என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பொத்தனூர் பெரியார் படிப்பதத்தின் சார்பாக, பாண்டமங்கலம் கடைவீதியில் சமூக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வக்கீல் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பெரியார் படிப்பதத்தின் சார்பாக, பாண்டமங்கலம் கடைவீதியில் சமூக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் சோமசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெருமாள் என்கிற முருகவேல், பொத்தனூர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வக்கீல் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் துணைத் தலைவர் அசேன் மற்றும் அன்பு செல்வகுமார், பகுத்தறிவாளர்கள், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோ, செயலாளர் வீர முருகன், திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
    • மத்திய அரசும் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க, மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இதையொட்டி, மத்திய அரசும் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.

    இந்தியாவில் உற்பத்தி செய்யும் சிறுதானியம் சாமை, தினை, வரகு, கேழ்வரகு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றை சாகுபடி செய்வதில், இந்திய விவசாயிகள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பேசி ஊக்கப்படுத்தி வருகிறார்.

    இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், விவசாயிகள் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியம் உற்பத்தி செய்வதற்கு, வேலை ஆட்கள் கிடைப்பது இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பலமடங்கு உயர்ந்துள்ளதால் உழவுக்கூலி பலமடங்கு உயர்ந்துள்ளது.

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியம் வெளிச்சந்தையில் விலை குறைவாக உள்ளது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பதால் சிறு தானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் சிறுதானியம் உற்பத்தி செய்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே சிறுதானியம் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, சிறுதானியம் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதை, பூச்சிமருந்து, உரம், உழவு செய்வதற்கு கூலி முதலிய வற்றை முழு மானியமாக வழங்க வேண்டும்.

    தற்போது விவசாயம் செய்யும்போது இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறி மழை பொழிவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இனிவரும் காலங்களில் வட்டியில்லா கடனாக அளித்து விவசாயம் செழிக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • ஏப்ரல் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 41.99 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவ லர் (பொ) கவிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டுக்கு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். கடந்த 25-ந் தேதி வரை 674.55 மி.மீ. மழை பெய்துள்ளது. ஏப்ரல் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 41.99 மி.மீ. குறைவாக மழை பெய்துள்ளது.

    2023-ம் ஆண்டில் மார்ச் மாதம் வரை நெல் 10,427 எக்டர், சிறுதானியங்கள் 80,266 எக்டர், பயறு வகைகள் 11,258 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 33,320 எக்டர், பருத்தி 4,415 எக்டர் மற்றும் கரும்பு 10,585 எக்டர் என மொத்தம் 1,50,271 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 640 எக்டர், கத்திரி 600 எக்டர், வெண்டை 421 எக்டர், மிளகாய் 370 எக்டர், மரவள்ளி 17,514 எக்டர், வெங்காயம் 4,654 எக்டர், மஞ்சள் 1,729 எக்டர் மற்றும் வாழை 2,641 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், தோட்டக்க லைத் துணை இயக்குநர் கணேசன், வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கரும்பு முதிர்ச்சி அடைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர்.
    • 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை கரும்பை விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், சேளூர், செல்லப்பம்பாளை யம், கபிலக்குறிச்சி, கபி லர்மலை, பிலிக்கல்பாளை யம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபா ளையம், வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், சிறு நெல்லி கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளி பாளையம், திடுமல், அரசம்பாளையம், கொத்தமங்கலம், ஜமீன் இளம்பள்ளி, குறும்பல மகாதேவி, மாரப்பம்பா ளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    கரும்பு முதிர்ச்சி அடைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை கரும்பை விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை என தயாரிக்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்லங்களை நன்றாக உலர்த்தி 30 கிலோ எடை கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர்.

    தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிய வியாபாரிகள் தமிழகத்திலுள்ள கரூர், திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1180-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிற்பம் ரூ.1,220-க்கும் விற்பனையானது. நேற்று 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ.1250க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1175 விற்பனையானது. உற்பத்தி குறைவின் காரணமாக வெல்லம் விலை உயர்வு அடைந்துள்ளது. இதனால் வெல்லம் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

    • பரமத்தி முகாம் அருகே உள்ள பாலம் அருகே அதிவேகமாக வந்த போது, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
    • பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 24), கீதன் (24). இருவரும் நேற்று இரவு பரமத்தி சென்று விட்டு மீண்டும் முகாமிற்கு திரும்புவதற்காக, பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    இதேபோல் பரமத்தி அருகே வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் வடிவேல் ஆகியோர், மோட்டார் சைக்கிளில் வில்லிபாளைத்தில் இருந்து பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பரமத்தி முகாம் அருகே உள்ள பாலம் அருகே அதிவேகமாக வந்த போது, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காயமடைந்த கீதன், வடிவேல் ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 532 டன் கரும்பு அறவை செய்யப்பட்டது.
    • அறவை செய்யப்பட்ட கரும்பிற்கு முழு கிரைய தொகையும், பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.

    நாமக்கல்:

    மோகனூரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-23-ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 532 டன் கரும்பு அறவை செய்யப்பட்டது. அறவை செய்யப்பட்ட கரும்பிற்கு முழு கிரைய தொகையும், பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.

