என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • தடை செய்யப்பட்ட 7 ஆன்லைன் நம்பா் சீட்டு விற்று கொண்டிருந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேதாரண்யம் கரியாப்பட்டினம் சாலை, தூண்டிக்காரன்சுவாமி கோவில் அருகில் வேதாரண்யம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் (வயது 35) என்பவா் தடை செய்யப்பட்ட 7 ஆன்லைன் நம்பா் சீட்டு விற்று கொண்டிருந்தார்.

    உடனே போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.

    • சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் தாமரைக் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் புகுந்து குளத்தை பாழாக்கி வருகின்றனர்.

    எனவே அந்த சுவரை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

    அத்துடன் இதர சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.
    • கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம், தோல் கழலை நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமானது கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர்கள் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் முகம்மது சலாவுதீன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி மருத்துவர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன.

    இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சசிக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஸ்ரீதர், செயற்கை முறை கருவூட்டாளர் தம்பிராஜா மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் வடகரை ஊராட்சி திருப்பனையூரில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஊராட்சி செயலாளர் பிரகாஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்து முகாமை நடத்தி வைத்தனர். அதே போல் ஆதலையூரில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகர் தலைமை வகித்துமருத்துவ முகாமை நடத்தி வைத்தார்.

    • மழை மற்றும் வறட்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
    • இயற்கை வழி விவசாயம், எலியை கட்டுப்படுத்தும் முறை.

    நாகப்பட்டினம்:

    ரிலையன்ஸ் அறக்கட்ட ளையின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்து வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளிடையே கலந்துரையாடல் நிகிழ்ச்சி நாகையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முனைவர் திருமேனி தலைவர் மற்றும் பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் அவர்கள் கலந்துகொண்டு மழை மற்றும் வறச்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.

    நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் சந்திரசேகர் (தொழில்நுட்ப வல்லுனர் பயிர்பாதுகாப்பு துறை) வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல், முனைவர் குமார ரெத்தினசபாதி முதல்வர்- ஆதிபாராசக்தி தோட்டக்கலைகல்லூரி வேலூர், முனைவர் காந்திபன் பூச்சியியல் துறை பேராசியியர் மற்றும் தலைவர் பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் ஆகியோர் விளக்கினார்கள்.

    நெற்பயிரில் உர மேலாண்மை, மண் வளத்தை பெருக்குதல், இயற்கை வழி விவசாயம், எலியை எளிய முறையில் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் பாபு இணை பேராசிரியர் அண்ணாம லைப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அவர்கள் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளையின் அலுவலர் பிரவின்ராஜ் செய்திருந்தார்.

    • 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமாக விளங்கும் நாகூர் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.

    அதன்படி 466 ஆம் ஆண்டு கந்தூரி விழா டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாகூர் தர்காவின் மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதால் நாகூரே விழா கோலம் பூண்டுள்ளது.

    தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது கண்டு பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கழுகு பார்வை காட்சிகள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் 02 ஆம் தேதி நாகையிலிருந்து சந்தன கூடு ஊர்வலமும் 03ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    • ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதா ரண்யம் அடுத்த கோடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 47).

    இவர் மீது ஆடு திருட்டு, சிலிண்டர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சிலிண்டர் திருட்டு வழக்கில் செல்லத்துரையை கைது செய்ய கோடியக்காட்டில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் செல்லத்துரை தப்பி ஓட முயன்றார். இருந்தாலும் போலீசார் அவரை பிடித்தனர்.

    அந்த நேரத்தில் திடீரென செல்லத்துரை மற்றும் அவரது மகன் வீரக்குமார் (24) ஆகியோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோரை குத்தினர்.

    மேலும் இன்ஸ்பெக்டர் குணசேகரனை தாக்கி விட்டு வீரக்குமார் தப்பி ஓடி விட்டார். செல்லத்துரையை சக போலீசார் மடக்கி பிடித்தனர்.

    இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த போலீசா ர்கள் ராஜ்ஐயப்பன், சக்திவேல் ஆகியோர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியிலும், இன்ஸ்பெக்டர் குணசேகரன் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாரை பார்த்தார்.

    மேலும் தப்பி ஓடிய வீரக்குமாரை உடனே பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சந்தன மரங்களை சிறு, சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.
    • பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா, 466- வது ஆண்டு கந்துாரி விழா கடந்த 24- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் விழா வரும் 3-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. கந்தூரி விழாவிற்காக தமிழக அரசு சார்பில் 45 கிலோ எடையுள்ள சந்தன மர கட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டளை அரைத்து வருகின்றனர்.

    நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த யாத்திரிகர்கள் 10 நாட்கள் தர்காவில் தங்கி சந்தன மரங்களை சிறு சிறு துண்டுகளாக்கி அரைக்கும் பணி தொடங்கியது.

    சந்தன கட்டைகளை ஜவ்வாது கலந்த பன்னீரில் ஊர வைத்து கருங்கற்களில் அரைத்து எடுக்கப்படும். பின்னர் அரைக்கப்பட்ட சந்தனம், குடங்களில் நிரப்பப்பட்டு, நாகை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் வரும் 2- ம் தேதி ஒப்படைக்கப்படும்.

    தொடர்ந்து நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 3 -ம் தேதி அதிகாலை நாகூர் வந்தடையும்.

    பின் தர்கா தலைமாட்டுவாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும். பின் சந்தனம் யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • வீரமணி மது குடிக்கும் பழக்கம் உடையவர்.
    • மன வேதனை அடைந்த வீரமணி விஷம் குடித்தார்.

    நாகப்பட்டினம்

    திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சி ஆண்டிபந்தல் தோப்பு தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் வீரமணி (வயது 35) கூலித்தொழிலாளி.

    இவருடைய மனைவி தையல்நாயகி (35). வீரமணி மதுகுடித்து விட்டு அடிக்கடி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது மனவைி கோபித்து கொண்டு புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வீரமணி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் வருகை தந்த, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ மற்றும் குழு உறுப்பினர்கள் நாகூர் சில்லடி கடற்கரை மற்றும் தர்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, நாகூர் நகருக்கு பல்லாயிரக்கணக்கான ஆன்மீக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் அதற்கேற்ற வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. சில்லடி கடற்கரை மற்றும் நாகூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். மேலும் நாகையில் அரசு மேல் நிலைப்பள்ளி அமைப்பது, சட்டக்கல்லூரி தொடங்குவது, புறநகர் பேருந்து நிலையம் அமைப்பது, திருமருகல் தனி தாலுகா அமைப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்து, பொதுக் கணக்குக் குழு தலைவரிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ மனு அளித்தார்.

    இந்தக் கோரிக்கைகளை அரசுக்கு பொதுக் கணக்குக் குழு பரிந்துரைக்கும் என்று செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    • தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமை குறித்தும் ஆய்வு.
    • நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம்.

    நாகப்பட்டினம்:

    நாகை சட்டமன்ற உறுப்பினர்ஷா நவாஸ் தலை மையில் தொல்லியல் துறை சம்பந்தமாக டாக்டர் க.சுபாஷிணிதலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி, டாக்டர். பாப்பா, டாக்டர். இறைவாணி, ஆய்வாளர் ப்ரீத்தி, மணி வண்ணன்வரலாற்றுப் பயணம் பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் அருங்காட்சியக பிரிவு, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினர் ஆகியோர் நாகூர் தர்கா வருகை புரிந்து நாகூர் தர்காவின் தொல்லியல் துறை கல்வெட்டுகள் குறித்தும் தர்காவின் பழமையினை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகூர் தர்கா ஒரு வரலாற்று பொக்கிஷம், பல்வகை கலாச்சரத்துக்கு மூல காரணம். இதற்க்கு அத்தாட்சி நாகூர் தர்காவில் உள்ள கல்வெட்டுகள் என பாராட்டினர்.

    நாகூர் தர்கா பிரசிடன்ட் கலீபா சாஹிப் நாகூர் தர்கா சிறப்பினை பற்றி விளக்கினார். உடன் போர்டு ஆப் டிரஸ்டிகள், முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

    நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் நாகூர் தர்கா கந்தூரிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது.

    • புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
    • கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து கடைக்கு சீல் வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆண்டனி பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டென்னிசன் ஆகியோர் திட்டச்சேரி, மரைக்கான்சாவடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மரைக்கான்சாவடி மெயின் ரோட்டில் ராஜசேகர் மனைவி கோமதி (வயது 31) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கடைக்கு 'சீல்' வைத்தார்.மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம்.
    • கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, அவரிக்காடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநாய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

    தலைஞாயிறு ஒன்றிய குழு தலைவர் தமிழரசி முகாமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரேணுகா நேதாஜி, உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், கால்நடை மருத்துவர் முருகேசன், சண்முகநாதன், பாலசுந்தரம், செந்தில் உள்ளிட்ட கால்நடை துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பின்பு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு கால்நடை மருத்துவர் முருகேசன் வெறிநாய் கடி மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

    இதில் ஏராளமான கிராமமக்கள் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    ×