என் மலர்
செய்திகள்

விபத்து
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி ஆசிரியை பலி
மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் ஆசிரியை பலியானார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாலையூர்:
தேனி மாவட்டம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்தவர் இர்பானா ஜெனிபர்(வயது 29). இவர் உத்தமபாளையத்தை சேர்ந்த முகமது உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சென்னையில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே பள்ளியில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா நெடுங்குளத்தை சேர்ந்த செல்வக்குமார்(35) என்பவரும் வேலை பார்த்தார். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால் இன்பானா ஜெனிபருடன் செல்வக்குமார் குடும்ப நண்பராக பழகியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் செல்வக்குமாரும், இர்பானா ஜெனிபரும் நெடுங்குளத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் வந்தபோது பின்னால் வந்த சரக்கு வேன் செல்வக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இருந்த இர்பானா ஜெனிபர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான இர்பானா ஜெனிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்றவருக்கு எந்தவித காயம்மும் இல்லை என்பதால் இர்பானா ஜெனிபர் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் அப்போதுதான் இன்பானா ஜெனிபரின் உடலை வாங்கி செல்வோம் எனக்கூறி முற்றுகையிட முயன்றனர்.
போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






