என் மலர்
நீலகிரி
- தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.
- காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது.
2-வது சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 150 ரகங்களை சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.
தற்போது அந்த செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கடந்த மாதம் சீசன் தொடங்கியும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.
தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். நேற்று காலை முதலே ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் மாடத்தில் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பூங்காவில் மேரிகோல்டு, லில்லியம், டையான்தஸ், பால்சம் உள்ளிட்ட மலர் ரகங்களை சேர்ந்த 10 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடம் மற்றும் பெரணி இல்லம் அருகே புல்வெளியில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.
மேலும் மலர்களை தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மலர்கள் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 2-வது சீசனையொட்டி மலர்கள் பூத்து குலுங்குவதால், பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.
இதேபோல் படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் 70 வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன.
- வாட்டர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் பிடிக்கும் போது, பூச்சிகள் உள்ளிட்டவை சேர்ந்து வருகின்றன.
கோத்தகிரி
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை ஒழிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய கலெக்டராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா முயற்சியின் பேரில் மாவட்டம் முழுவதும் 70 வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டன.
குறிப்பாக கோத்தகிரி பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் இந்த வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு உள்ளன.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை முடித்துவிட்டு கோத்தகிரி மார்க்கமாக பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக அளவு பயன்பட்டு வந்த இந்த வாட்டர் ஏ.டி.எம்.களில் உள்ள குடிநீர் அடிக்கடி சுத்தம் செய்வதில்லை.
தண்ணீரை பாட்டில்களில் பிடிக்கும் போது சிறிய பூச்சிகள் அதனுள் இருந்து வருகிறது.
இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறும்போது, வாட்டர் ஏ.டி.எம்.களில் தண்ணீர் பிடிக்கும் போது, பூச்சிகள் உள்ளிட்டவை சேர்ந்து வருகின்றன. மேலும் கோத்தகிரி டானிங்டன் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் உள்ள வாட்டர் ஏ.டி.எம்.மின் பின் பகுதி சிறுநீர் கழிக்கும் இடமாகவே மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாட்டர் ஏ.டி.எம்.களை பார்வையிட்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.
- காம்பாய் கடை காளவாய் பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
- கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 50 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட காம்பாய் கடை காளவாய் பகுதியில் சுமார் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் தேவைக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 50 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அந்த சிமெண்ட் சாலையின் அருகில் இருக்கும் நீரோடையில் குப்பைகள் அடைந்து அந்த நீர் சிமெண்ட் சாலையின் மேல் செல்கிறது.
இதனால் அந்த சிமெண்ட் சாலை பழுதடைவதுடன் பொதுமக்களும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் அந்த சிமெண்ட் சாலையின் அருகில் இருக்கும் நீரோடையை தூர் வாரி அந்த சாலையை காத்திட வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
- ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஊட்டி
ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரசபை தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் காந்திராஜன், துணைத் தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
ஜாா்ஜ் (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட சவுத்வீக் பகுதியில் சதுப்பு நிலங்களில் சில கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்பகுதியில், இருந்த கால்வாயை மறைத்து ஏற்கனவே ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இரு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தில் கால்வாயை மறைத்து கட்டிடங்கள் கட்டுவதற்கு எவ்வாறு நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியது?
மேலும், வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள உத்தரவு வழங்கிய போதிலும், பணி செய்வதற்கான ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளதால், நகரில் எந்த ஒரு வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். நகராட்சியே அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
துணைத் தலைவா் ரவிக்குமாா்:
ஊட்டி நகராட்சியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாஸ்டா் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் 1,500 சதுர அடிக்குள் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஊட்டி நகராட்சியிலேயே அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு மேல் கட்டிடங்கள் கட்ட மற்ற துறைகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. ஆனால், ஊட்டி நகரில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அதன்பின் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி முறையாக கிடைப்பதில்லை. எனவே 1,500 சதுரடிக்குள் கட்டிடங்கள் கட்ட நகராட்சியே அனுமதி அளிக்கும் முறையை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அனைத்து கவுன்சிலா்களும் மாவட்ட கலெக்டரை நேரில் சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். மேலும், மாஸ்டா் பிளான் சட்டத்தை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு எளிதாக அனுமதி கிடைக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.
முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சிக்கு உள்பட்ட பட்பயா் நிலத்தை டைடல் பாா்க் அமைக்க மாவட்ட நிா்வாகத்துக்கு ஒப்படைக்க கூடாது. இந்த தீா்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி நகராட்சி மாா்க்கெட் கட்டிடங்களை இடித்து கட்டும்போது, தற்போது அங்கு கடை வைத்துள்ளவா்களுக்கே மீண்டும் கடைகள் வழங்க வேண்டும்.
ஆணையா் காந்திராஜன்: ஊட்டி நகராட்சி மாா்க்கெட்டின் ஒரு பகுதி ரூ.29 கோடியில் இடித்து கட்டப்படுகிறது. கீழ் தளத்தில் கடைகளும், மேல் தளத்தில் பாா்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
தம்பி இஸ்மாயில் (திமுக): எனது வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய்களை தூா்வார வேண்டும். மழைக் காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மேலும், எனது வாா்டில் நாய்கள் மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அபுதாகீா் (மநேம): ஊட்டி நகராட்சிப் பணியாளா்களுக்கு காந்தல் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இவை மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் பணியாளா்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, நகராட்சி நிா்வாகம் அந்த குடியிருப்புகளை சீரமைத்து கொடுக்க வேண்டும்.
ரஜினி (காங்கிரஸ்): எனது வாா்டுக்கு உள்பட்ட அலங்காா் பகுதியில் மழை நீா் செல்லும் கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது. தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
- சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஊட்டி
மீன் பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை மத்திய இணை மந்திரி சஞ்சீவ் பல்யான் நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
நான் தற்போது தான் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.1,565 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் மத்திய அரசின் நிதி ஆகும்.
இதேபோல் மத்திய அரசு நிதி மூலம் சென்னையில் கடல்வாழ் தாவரங்களுக்காக புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது ஒரு லட்சத்து 75 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகும். மக்கள் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உழைப்பதால், அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
படுகர் இன மக்களை எஸ்.டி. பிரிவில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி தேயிலை விலை குறைவாக இருப்பதால் பாதுகாப்பு துறை மூலம் தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் செக்சன் பிரிவு பகுதியில் உள்ள 7000 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, கழிப்பறை, கியாஸ் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே இந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாக ஆலோசனை கூட்டத்தில்மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி, குமார், மண்டல தலைவர் பிரவீன், மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், கார்த்தி, ராஜேந்திரன், மற்றும் கதிர்வேல், பாலகுமார், முருகேசன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை இடைவிடாமல் மிகத் தீவிரமாக பெய்தது.
- அவலாஞ்சி ஆகிய பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழையால் பாலாடா, எமரால்டு ஆகிய பகுதிகளில் சரி செய்யப்பட்ட சேதம் அடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ. வேலு, வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவ மழை இடைவிடாமல் மிகத் தீவிரமாக பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் ஒரே இரவில் 300 மி.மீ. மழை பெய்ததால் ஊட்டியில் இருந்து எமரால்டு, அவலாஞ்சி ஆகிய பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் சாலைகளில் தடுப்புச் சுவா்கள் அமைத்து, சீரமைத்தனா்.
பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்போது தற்காலிகமாக சரி செய்துள்ளதாகவும், விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலுடன் தரமான சாலைகள் அமைக்கப்படும். மண்சரிவை தடுப்பது குறித்த மாதிரி திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் கோடப்பமந்து மற்றும் மரப்பாலம் ஆகிய பகுதிகளில் சோதனை முறையில் நெய்லிங் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அப்பகுதியில், தற்போது மண்சரிவு ஏற்படவில்லை. நீலகிரியில் உள்ள 53 சாலைகள் மண்சரிவு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக முதல்வரின் கனவு திட்டமான 23 சதவீத வனப் பகுதியை 33 சதவீத வனப் பகுதியாக விரிவாக்கும் திட்டமான பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் அமைச்சா்கள் எ.வ.வேலு, கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளா் பா.மு.முபாரக் ஆகியோா் மரக்கன்றுகளை நடவு செய்தனா்.
