என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கடைமடை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால் தான் சம்பா சாகுபடியை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #MetturDam

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம், வடமழை, மணக்காடு, மகாராஜபுரம், செட்டிபுலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைமடை பாசன பகுதி கிராமங்களுக்கு வெண்ணாற்றில் தண்ணீர் சரிவர வராததால் சம்பா சாகுபடி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை 4 முறை நிரம்பிய நிலையில் கடைமடைக்கு கூடுதலாக தண்ணீர் வரும் என்று விவசாயிகள் நினைத்து இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் ஹெக்டரில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். ஒரு முறை மட்டுமே வந்த தண்ணீரை வயல்களில் வைத்து நெற்பயிர்கள் முளைத்து விட்டன. நெற்பயிர்கள் முளைத்து 25நாள் ஆகிய நிலையில் ஆற்றில் தண்ணீர் வராததால் சம்பா கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது கடைமடை பாசனத்திற்கு வந்த ஆற்று நீர் நின்று விட்டது. ஆற்றில் தண்ணீர் மிக குறைவாக உள்ளதால் மோட்டார் மூலம் இறைத்து கூட விவசாயம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர். எனவே உடனடியாக தமிழக அரசு கடைமடை பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டால் தான் சம்பா சாகுபடியை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக சம்பா சாகுபடி பொய்த்து விட்ட நிலையில் இந்த ஆண்டாவது சம்பா சாகுபடி இருக்கும் என்று நினைத்த நிலையில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டும் சம்பா சாகுபடி பொய்து விடும் நிலை எற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். #MetturDam

    இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. #ThirumuruganGandhi
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்திய ஒருமைப்பாட்டுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இரு சமூகத்தினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் மீது திருவெண்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    இதற்காக வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமுருகன் காந்தி சீர்காழிக்கு அழைத்து வரப்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி யுவராஜ் உத்தரவிட்டார்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் 161-வது பிரிவின் கீழ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    பா.ஜ.க.வுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய மாணவி சோபியா மீதான வழக்கு கருத்துரிமைக்கு எதிரானது. எனவே அந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThirumuruganGandhi
    சீர்காழி அருகே டியூசன் படிக்க சென்ற மாணவனை கும்பல் காரில் கடத்தி சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி கீழ தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு மணிகண்டன்(11) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த நிலையில் நேற்று மாலை மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஆசிரியரிடம் டியூசன் படிக்க நடந்து சென்று கொண்டிருந்தான்.

    அப்போது ஒரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென, மாணவன் மணிகண்டனை குண்டுக் கட்டாக தூக்கி சென்றனர். பின்னர் அவர்கள் மாணவனின் வாயை பொத்தி, காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினான். ஆனால் காரில் பின் இருக்கையில் இருந்த 2 பேர், மணிகண்டனை கெட்டியாக பிடித்து கொண்டனர்.

    இந்த நிலையில் கார், கொள்ளிடம் முக்கூடம் பகுதியில் சீர்காழி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ரோட்டோரத்தில் நிறுத்தி, கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுநீர் கழித்தார்.

    அந்த சமயத்தை பயன் படுத்தி மணிகண்டன், திடீரென காரில் இருந்த மற்றொருவரின் கையை கடித்து விட்டு மின்னல் வேகத்தில் காரில் இருந்து தப்பி ஓடினான்.

    இதை சற்றும் எதிர் பார்க்காத கடத்தல் கும்பல், தப்பி ஓடிய மணிகண்டனை பிடிக்க விரட்டி சென்றனர்.

    ஆனால் மணிகண்டன் சத்தம் போட்டப்படி ரோட்டில் ஓடியதால் கடத்தல் கும்பல் பதட்டம் அடைந்தனர். உடனே சுதாரித்து கொண்ட அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு தப்பி சென்றனர்.

    இதையடுத்து கடத்தல் சம்பவம் குறித்து மணிகண்டன், அட்டகுளம் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாணவனை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவன் போலீசாரிடம் ‘தன்னை கடத்தியவர்கள் 4 பேர் கும்பல்’ என்றும், காரில் செல்லும் போது செல்போனில் தன்னை படம் பிடித்ததாகவும் தெரிவித்தான்.

    இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கும்பல் கடத்தி சென்றதா? அல்லது மாணவனே கடத்தல் நாடகம் நடத்துகிறானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவெண்காடு அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அடுத்த சிறுவாளி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணகி (வயது 40). இவர் நேற்று தனது உறவினரான நந்தினி (20) என்ற இளம்பெண்ணுடன் மொபட்டில் திருவெண்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். வண்டியை நந்தினி ஓட்டி சென்றார்.

    அப்போது நாங்கூர் முக்கூட்டு என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக சென்ற நெல் அரவை எந்திரம் ஏற்றிச்சென்ற லாரியை நந்தினி முந்தி சென்றார். அந்த சமயத்தில் எதிரே லோடு ஆட்டோ வந்ததால் திடீரென அவர் பிரேக் பிடித்தார்.இதில் வண்டியின் பின்னால் இருந்த கண்ணகி தூக்கி வீசப்பட்டு லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினார். இதில் அவரது இடுப்பு, கை, கால் நசுங்கியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை சிசிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம் அருகே கடையில் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மந்தகரை மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 50). இவர் அதே பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 3-ந் தேதி இரவு அவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை கடைக்கு லாரியில் பொருட்கள் வந்ததால் அவைகளை வாங்கி வைக்க சென்றார். அவர் கடையை திறந்து உள்ளே சென்ற போது மாடி பகுதியில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை ஜாகீர் உசேன் தொழிலாளர்களுடன் சென்று மடக்கி பிடித்து குத்தாலம் போலீசில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அவர் ராஜகோபாலபுரம், ராஜா காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செல்வ ரத்தினம் (23) என்று தெரிய வந்தது. அவர் கடையில் கொள்ளையடிக்க பூட்டை உடைத்து மாடியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மதி வாலிபர் செல்வரத்தினத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கோடியக்கரையில் மீனவர்கள் படகுகள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SrilankaFishermen
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். குறிப்பாக நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத் துறை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு படகுகளில் சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தாக்குவதும், துப்பாக்கியால் சுடுவதும், மீன்களை கடலில் கொட்டுவதும் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மேலும் சில நேரங்களில் இலங்கை மீனவர்களும், நாகை மீனவர்களை தாக்கி அட்டூழியம் செய்து வரும் சம்பவமும் தொடர்கிறது. இதுபற்றி தமிழக கடலோர காவல் படை அதிகாரிகள், மற்றும் கலெக்டரிடமும் மீனவர்கள் புகார் தெரிவித்தும் பலன் இல்லாமல் இருந்து வருகிறது.

    பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வரும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் கடலுக்கு சென்ற ஆறுக்காட்டுத்துறை மீனவர்களின் படகுகள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சொந்தமான 2 படகுகளில் 9 மீனவர்கள் கோடியக்கரை கடலில் மீன் பிடிக்க நேற்று மதியம் புறப்பட்டனர். ஒரு படகில் 5 பேரும், மற்றொரு படகில் 4 பேரும் என சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவில் கோடியக்கரையில் இருந்து 15 நாட்டிங்கல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது இலங்கை மீனவர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் 3 படகுகளில் வந்தனர். அவர்கள், ஆறுக்காட்டுத்துறை மீனவர்களை பார்த்ததும் ஆத்திரம் அடைந்து படகு அருகே வந்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் வந்த 2 படகுகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசினர். இதில் படகுகள் மீது பட்டு வெடித்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுக்காட்டுத்துறை மீனவர்கள் திகைத்து நின்றனர். பின்னர் இலங்கை மீனவர்கள், ஆறுக்காட்டுத் துறை மீனவர்களின் படகுகளில் ஏறி அங்கிருந்த மீன்பிடி வலைகள் மற்றும் பொருட்களை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர். இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதமானது.

    மேலும் படகின் ஒரு பகுதி சேதமானது. பின்னர் அவர்கள் கைகளால் மீனவர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தாங்கள் வந்த படகுகளில் சென்று விட்டனர்.

