவுபதி முா்மு பொறுப்பேற்ற பின்னா் தமிழகத்துக்கு முதன்முறையாக வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தெரிகிறது.

    • சத்து மாத்திரைகள் குறித்து விளக்கினார்.
    • மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாபில், கூடலூர் அருகே தர்மகிரி குழந்தைகள் மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கன்வாடி பணியாளர் ஆசியா அனைவரையும் வரவேற்றார். கூடலூர் போஷன் அபியான் வட்டார திட்ட உதவியாளர் பாரதிராஜா தலைமை தாங்கி, ஊட்டச்சத்து, கர்ப்பகால உணவுமுறை, தாய்ப்பால், குடற்புழு நீக்கம், உயிர்சத்து-ஏ திரவம், வயிற்றுபோக்கு, சத்து மாத்திரைகள் குறித்து விளக்கினார். முடிவில் சளிவயல் அங்கன்வாடி பணியாளர் ராஜம்மா‌ நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பயனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • பயிர்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தொடர் பலத்த மழையால் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குற்றிமுற்றி பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. வாழை, பாக்கு மற்றும் பயிர்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பாடந்தொரை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கம்மாத்தி, பாடந்தொரை, முதுமலை ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • காட்டெருமை கீழே விழுந்ததில் நடக்க முடியாத நிலையில் உள்ளது.
    • உடலும் மெலிந்து காணப்படுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்னல் ரெயில்வே நிலையம் பகுதியில் காட்டெருமை கீழே விழுந்ததில் அடிபட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது. உடலும் மெலிந்து நடக்க முடியாத நிலை காணப்படுகிறது

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என சமுக ஆர்வலர்கள் குற்றசாட்டுகின்றனர். எனவே வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மானியங்கள் எவ்வளவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
    • கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே தேனாடு, கெங்கரை, அரக்கோடு மற்றும் கடினமாலா ஊராட்சிகளில் உள்ள சுய உதவி பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் யூ.என்.சி.எஸ் மூலம் கீழ்கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தொழில் மையம் இயக்குனர், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர், வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு புத்தாக்க திட்ட அலுவலர், மற்றும் யூ.என்.சி.எஸ். தலைமை அலுவலர் மற்றும் களப்பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட தொழில் மையம் மூலம் எந்தவிதமான தொழில்களுக்கு தனி நபர் கடன் வழங்கப்படுகிறது என்றும், ஒவ்வொரு தொழிற்கும் எவ்வளவு கடன் கொடுக்கப்படுகிறது அதற்கான மானியங்கள் (25 சதவீதம் மற்றும் 35 சதவீதம்) எவ்வளவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

    வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் மகளிர் சுய உதவி குழுவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. இதில் வங்கி பொது மேலாளர் சண்முகம் சிவா, யூ.என்.சி.எஸ்.கள இயக்குனர்சிங்கராஜ், மகளிர் திட்ட அலுவலர்கள் பரமேஷ்வரி, சுமித்திரா,வாழ்ந்து காட்டுவோம் அமைப்பு அலுவலர்கள் பச்சையப்பன், ஜெயந்தி, களபணி சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×