என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    கொள்ளிடம் அருகே வெடிகுண்டு வழக்கில் 2 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூர் பஸ் நிலையம் அருகில் கடந்த 2018-ம் ஆண்டு இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மோட்டார் சைக்கிள் நின்றதும் பின்னால் அமர்ந்திருந்த 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மட்டும் போலீசில் சிக்கினார்.

    அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரை சேர்ந்த கலைவாணன்(30) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 2 வெடிகுண்டுகள் இருந்தது. 2 குண்டுகளும் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் ஆகும்.

    வெடிகுண்டுகளை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கலைவாணனை கைது செய்து கொள்ளிடம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 வெடிகுண்டுகளையும் எருக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு பின்புறம் 200 மீட்டர் தூரத்தில் வயல் பகுதியில் பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

    தப்பி ஓடியவர்கள் இருவரும் பாடலீஸ்வரன், விஜய் என்பது தெரிய வந்தது. இவர்களில் விஜயை சம்பவம் நடந்த சில தினங்களில் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரான திருவாரூர் மாவட்டம் பேரளம் திருமீயச்சூர் பகுதியை சேர்ந்த பாடலீஸ்வரன்(41) என்பவரை கொள்ளிடம் போலீசார் தேடி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடலீஸ்வரன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் பாடலீஸ்வரன், மங்கைநல்லூர் பகுதியில் நடமாடுவதாக கொள்ளிடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் ஆகியோர் அங்கு சென்று பாடலீஸ்வரனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். பாடலீஸ்வரன் மீது பேரளம், சிதம்பரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    நாகூர் பெருமாள் வடக்கு வீதியில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    நாகூர்:

    நாகையை அடுத்த நாகூரில் பெருமாள் வடக்கு வீதி தெரு உள்ளது. இந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெரு கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. மேலும் இந்த தெரு வழியாக பழைய பஸ் நிலையம், தர்கா, கடைத்தெரு ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் தங்களது வாகனங்களில் செல்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இந்த தெரு வழியாக செல்லும் சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூர் பெருமாள் வடக்கு வீதியில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி வழிபாடு வருகிற 1-ந்தேதி நடக்கிறது.
    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதன்கோவில் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவானுக்கு தனிசன்னதி உள்ளது. ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேதுபகவானை வழிபட்டால் குடும்ப பிரச்சினைகள், குழந்தைபேறு, திருமணத்தடை, நீதிமன்ற வழக்குகள், பித்ருக்கள் தோஷம் உள்ளிட்டவை நீங்குவதாக ஐதீகம்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட கேதுபகவான் 1½ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவார். முன்னொரு காலத்தில் அசுரர்களும், தேவர்களும் இணைந்து திருபாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து உண்டால் நீண்ட காலம் வாழலாம் என்ற எண்ணத்தில் பாற்கடலில் அமிர்தம் எடுக்க முடிவு செய்தனர்.

    அப்போது பாற்கடலை கடைய வாசுகி என்ற பாம்பை மத்தாக பயன்படுத்தினார். பாற்கடலை கடைந்த பின்னனர் உடல் முழுவதும் காயம்பட்ட வாசுகி பாம்பை அசுரர்கள் துாக்கி எறிந்தனர். அப்போது வாசுகி பாம்பு வந்து விழுந்த இடம் நாகநாதன்கோவில் பகுதியில் உள்ள முங்கில்தோப்பு ஆகும். பலத்த காயங்களுடன் முங்கில்தோப்பில் கிடந்த வாசுகி அருகில் உள்ள நாகநாதசுவாமியை வணங்கியதாகவும், இதனால் இரக்கமுற்ற சிவபெருமான் வாசுகி பாம்பு முன்பு தோன்றி காட்சியளித்தார். அப்போது வேண்டிய வரம் கேள் என்று கேட்டபோது சிவபெருமானிடம் வாசுகி பாம்பு தனக்கு கிரக பதவி கொடுக்குமாறு வேண்டிகொண்டதால், சிவபெருமான் நாகநாதசுவாமிகோவிலில் தனி சன்னதியில் கேது கிரகமாக இருந்து அருளாசி புரியுமாறு வேண்டிகொண்டார்.

