என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில்சிறுதானியம் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க கோரிக்கை
- 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
- மத்திய அரசும் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.
நாமக்கல்:
நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க, மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. இதையொட்டி, மத்திய அரசும் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யும் சிறுதானியம் சாமை, தினை, வரகு, கேழ்வரகு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றை சாகுபடி செய்வதில், இந்திய விவசாயிகள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பேசி ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், விவசாயிகள் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியம் உற்பத்தி செய்வதற்கு, வேலை ஆட்கள் கிடைப்பது இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பலமடங்கு உயர்ந்துள்ளதால் உழவுக்கூலி பலமடங்கு உயர்ந்துள்ளது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியம் வெளிச்சந்தையில் விலை குறைவாக உள்ளது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரிப்பதால் சிறு தானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் சிறுதானியம் உற்பத்தி செய்வதில் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே சிறுதானியம் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, சிறுதானியம் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதை, பூச்சிமருந்து, உரம், உழவு செய்வதற்கு கூலி முதலிய வற்றை முழு மானியமாக வழங்க வேண்டும்.
தற்போது விவசாயம் செய்யும்போது இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறி மழை பொழிவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இனிவரும் காலங்களில் வட்டியில்லா கடனாக அளித்து விவசாயம் செழிக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






