என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மண்டலத்தில் 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் கே.எம்.எஸ் 2017 - 2018 குறுவை பருவத்திற்கு ஐந்தாம் கட்டமாக 7 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சீர்காழி தாலுக்காவில் அரசூர், வைத்தீஸ்வரன் கோயில். மயிலாடுதுறை தாலுக்காவில் நமச்சிவாயபுரம், திருச்சிற்றம்பலம் மற்றும் குத்தாலம் தாலுக்காவில் நக்கம்பாடி, திருவாலங்காடு, அசிக்காடு ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 30-ந்தேதி முதல் திறக்கப்பட்டது.

    இந்த நிலையங்களில் சன்னரகம் நெல் கொள்முதல் விலை ரூ.1660-க்கும் சாதாரணரகம் (பொதுரகம்) நெல் கொள்முதல் விலை ரூ.1600- க்கும் விற்பனை செய்து விவசாயிகள் தங்களின் நெல்லுக்குரிய தொகையினை மின்னணு பண பரிவர்த்தனை முறையில் பெற்று பயனடையலாம். 

    இந்த தகவலை கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான சமூக தணிக்கைக்குப்பின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் 2017-18ம் ஆண்டுக்கான சமூக தணிக்கைக்குப்பின் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமபிரமுகர் கேசவன் தலைமை தாங்கினார். இதில் வட்டார வள அலுவலர் சமூக தணிக்கையாளர் வெங்கட்ராஜீலு கலந்து கொண்டு 2017-18ம் ஆண்டில் ரூ.12 லட்சம் செலவில் செய்யப்பட்ட 5 பணிகளின் தணிக்கை செய்யப்பட்ட பணி பதிவேடுகள், விவரங்கள் வாசித்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்தார். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 51 மனுக்கள் பெறப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் பணிதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊராட்சி செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

    கொழையூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு கிராம பிரமுகர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். வட்டார வள அலுவலர் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு ரூ.13 லட்சம் செலவில் செய்யப்பட்ட 6 பணிகளின் தணிக்கை செய்யப்பட்ட பணி பதிவேடுகளை பார்வைக்கு வைத்தார். கூட்டத்தில் 10 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பணிமேற்பார்வையாளர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊராட்சி செயலாளர் அன்பரசி நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி அருகே அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறில் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமம் மேலபள்ளக்கொல்லையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சிவசங்கரி (வயது25). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் இருவருடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசங்கரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த செம்பனார்கோவில் இன்ஸபெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவசங்கரிக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ., தேன்மொழி தனி விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    நாகை மாவட்டத்தில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருமருகல்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் பருவமழை பெய்யாமல் வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திருமருகல், ஆதீனக்குடி, குருவாடி, அண்ணாமண்டபம், திருப் புகழுர், திருகண்ணபுரம், திருசெங்காட்டாங்குடி, சீயத்தமங்கை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் பலத்தமழை பெய்தது. 

    இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதேபோல் வேதாரண்யம் சீர்காழி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றுஇரவு மழை பெய்தது. இந்த மழை சம்பா நேரடி நெல்விதைப்பு செய்துள்ள விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
    செம்பனார்கோவில் அருகே சுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள துங்கபாலஸ்தனாம்பிகா உடனாகிய காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால்கட்டப்பட்டது.

    வடமொழியில் காத்ர சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படும் பெருமான் சுயம்புலிங்கம் ரூபத்தில் பெரு உடையானாக காட்சி அளிக்கிறார். இதில் அக்‌ஷர மாலையும், நீலோத்பல மலரையும், கிளியையும் தன் கரங்களில் ஏந்தி இளம் மங்கையாக துங்கபாலஸ்தனாம்பிகா அருள் பாலிக்கிறாள். இது கார்த்திகை நட்சத்திரத் திற்குரிய கோவிலாகும், எல்லா கோவில்களிலும் அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளிப்பார். ஆனால் இந்த கோவிலில் மட்டும்தான் நந்தியுடன் காட்சிதருவது பெரும் சிறப்பாகும். இது பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கிவருகிறது.