    இலங்கை மீனவர்களின் தாக்குதலால் நிலைகுலைந்து போன ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் பின்னர் படகுகளில் இன்று அதிகாலை கரை திரும்பினர். இந்த சம்பவம் பற்றி கடலோர காவல்படை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். #TNFishermen #SrilankaFishermen
    குத்தாலம் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்து நீலகிரியை சேர்ந்த கிளினர் பரிதாபமாக இறந்தார்.
    குத்தாலம்:

    நீலகிரி மாவட்டம் பந்தளம் அருகே உள்ள நெல்லியானம் கொளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேலு மகன் சுரேஷ்(வயது 31). இவர் லாரி கிளனர் ஆவார். அதே பகுதி போட்டியாடா சிந்தகை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மூர்த்தி (28). இவர் லாரி டிரைவர் ஆவார்.

    நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வைக்கோல் ஏற்றுவதற்காக லாரியில் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பாலையூர் பரமசிவ புரத்துக்கு வந்தனர்.

    பரமசிவபுரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள குறுகலான சாலையில் சென்றபோது, எதிர்புறத்தில் வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை கடந்து செல்ல முயன்றபோது, அதில் இருந்த வைக்கோல் இடையூறாக இருந்தது.

    இதையடுத்து அந்த லாரியில் இருந்த வைக்கோலை கிளினர் சுரேஷ் இரும்பு கம்பியால் ஒதுக்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி கீழே விழுந்த சுரேஷ், லாரியின் சக்கரங்களில் சிக்கினார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    திருக்குவளை அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இதில் வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் திருக்குவளை அருகே மடப்புரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் குணாளன் (வயது 40). விவசாயி. இவர் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று குணாளன் மற்றும் அவருடைய மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் குணாளன் கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் வேலைக்கு சென்று இருந்ததால் வீடு தீப்பிடித்து எரிந்தது தெரியவில்லை. இதனால் தீ வீடு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. மேலும், வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து அருகில் உள்ள வயலில் விழுந்தது.

    இந்த தீவிபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து திருக்குவளை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அரசின் நிவாரண உதவியை வழங்கினர். 
    சீர்காழி அருகே பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    இதில் அவரது பெயர் சுந்தர் என்கிற பாலசுந்தர் (வயது 23) என்றும் சீர்காழி பெருந்தோட்டம் மெய்யான் தெருவை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

    இவர் மீது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, கொள்ளிடம், பொறையாறு ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான பாலசுந்தரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 23 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து 450 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    தமிழகத்தில் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் செயல்பட்ட போதிலும் புதுச்சேரி மதுபானம் மற்றும் சாராயம் தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்த போதிலும் மது கடத்தல் தொடர்ந்து வருகிறது.

    சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் திருவெண்காடு போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர் அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து மோடடார் சைக்கிளில் தனித்தனியாக வந்த 2 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் புதுச்சேரி சாராய பாக்கெட்டுகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 450 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காரைக்கால் வருச்சிக்குடியை சேர்ந்த மாரிமுத்து (வயது 34). விவேக் (22) என்று தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து சாராய பாக்கெட்டுகளை யாருக்காக கடத்தி வந்தனர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே திருமணமான 2 மாதத்தில் புதுபெண் மர்மமாக இறந்த சம்பவம் தலைஞாயிறில் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையை அடுத்த ராதா நல்லூரை சேர்ந்த குழந்தைவேல் என்பவர் மகள் ரம்யா (வயது 33). இவருக்கும், தலைஞாயிறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த ரம்யா நேற்று மாலை கணவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரில் மணல் மேடு (பொறுப்பு ) இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து ரம்யா சாவில் மர்மம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ரம்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.

    ரம்யா திருமணமான 2 மாதத்தில் மர்மமான முறையில் இறந்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருமணமான 2 மாதத்தில் புதுபெண் மர்மமாக இறந்த சம்பவம் தலைஞாயிறில் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.

    வேதாரண்யம் அருகே இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடையை சேர்ந்த பழனி என்பவர் மகள் சரஸ்வதி (வயது 21). இவருக்கும், கத்தரிப்புலத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சரஸ்வதி கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே சரஸ்வதிக்கும், செம்போடையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் செல்வகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நெருங்கி பழகி வந்த நிலையில் செல்வகுமாருக்கும், அவரது உறவு பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்த சரஸ்வதி தன்னை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி செல்வகுமார் ஏமாற்றிவிட்டதாக வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    பின்னர் அவர் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் வர்ஜினியா வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

    ×