- 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர்.
- யூரியா பேஸ் மற்றும் பொட்டாஷ் கலந்த உரங்களை தங்களது தோட்டங்களில் தேயிலை செடிகளுக்கு இட்டு வருகின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இதை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் கூட்டுறவு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை, தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருமானம் ஈட்டி வருகிறார்கள். தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் ஈரப்பதம் காணப்படுகிறது. மேலும் தொடர் மழை காரணமாக களை செடிகள் வளர்ந்து காணப்பட்டன. இதனால் தேயிலை செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருந்தது.
இதைதொடர்ந்து கடந்த வாரம் முதல் தேயிலை தோட்டங்களில் வளர்ந்து இருந்த களை செடிகளை விவசாயிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது யூரியா பேஸ் மற்றும் பொட்டாஷ் கலந்த உரங்களை தங்களது தோட்டங்களில் தேயிலை செடிகளுக்கு இட்டு வருகின்றனர்.
இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்து உள்ளதால், மண்ணில் ஈரப்பதம் உள்ளது. எனவே, தேயிலை தோட்டத்திற்கு தற்போது உரமிட ஏற்ற தருணம் ஆகும்.
தற்போது தொழிலாளர்களை கொண்டு யூரியா பேஸ் மற்றும் பொட்டாஷ் கலந்த உரத்தை தேயிலை செடிகளுக்கு இட்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு 200 கிலோ கலவை உரம் தேவைப்படுகிறது. உரம் இடுவதால் பச்சை தேயிலை சாகுபடி கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
- ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நாச்சிமுத்து, பர்ன்ஹில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.
- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஊட்டி:
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. என்ஜினீயர். இவரது மகன், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இதற்காக ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நாச்சிமுத்து, பர்ன்ஹில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.
மேலும் அந்த வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து, வீட்டில் வைத்திருந்த நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சோதனை செய்தார்.
அப்போது 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணை அதில், நாச்சிமுத்து தங்கி உள்ள வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
வீடுகளில் ஆளில்லா நேரங்களில் மர்ம ஆசாமிகள் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது.
- கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலைகள் மற்றும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதேபோன்று கூடலூர் 27-வது மைல் சனீஸ்வரன் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து நடுகூடலூர் வரை நிலத்தில் விரிசல்கள் உண்டாகி பொதுமக்களின் வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று கூடலூர் பகுதியில் சேதமடைந்த சாலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடலூரில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் பாடந்தொரை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை பார்வையிட்டார்.
அப்போது, வரும் காலங்களில் மண் சரிவு ஏற்படாமல் இருக்க தடுப்பு கற்களுடன் கூடிய கம்பிவலை பொருத்த உத்தரவிட்டார். தொடர்ந்து 27-வது மைல் பகுதியில் விரிசல் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கை அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து குறைகளை தெரிவித்தனர்.
அத்றகு, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். ஆய்வின்போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் அம்ரித், தலைமை பொறியாளர்கள் பாலமுருகன், சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர்கள் சரவணன், கண்ணன், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வம், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் குழந்தை ராஜ் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி கொடியேற்றி அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக 5-வது முறை பொறுப்பேற்றுள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக 5-வது முறை பொறுப்பேற்றுள்ள பா.மு.முபாரக், ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி கொடியேற்றி அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை,
உதயதேவன், மாவட்ட அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், காந்தல் ரவி, கர்ணன், எல்கில் ரவி, சோலூர் பேரூராட்சி செயலாளர் பிரகாஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமாராஜன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ராம்குமார், மாயன், பேரூராட்சி தலைவர்கள் ஜெககுமாரி, கௌரி, சத்யவாணி, ஹேமமாலினி, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார்,
மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், முத்து, தொமுச கவுன்சில் செயலாளர் ஜெயராமன், எல்.பி.எப் முருகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், மேத்யூஸ், மெல்ரோஸ் செல்வராஜ், வெங்கடேஷ், மார்கெட் ரவி, ராஜூ, ராமன், வெங்கடேஷ், குண்டன், குரூஸ், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கீதா, நாகமணி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், ரகுபதி, வனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக்கிற்கு குன்னூர் நகர தி.மு.க. சார்பில் பஸ் நிலைம் அருகில் நகர தி.மு.க. செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.மு. முபாரக் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொது குழு உறுப்பினர் சதக்கதுல்லா, குன்னூர் நகர்மன்ற தலைவர் ஷிலாகேத்ரின், நகர்மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, நகர திமுக துணை செயலாளர் முருகேஷ், நகர பொருளாளர் ஜெகநாத்ராவ், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார்.
