என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொள்ளிடம் அருகே காதலனுடன், மணப்பெண் ஓட்டம்- திருமணம் நின்று போனது

    கொள்ளிடம் அருகே மணப்பெண் காதலனுடன் ஓடியதால் திருமணம் நின்று போனது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவருக்கும், செம்பனார்கோவில் காளகஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் கடந்த சில மாதங்களாக செய்து வந்தனர்.

    நேற்று காலை இவர்களது திருமணம் காளகஸ்தினாபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக பெண் வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம் மாலையே மண்டபத்திற்கு வந்து இருந்தனர். இதனால் திருமண மண்டபமே களைகட்டி இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பெண் அழைப்பு ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. மண்டப அலங்காரம் செய்யும் பணி ஒருபுறம், திருமண விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி ஒருபுறம் என மண்டபம் பரபரப்பாக இருந்தது. அப்போது திடீரென மணப்பெண் மாயமானார். திருமண மண்டபத்தில் அவர் தங்கி இருந்த அறை மற்றும் மண்டபம் முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. மணப்பெண் மாயமானதால் திருமண மண்டபமே பரபரப்புக்குள்ளானது. உறவினர்கள் அனைவரும் ஆங்காங்கே கூடி நின்று அவர்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டனர்.

    அப்போதுதான் மணப்பெண் ஒருவரை காதலித்து வந்ததும், காதலனுடன் மண்டபத்தில் இருந்து ஓடியது தெரிய வந்தது. இதனால் நேற்று காலை நடைபெற வேண்டிய இந்த திருமணம் நின்று போனது. முதல் நாள் மாலை களைகட்டி இருந்த திருமண மண்டபம் காதலனுடன் மணப்பெண் ஓடியதால் களைஇழந்தது.

    இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், திருமண மண்டபத்தில் இருந்த தனது மகளை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விட்டார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாயமான மணப்பெண் கடந்த சில மாதங்களாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் காதலனுடன் மணப்பெண் ஓடி விட்டதும் தெரிய வந்தது.

    மணப்பெண் காதலனுடன் ஓடியதால் நேற்று காலை நடக்க இருந்த திருமணம் நின்று போனதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×