    வருகிற 2023-24-ம் ஆண்டு கரும்பு அறவைப் பருவத்திற்கு 7 ஆயிரம் ஏக்கர் நடவு மற்றும் 3,500 ஏக்கர் மறுதாம்பு ஆக மொத்தம் 10 ஆயிரத்து 500 ஏக்கர் கரும்பு, ஆலை அங்கத்தினர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 4 லட்சத்து 30 ஆயிரம் டன் கரும்பு அறவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பருவ மழையின் காரணமாக தண்ணீர் வசதி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், புதிய நடவு செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.8,500 மதிப்பிலான விதைக்கரணை மானியமாக பெற்றுக் கொள்ளலாம்.

    புதிய மற்றும் உயர் விளைச்சல் ரகங்களான கோ 86032, கோ 11015, சி.ஓ.சி., 13339 மற்றும் சி.ஓ.வி. 09356 கரும்பு ரகங்களை நடவு செய்து அதிக விளைச்சல் பெறுவதுடன், சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தி அதற்கான உரிய ஆதார விலையையும் பெறலாம்.

    மேற்கண்ட புதிய ரகங்கள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத் தொகையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் எந்திர அறுவடைக்கு ஏற்றவாறு நடவு செய்து அதிக லாபம் பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள கோட்ட கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கபிலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41). தேங்காய் நார்மில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
    • வலசுப்பாளையம் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்கம்பியில் உரசியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள கபிலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 41). இவர் அதே பகுதியில் தேங்காய் நார்மில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை, இவரது தொழிற்சாலைக்காக இருக்கூர் பகுதியில் இருந்து தேங்காய் நார்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கபிலக்குறிச்சி அருகே வலசுப்பாளையம் சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின்கம்பியில் உரசியது.

    இதில் திடீரென லாரியில் இருந்த தேங்காய் நார் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) பெரியசாமி தலையிலான தீயணைப்புத் வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியில் ஏற்றி வரப்பட்ட தேங்காய் நார் மற்றும் லாரியின் உள்பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். 

    • 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 3 வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், அங்கு வேலை செய்பவர்கள் தங்குவதற்காக போடப்பட்ட குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் கொட்டகையில் இருந்த 3 டிராக்டர்கள் கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. இதேபோல் வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் பூங்கொடி வைத்தியநாதன், கரைபாளையம் பகுதியில் பூங்கோதை என்பவரது வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பட்டதாரி பெண் நித்யா என்பவர் கொலை சம்பந்தமாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நித்யாவின் உறவினரான விவசாயி குழந்தைவேல் (வயது 52) என்பவருக்கு சொந்தமான தோட்டம், கரைப்பாளையம் பிரிவு சாலை அருகே உள்ளது. நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தனர். மேலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாயையும் உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

    இதனிடையே அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தோட்டத்துக்குள் தீ எரிவதை பார்த்து, அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வந்து, அங்கு எரிந்து நாசமான பவர் டில்லர் டிராக்டரையும், உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதுபோன்று தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இளம்பெண் நித்யா கொலை சம்பந்தமாக அவரது குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்ட உறவினர் குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமான பவர் டில்லர் டிராக்டருக்கு தீ வைத்தும் தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களை உடைக்கப்பட்டு இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் கொலை செய்து இறந்து போன நித்தியாவின் உறவினர்கள் அவர்கள் சார்ந்த ஜாதி சங்கத் தலைவர்கள் உட்பட பலரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வையப்பமலை அருகே நாகர்பாளையம் நடுப்பாளையத்தில்‌ ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது.
    • இதையொட்டி 4 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டை அடுத்த வையப்பமலை அருகே நாகர்பாளையம் நடுப்பாளையத்தில் ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இதையொட்டி 4 கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ ஓங்காளியம்மன்,ஸ்ரீ மகா கணபதி, ஹீ சப்த கன்னிகள், ஸ்ரீ முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    அப்போது 2 கருடன்கள் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தன. கும்பாபிசேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மண்டல அபிஷேகம் தொடங்கியது.

    • 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
    • வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும். தினசரி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துபந்து, கபாடி, வாள்சண்டை மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

    மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

    இந்த பயிற்சி முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

    மாணவரல்லாத, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரடியாக பதிவு செய்து கொள்லாம் அல்லது dsonmk@gmail.com என்ற இமெயில் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் புகழேந்தி (வயது 21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சிறுமியை கடத்திய புகழேந்தி மீது, பரமத்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். 

    • பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • தனியார் கல்லூரி பஸ் உட்பட 5 வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமலும், பொது‌சாலையில்‌ இயக்கப் பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் மற்றும் கபிலர்மலை பகுதிகளில் நாமக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகன், உமா மகேஸ்வரி மற்றும் பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் தனியார் கல்லூரி பஸ் உட்பட 5 வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமலும், பொதுசாலையில் இயக்கப் பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வரும் வாகனங்களை, பலர் வாடகை வாகனங்களாக இயக்குவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் அளிக்கப்பட்ட புகார் மனு அடிப்படையிலும் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப் பட்டது.

    இதே போல் திடீர் ஆய்வு நடத்தி வரி ஏய்ப்பு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    ×