    இவ்வூர் பண்டைய காலத்தில் கஞ்சாறு என்று புகழ் பெற்ற கஞ்சாநகர கிராமம் 63 நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சனார் என்ற சிவனடியாரின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைந்த ஊர் என்பது சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து தெரிய வருகிறது. இந்த கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள துங்க பாலஸ்தனாம்பிகை உடனாகிய காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று காலம் யாகசாலை பூஜை செய்து நேற்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வைத்தியநாதன், செல்லம் ஸ்ரீகண்டன், மருத்துவர் விமலா, ஆடிட்டர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் சம்மந்த சிவாச்சாரியாவுடன் வேத விற்பனர்கள் சிவ ஆகமங்கள் முறைப்படி மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு நடந்தது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ வானத்தில் கருடன்கள் வட்டமிட புனித நீரை விமானத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் கருவறையில் உள்ள மஹா சுயம்பு லிங்கத்துக்கு மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க வங்கி தலைவர் சுப்பிரமணியன் மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    எருக்கூர் வாய்க்காலில் தண்ணீர் விட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் கழுதை வாய்க்கால் உள்ளது. இதன்மூலம் எருக்கூர், அரசூர், கூத்தியாம் பேட்டை, மணலகரம், மாத்தால மடையம், தெற்குவெளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 75, ஏக்கர் நிலபரப்பு பாசனவசதி பெற்று வருகின்றது.

    தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் இதுவரை கடைமடை பகுதியான எருக்கூர் கழுதை வாய்க்காலில் தண்ணீர் வராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து எருக்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், எருக்கூர் கிராமத்தில் முக்கிய பாசன வாய்க்காலாக கழுதை வாய்க்கால் உள்ளது. இதன்மூலம் எருக்கூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வருமோ வராதோ என்ற அச்சத்துடன் சாகுபடி பணியை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

    இது குறித்து பொதுபணி துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்படையும். எனவே எருக்கூர் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

    ‘மரியே வாழ்க’ என்ற கோ‌ஷத்துடன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். #velankannimathachurch

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான ஆன்மிக சுற்றுலா தலமாகும். கீழை நாடுகளின் ‘‘லூர்து நகர்’’ என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. இங்கு அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்.

    கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘‘பசிலிக்கா’’ என்ற அந்தஸ்து, வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உண்டு. இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் வங்க கடல் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும்.

    வேளாங்கண்ணி ஆரோக்கியமாதாவின் பிறந்த நாள் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அன்னை ஆரோக்கியமாதாவின் தேர் பவனி நடைபெற்றது. அப்போது பெண்கள் தேரை தூக்கி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதனைத்தொடர்ந்து மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பில் இருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    கொடி ஊர்வலம் தேவாலய வளாகம், கடற்கரை சாலை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் உள்ள 90 அடி உயர கொடி கம்பத்தில் 6.40 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், கொடியை புனிதம் செய்தார்.

    கொடியேற்றத்தின்போது பேராலயத்தின் அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஒளிர விடப்பட்டன. அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘‘மரியே வாழ்க’’ என சரண கோ‌ஷம் எழுப்பினர். கொடியேற்றத்தையொட்டி வாணவேடிக்கையும் நடைபெற்றது. கொடியேற்றத்தை காண இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்திருந்தனர்.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், பேராலய அதிபர் பிரபாகர், உதவி அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் ஆண்டோ ஜேசுராஜ், டேவிட் தன்ராஜ், வேளாங்கண்ணி முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் தாமஸ் ஆல்வா எடிசன், ஜூலியட் அற்புத ராஜ், கிங்ஸ்லி ஜெரால்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் 8-ந்தேதி (சனிக்கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. #velankannimathachurch

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்றாகும். புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா பேராலய ஆண்டு திருவிழாவாக ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பேராலய ஆண்டு திருவிழா இன்று(புதன்கிழமை) கொடியேற்றம் நடக்கிறது. இதை முன்னிட்டு மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியுடன் பேராலய முகப்பில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

    இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்பு ரோஸ் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்கு தந்தைகள் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொள்கின்றனர்.

    விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், கொங்கனி, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. மேலும் தினமும் மாலையில் தேர்பவனி நடைபெறுகிறது. இந்த தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடையும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர்.

    விழாவை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வேளாங் கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    நிலப்பிரச்சினையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 34). இவருடைய சித்தப்பா தமிழ்மணி (62). தன்னுடைய நிலத்தை வேதாரண்யம் பகுதி முதலியார்தோப்பைச் சேர்ந்த தர்மராஜ் (45) என்பவரிடம் விலைபேசி முன்பணம் வாங்கியுள்ளார்.