    அடுத்தமாதம்(செப்டம்பர்) 1-ந்தேதி (செவ்வாய்கிழமை) மதியம் 2.16 மணிக்கு தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியின் போது மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலின் உட்பகுதியில் பக்தர்கள் இன்றி பெயர்ச்சி வழிபாடு நடக்கிறது.
    அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் அமைந்துள்ள ராகு, கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான தென்காளகஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி மதியம் 2.8 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேது பகவான் விருட்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள். அன்றைய தினம் ஈத்தாமொழி அருகே இலந்தையடித்தட்டில் அமைந்துள்ள ராகு, கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான தென்காளகஸ்தி சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    1-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும். பின்னர், ராகு கேது பகவானுக்கு காலை 8 மணி, பகல் 11 மணி, மதியம் 2.8 மணி, மாலை 5.30 மணி மற்றும் இரவு 8 மணிக்கு 5 காலை பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். இதில், மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பரிகார பூஜையும், மீனம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அர்ச்சனையும் நடத்தப்படும்.

    மக்கள் நெருக்கத்தை தவிர்க்க நேரில் வர முடியாதவர்களுக்கு தனி தனியாக பெயர் ராசி மூலம் பரிகார பூஜையும், அர்ச்சனையும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை தென்காளகஸ்தி சிவாலய திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள். 
    திருவெண்காட்டில் மனைவி இறந்த சோகத்தில் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவெண்காடு:

    நாகை மாவட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது50). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பத்மா (45). இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒரு மகனுக்கு மட்டும் திருமணமாகி உள்ளது.

    இந்த நிலையில் பத்மா உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் அவருக்கு உடல் நலம் சீராகவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பத்மா உடல் நலக்குறைவால் இறந்தார். மனைவி இறந்ததில் இருந்தே குமார் சோகமாக இருந்தார்.

    மனைவியின் பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் தனது உறவினர்களிடம் மனைவி சென்ற இடத்துக்கே தானும் செல்வதாக குமார் உருக்கமாக பேசி வந்தார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறியும், மீண்டும், மீண்டும் மனைவியை பற்றிய சிந்தனையிலேயே அவர் மூழ்கி, மிகுந்த மன வேதனையுடன் இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த அவர் திடீரென பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். இதையடுத்து மகன்கள் மற்றும் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி இறந்த சோகத்தில் டீக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இந்த பரிதாப சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
    வேதாரண்யம் அருகே நாயை துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் கோவில் வடக்கு குத்தகையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி பாக்கியலட்சுமி(வயது50). இவர் தனது வீட்டு காவலுக்காக ஒரு நாயை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று பாக்கியலட்சுமி வீட்டின் வழியாக நாகக்குடையானை சேர்ந்த மதியழகன்(59) என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பாக்கியலட்சுமி வளர்த்து வந்த நாய் துரத்தி சென்றது. இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் நாயை சுட்டார்.

    அப்போது துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு வேறு திசை நோக்கி சென்றது. இதனால் நாய் உயிர் தப்பியது.

    இது குறித்து பாக்கியலட்சுமி கரியாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை துப்பாக்கியால் சுட்ட மதியழகனை கைது செய்து, அவரிடம் இருந்த 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். நாயை துப்பாக்கியால் ஒருவர் சுட்ட சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேளாங்கண்ணி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தை சேர்ந்த பாலுசாமி மகன் பாபுராஜ் (வயது28). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யத்தில் முன்விரோத தகராறில் தொழிலாளியை கம்பால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல்வயல் கிராமத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த பணிக்கு வந்த சத்தீஷ்பாபு (வயது 43) என்பவர் மற்ற தொழிலாளர்களுக்கு குடிநீர் வழங்கி கொண்டிருந்தார். இந்தநிலையில் அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த குமார் (42) என்பவர் முன்விரோதத்தில் சத்தீஷ்பாபுவை தரக்குறைவாக பேசி கம்பால் தாக்கினார்.

    இதுகுறித்து சத்தீஷ்பாபு கொடுத்த புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.
    கொள்ளிடம் அருகே மணப்பெண் காதலனுடன் ஓடியதால் திருமணம் நின்று போனது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கும், செம்பனார்கோவில் காளகஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் கடந்த சில மாதங்களாக செய்து வந்தனர்.