- கேரளாவில் 21 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
ஊட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., பாரத ஒற்றுமையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கி னார்.
தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் கேரள மாநிலத்திற்கு சென்றார்.
கடந்த 11-ந் தேதி தனது பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் பாதயாத்திரை மேற்கொ ண்டு மக்களை சந்தித்து பேசி, அவர்களின் குறைக ளையும் கேட்ட றிந்தார்.
கேரளாவில் 21 நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் மீண்டும் நேற்று தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
நேற்று மாலை அவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக தமிழக மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வந்தார்.
அங்கு அவரை காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் வேனில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து அவர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருக்கு முன்பாக பேண்டு வாத்தியங்கள் முழங்க காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். சிலர் குதிரைகள் மீது அமர்ந்து தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
நந்தட்டி, பள்ளிப்பாடி, செம்பாலா வழியாக கூடலூர் புதிய பஸ்நிலையம் பகுதிக்கு வந்த அவர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் வரும் வழியில் சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை இசைத்தபடியும், நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல்காந்தி கட்சி நிர்வாகிளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் இரவில் கூடலூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வேனிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.
கூடலூரில் பாதயா த்திரையை முடித்து கொண்ட ராகுல்காந்தி இன்று காலை கூடலூரில் இருந்து வேனில் கர்நாடகாவுக்கு சென்றார்.கர்நாடகாவில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் பாத யாத்திரையாக சென்றனர்.
- குன்னூர் சிம்ஸ் பார்க் அருகில் உள்ள ஹை பீல்ட் எஸ்டேட் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கரடி ஒன்று வெளியே வந்தது.
- கரடி சாக்லெட் தொழிற்சாலைக்குள் புகுந்து, சாக்லெட்டுகளை சாப்பிடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
இங்கு ஏராளமான காட்டெருமை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கரடிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.
இந்த வன விலங்குகள் உணவைத்தேடி அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கரடிகள் ஊருக்குள் சுற்றிதிரிவதோடு மட்டுமல்லாமல், வீடுகள் மற்றும் உணவகங்களில் புகுந்து உணவுகளை சாப்பிடுவது, பொருட்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்த நிலையில் குன்னூர் சிம்ஸ் பார்க் அருகில் உள்ள ஹை பீல்ட் எஸ்டேட் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் கரடி ஒன்று வெளியே வந்தது.
நேராக கரடி அங்குள்ள ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்று தொழிற்சாலையின் கதவை உடைக்க முயற்சித்தது. அது திறக்காததால், கரடி தடுப்பு சுவர் மீது ஏறி தொழிற்சாலைக்குள் புகுந்தது.
பின்னர் தொழிற்சாலையில் உள்ள அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த இனிப்புமிக்க 2 கிலோ ஹோம்மெட் சாக்லெட்டுகளை எடுத்து சாப்பிட்டது. பின்னர் சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்து விட்டு வெளியில் சென்றது.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை நேற்று பணிக்கு வந்த தொழிற்சாலையின் உரிமையாளர் சேகர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதற்கிடையே இங்கு நடமாடும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரடி சாக்லெட் தொழிற்சாலைக்குள் புகுந்து, சாக்லெட்டுகளை சாப்பிடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






