என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே மாணவனை காரில் கடத்தி சென்ற கும்பல்
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி கீழ தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலா. இவர்களுக்கு மணிகண்டன்(11) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மணிகண்டன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் நேற்று மாலை மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஆசிரியரிடம் டியூசன் படிக்க நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது ஒரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென, மாணவன் மணிகண்டனை குண்டுக் கட்டாக தூக்கி சென்றனர். பின்னர் அவர்கள் மாணவனின் வாயை பொத்தி, காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடினான். ஆனால் காரில் பின் இருக்கையில் இருந்த 2 பேர், மணிகண்டனை கெட்டியாக பிடித்து கொண்டனர்.
இந்த நிலையில் கார், கொள்ளிடம் முக்கூடம் பகுதியில் சீர்காழி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ரோட்டோரத்தில் நிறுத்தி, கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுநீர் கழித்தார்.
அந்த சமயத்தை பயன் படுத்தி மணிகண்டன், திடீரென காரில் இருந்த மற்றொருவரின் கையை கடித்து விட்டு மின்னல் வேகத்தில் காரில் இருந்து தப்பி ஓடினான்.
இதை சற்றும் எதிர் பார்க்காத கடத்தல் கும்பல், தப்பி ஓடிய மணிகண்டனை பிடிக்க விரட்டி சென்றனர்.
ஆனால் மணிகண்டன் சத்தம் போட்டப்படி ரோட்டில் ஓடியதால் கடத்தல் கும்பல் பதட்டம் அடைந்தனர். உடனே சுதாரித்து கொண்ட அவர்கள் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து கடத்தல் சம்பவம் குறித்து மணிகண்டன், அட்டகுளம் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து மாணவனை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவன் போலீசாரிடம் ‘தன்னை கடத்தியவர்கள் 4 பேர் கும்பல்’ என்றும், காரில் செல்லும் போது செல்போனில் தன்னை படம் பிடித்ததாகவும் தெரிவித்தான்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பணம் பறிக்கும் நோக்கில் மாணவனை கும்பல் கடத்தி சென்றதா? அல்லது மாணவனே கடத்தல் நாடகம் நடத்துகிறானா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.