    நேற்று காலை இவர்களது திருமணம் காளகஸ்தினாபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாலையே மண்டபத்திற்கு வந்து இருந்தனர். இதனால் திருமண மண்டபமே களைகட்டி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெண் அழைப்பு ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. மண்டப அலங்காரம் செய்யும் பணி ஒருபுறம், திருமண விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி ஒருபுறம் என மண்டபம் பரபரப்பாக இருந்தது. அப்போது திடீரென மணப்பெண் மாயமானார். திருமண மண்டபத்தில் அவர் தங்கி இருந்த அறை மற்றும் மண்டபம் முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. மணப்பெண் மாயமானதால் திருமண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. உறவினர்கள் அனைவரும் ஆங்காங்கே கூடி நின்று அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டனர்.

    அப்போதுதான் மணப்பெண் ஒருவரை காதலித்து வந்ததும், காதலனுடன் மண்டபத்தில் இருந்து ஓடியது தெரிய வந்தது. இதனால் நேற்று காலை நடைபெற வேண்டிய இந்த திருமணம் நின்று போனது. முதல் நாள் மாலை களைகட்டி இருந்த திருமண மண்டபம் காதலனுடன் மணப்பெண் ஓடியதால் களைஇழந்தது.

    இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், திருமண மண்டபத்தில் இருந்த தனது மகளை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விட்டார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாயமான மணப்பெண் கடந்த சில மாதங்களாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் காதலனுடன் மணப்பெண் ஓடி விட்டதும் தெரிய வந்தது.

    மணப்பெண் காதலனுடன் ஓடியதால் நேற்று காலை நடக்க இருந்த திருமணம் நின்று போனதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    மயிலாடுதுறை அருகே குத்தாலம் கால்நடை மருத்துவமனையில் 225 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    பாலையூர்:

    மயிலாடுதுறை அருகே குத்தாலம் கால்நடை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கோட்டம் சார்பில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் 2019-2020-ன் கீழ் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குத்தாலம் பேரூர் செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான பாலு தலைமை தாங்கினார். குத்தாலம் கால்நடை மருத்துவர் சுரேஷ், நக்கம்பாடி கால்நடை மருத்துவர் சந்தோஷ், தேரழுந்தூர் கால்நடை மருத்துவர் சபிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 225 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினார். இதில் அ.தி.மு.க. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வி.ஜி.கே செந்தில்நாதன், எம்.சி.பி. ராஜா, பேரூர் இளைஞரணி துணை செயலாளர் ஜெயபாலகிருஷ்ணன், மயிலாடுதுறை நகர கழக துணை செயலாளர் நாஞ்சில் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் கோழிக் குஞ்சுகளை பெற்று சென்றனர்.
    மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் ஆசிரியை பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் குற்றம் சாட்டியுள்ளனர்.
    பாலையூர்:

    தேனி மாவட்டம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்தவர் இர்பானா ஜெனிபர்(வயது 29). இவர் உத்தமபாளையத்தை சேர்ந்த முகமது உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சென்னையில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே பள்ளியில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெடுங்குளத்தை சேர்ந்த செல்வக்குமார்(35) என்பவரும் வேலை பார்த்தார். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் இன்பானா ஜெனிபருடன் செல்வக்குமார் குடும்ப நண்பராக பழகியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செல்வக்குமாரும், இர்பானா ஜெனிபரும் நெடுங்குளத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

    மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் வந்தபோது பின்னால் வந்த சரக்கு வேன் செல்வக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இருந்த இர்பானா ஜெனிபர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான இர்பானா ஜெனிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்றவருக்கு எந்தவித காயம்மும் இல்லை என்பதால் இர்பானா ஜெனிபர் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் அப்போதுதான் இன்பானா ஜெனிபரின் உடலை வாங்கி செல்வோம் எனக்கூறி முற்றுகையிட முயன்றனர்.

    போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    வேளாங்கண்ணி பேராலயத்தில் வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) பக்தர்கள் இன்றி திருவிழா கொடியேற்றம் நடக்கிறது என்று பேராலய அதிபர் பிரபாகர் கூறினார்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்து உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த பேராலயமும் ஒன்று.

    பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.

    கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவுவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி தேவாலயத்தில் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.

    இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 29-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் தேர்பவனி ஆலயத்தை சுற்றியும் நடைபெறும். செப்டம்பர் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா, சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்படும். தொடர்ந்து தமிழில் திருப்பலியுடன் அன்னையின் ஆண்டு விழா நிறைவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×