search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் ஆண்டவர் தர்கா
    X

    மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் நாகூர் ஆண்டவர் தர்கா

    • சந்தனக்கூடு ஊர்வலம் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.
    • நாகூர் நாயகம் மறைந்த நாளை கந்தூரி விழாவாக நாகூரில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    வட இந்தியாவில் அயோத்திக்கு அருகில் உள்ள மாணிக்கப்பூர் என்னும் ஊரில் கி.பி. 1491-ம் ஆண்டு ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப்- பீபி பாத்திமா ஆகியோருக்கு ஹஜ்ரத் சாகுல் ஹமீது நாயகம் (நாகூர் நாயகம்) மகனாக பிறந்தார். இவர் தனது 8 வயதிலேயே அரபிக் கல்வியை இலக்கண சுத்தமாக கற்றுத் தேர்ந்தார்.

    பின்னர் ஆன்மிக கல்வி பெற குவாலியர் சென்று ஹஜ்ரத் சையத் முகமது கவுஸ் சாகிப் என்பவரின் கல்விக்கூடத்தில் சேர்ந்தார். அங்கு 10 ஆண்டுகள் கல்வி பயின்றார். பின்னர் 404 மாணவர்களுடன் அங்கிருந்து சென்று மாணிக்கப்பூர், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆன்மிக பரப்புரை செய்தார்.

    பிரார்த்தனை செய்தார்

    அதன் பின்னர் மெக்கா மாநகரம் நோக்கி பயணம் செய்தார். வழியில் லாகூரில் தங்கி இருந்தபோது, ஹாஜி ஹஜ்ரத் நூருதின் சாஹிப் எனும் செல்வந்தர் நாகூர் நாயகத்தைச் சந்தித்து தமக்கு பிள்ளை செல்வம் இல்லாமல் இருப்பது பற்றி கூறினார். அவருக்காக நாகூர் நாயகம் அல்லாவிடம் பிரார்த்தனை செய்தார். இதன் பலனாக ஹாஜி ஹஜ்ரத் நூருதின் சாஹிபுக்குசையத் முகமது யூசுப் சாகித் என்னும் இறைநேசர் பிறந்தார்.பின்னர் நாகூர் நாயகம் அவரது மகனார், மாணவர்கள் அனைவரும் இணைந்து இலங்கை, காயல்பட்டினம் கீழக்கரை, தென்காசி என பல்வேறு இடங்களுக்கு பயணித்து ஆன்மிக பரப்புரை செய்தனர். இறுதியாக நாகூர் நாயகம் தஞ்சாவூர் வந்தடைந்தார்.

    மன்னரின் நோயை சரி செய்தார்

    அப்போது தஞ்சையை ஆட்சி செய்த மன்னர் அச்சுதப்ப நாயக்கர் நீண்ட நாளாக தீர்க்க முடியாத நோயால் போராடிக் கொண்டிருந்தார். மன்னரின் அமைச்சர்கள் நாகூர் நாயகத்தை அணுகி மாளிகைக்கு வந்து மன்னனை பார்க்குமாறு வேண்டினர். அங்கு சென்ற நாகூர் நாயகம், மன்னனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். மன்னரின் நோய் தீர்ந்தது . அதேபோல் அதுவரை பிள்ளை பேறு இல்லாத மன்னர் நாகூர் நாயகத்தின் பிரார்த்தனையால் புத்திர பாக்கியம் பெற்றார்.இதற்கு கைமாறாக அம்மன்னர் ஏராளமான செல்வத்தையும், சொத்துக்களையும் கொடுக்க முன் வந்தார் .

    40 நாட்கள் நோன்பு நோற்றார்

    நாகூர் நாயகமோ கடலோரத்தில் தமக்கு ஒரு துண்டு நிலம் போதும் என்று கூறினார். அதன்படி மன்னர் 30 ஏக்கர் நிலத்தை கடலோரத்தில் வழங்கினார். அதுதான் இன்றைய நாகூர்

    நாகூர் நாயகம் ரஜப் மாதத்தில் நாகூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாஞ்சூருக்கு சென்று மரப்பலகையால் மூடப்பட்ட ஒரு குழிக்குள் அமர்ந்து 40 நாட்கள் நோன்பு நோற்றார். அங்கு தான் தற்போதைய வாஞ்சூர் பள்ளிவாசல் உள்ளது. அதேபோல நாகூர் கடலோரத்தில் அமைந்துள்ள சில்லடி பள்ளிவாசலிலும் 40 நாட்கள் நோன்பு நோற்றார். நாகூர் நாயகம் தனது 68-வது வயதில் நாகூரில் மறைந்தார். பின்னர் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கந்தூரி விழா

    நாகூர் நாயகம் மறைந்த நாளை கந்தூரி விழாவாக நாகூரில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சமய பாகுபாடின்றி மதநல்லிணக்கத்துடன் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.

    Next Story
    ×