search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sembanarkoil temple festival"

    செம்பனார்கோவில் அருகே சுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள துங்கபாலஸ்தனாம்பிகா உடனாகிய காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால்கட்டப்பட்டது.

    வடமொழியில் காத்ர சுந்தரேஸ்வரர் என்று அழைக்கப்படும் பெருமான் சுயம்புலிங்கம் ரூபத்தில் பெரு உடையானாக காட்சி அளிக்கிறார். இதில் அக்‌ஷர மாலையும், நீலோத்பல மலரையும், கிளியையும் தன் கரங்களில் ஏந்தி இளம் மங்கையாக துங்கபாலஸ்தனாம்பிகா அருள் பாலிக்கிறாள். இது கார்த்திகை நட்சத்திரத் திற்குரிய கோவிலாகும், எல்லா கோவில்களிலும் அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளிப்பார். ஆனால் இந்த கோவிலில் மட்டும்தான் நந்தியுடன் காட்சிதருவது பெரும் சிறப்பாகும். இது பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கிவருகிறது.

    இவ்வூர் பண்டைய காலத்தில் கஞ்சாறு என்று புகழ் பெற்ற கஞ்சாநகர கிராமம் 63 நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சனார் என்ற சிவனடியாரின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைந்த ஊர் என்பது சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து தெரிய வருகிறது. இந்த கஞ்சாநகரத்தில் அமைந்துள்ள துங்க பாலஸ்தனாம்பிகை உடனாகிய காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று காலம் யாகசாலை பூஜை செய்து நேற்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வைத்தியநாதன், செல்லம் ஸ்ரீகண்டன், மருத்துவர் விமலா, ஆடிட்டர் கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் முன்னிலையில் சம்மந்த சிவாச்சாரியாவுடன் வேத விற்பனர்கள் சிவ ஆகமங்கள் முறைப்படி மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு நடந்தது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் புடை சூழ வானத்தில் கருடன்கள் வட்டமிட புனித நீரை விமானத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் கருவறையில் உள்ள மஹா சுயம்பு லிங்கத்துக்கு மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க வங்கி தலைவர் சுப்பிரமணியன் மற்றும் கிராம மக்கள் கலந்துக் கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    ×