    பாக்கி பணத்தை கொடுத்து தர்மராஜ் நிலத்தை பதிவு செய்து கொள்ளவில்லை. இதனால் முன்பணத்தை தர்மராஜனிடம் திருப்பி கொடுப்பதற்காக தமிழ்மணி, பிரபாகரன் மற்றும் சிலர் சென்றுள்ளனர்.

    அப்போது தமிழ்மணி தரப்பிற்கும் தர்மராஜ் தரப்பினருக்கும் தாகராறு ஏற்பட்டதில் தர்மராஜ் கத்தியால் பிரபாகரனை வெட்டியுள்ளார்.

    தர்மராஜனை, பிரபாகரன், தமிழ்மணி, சேகர், ஆனந்தன் ஆகிய நால்வரும் சேர்ந்து கம்பால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பிரபாகரன், தர்மராஜ் இருவரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதில் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் தர்மராஜ் மீதும், தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் தமிழ்மணி, சேகர், ஆனந்தன், பிரபாகரன் ஆகிய 4 பேர் மீதும் தனித்தனியே வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் வழக்குப்பதிவு செய்தார். இதில் தமிழ்மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஆஞ்சநேயர் கோவிலில் கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரெயிலடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பட்டாச்சாரியார் இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது, கோவில் கருவறை முன்பு உள்ள இரும்பு கம்பியிலான கதவு பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டிருந்த ½ கிலோ எடை உள்ள வெள்ளி பாதங்கள், ஜடாரி ஆகிய பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    கோவிலை சுற்றிப்பார்த்த போது மர்மநபர்கள் கோவிலின் முன்புறம் உள்ள மதில்கள் வழியாக இறங்கி இருப்பதும், தெரியவந்ததும், மேலும் அவர்கள் கோவிலுக்குள் வந்து கதவு பூட்டை உடைத்த போது அங்கிருந்த அலாரம் மணி அடித்ததால் உடனே அலாரம் மணி மின் இணைப்பை துண்டித்து விட்டு, அதை தண்ணீர் உள்ள தொட்டியில் போட்டு மூழ்கடித்ததும் தெரியவந்தது.

    மேலும் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் வயர் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. கோவிலின் பின்புறம் உள்ள சுவர் மேல் பொருத்தப்பட்டிருந்த கம்பிகளை ஆள் நுழையும் அளவுக்கு வளைத்து திருடிய பொருட்களை கயிறு கட்டி அதன் வழியாக எடுத்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    மயிலாடுதுறை அருகே பினாயிலை குடித்து தபால் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கீழபட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமைதிராஜ் (வயது50). இவர், மயிலாடுதுறை அருகே வடகரை கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் புறநிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அமைதிராஜ், திடீரென பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கக்தில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அமைதிராஜிடம், தபால் துறை அதிகாரி ஒருவர் சேமிப்பு கணக்கு மற்றும் இன்சூரன்ஸ் கணக்கு தொடங்க வாடிக்கையாளர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும், அதனால் வேலைப்பளு அதிகரித்ததால் மன வேதனை அடைந்த அமைதிராஜ் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பினாயிலை குடித்து தபால் ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    சீர்காழி அருகே 700 சாராயம் பாக்கெட் கடத்தி வந்த வாலிபர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே நல்லாத்தூரில் இருந்து சீர்காழி நோக்கி ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சீர்காழி அடுத்த வழுவகுடி என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்து அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி சென்றனர்.

    இதற்கிடையே விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் அருகில் சாராய பாக்கெட்டுகள் சிதறி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளில் இருந்த 700 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த பாக்கெட்டுகளில் பாண்டி ஐஸ் என்று எழுதப்பட்டு இருந்தது. இதனால் காரைக்காலில் இருந்து அந்த வாலிபர் சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த போது விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து காயம் அடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தனது பெயர் குமார் என்றும் சொந்த ஊர் மங்கைநல்லூர் அருகே உள்ள கழனிவாசல் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குமாரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருந்த போலீசாரிடம் குமார், தனது பெயரை சாமி என்றும், சொந்த ஊர் மன்னம்பந்தல் என்றும் தெரிவித்துள்ளார்.

    பெயரை மாறி மாறி போலீசாரிடம் தெரிவித்ததால் வாலிபர் குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    ×