என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
    • 500 -க்கும் மேற்பட்ட கால்நடை கலந்து கொண்டு பயன்பெற்றன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா செம்போடை ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் ஆகியோாரின் ஆலோசனை பேரில் நடைப்பெற்றது.

    முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை உதவி டாக்டர்கள் சண்முகநாதன், முருகேசன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர்.

    இதில் 500 -க்கும் மேற்பட்ட கால்நடை கலந்து கொண்டு பயன்பெற்றன.

    முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் பரிசு வழங்கினார்.

    இதில் கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 14 வயதுக்குட்பட்ட வில்வித்தை போட்டியில் 8-ம் வகுப்பு மாணவன் நித்திக் 2-ம் இடம்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமது வாழ்த்து தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்,

    நாகை மாவட்டம் வேதாரண்யம் குரவப்புலத்தில் மாநில அளவில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் பத்து வயதுக்குட்பட்ட பிரிவில் வில்வித்தை போட்டியில் திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி 5ம் வகுப்பு பயிலும் ஹர்த்திக் ராமன், இரண்டாம் இடம் பிடித்துள்ளார், அதேபோன்று 14 வயதுக்குட்பட்ட பிரிவில் வில்வித்தை போட்டியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவன் நித்திக் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்,

    அதே போன்று காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் அபினவ் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

    இவர்களுக்கு பள்ளி தலைவர் முனைவர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், தாளாளர் விஜயசுந்தரம், முதல்வர். ஜி.சுமித்தரா, துணை முதல்வர் மா.ஆனந்தி, நிர்வாக அலுவலர், சீதா கோபாலன், வில்வித்தை பயிற்சியாளர். குணசேகரன், மற்றும் உடற்கல்வி பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இப்தி லெப்பை தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (வயது31), அதே பகுதி அலியார் மறைக்காயர் தெருவைச் சேர்ந்த ஆஷிக் ரகுமான் (24). இருவரும் நண்பர்கள்.

    இவர்கள் இருவரும் இன்று அதிகாலை நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் நாகப்பட்டினம் அருகே சிக்கல் என்ற இடத்தில் சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்தஆசிக் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த முகமது இப்ராஹிமை மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் விபத்தில் பலியான ஆசிக் ரஹ்மான் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் நடைபெற்றது.

    கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரை பேரில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சோழன், கால்நடை உதவி மருத்துவர்கள் முருகேசன், சண்முகநாதன், சரவணகுமார், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • வருகிற 12-ந் தேதி கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி.
    • 13-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது.

    தொடர்ந்து வருகிற 12-ந் தேதி கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியும், 13-ந் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    விழா நாட்களில் வேதாரண்யம் கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெறும்.

    • நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
    • விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக திகழும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் நேற்று இரவு நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தன கூட்டின் மீது வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களை தூவி வழிபட்டனர். ஸ்தூபி இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம் , தாரை தப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தனகூடு ஊர்வலம் இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளில் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். தொடர்ந்து மயக்க நிலையை அடைந்த சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப் பக்தர்கள் கூட்டத்தில் தூக்கி வரப்பட்ட நிலையில் சுற்றியிருந்த பக்தர்கள் அவரை தொட்டு வணங்கினர்.தொடர்ந்து யாத்ரீகர்களுக்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஷாநவாஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    சந்தனகூடு ஊர்வலத்தை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விழாவில் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபட்டனர்.

    • 108 வைணவ தலங்களுள் 19-வது தலமாக விளங்குகிறது.
    • மூலவா் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசித் திருவிழா பரமபத வாசல் திறப்பு உத்ஸவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

    ஆழ்வாா்களால் பாடல்பெற்ற 108 வைணவத் தலங்களுள் 19 ஆவது தலமாக விளங்குகிறது நாகை அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோயில். இக்கோயிலில், திரு அத்யயன வைகுந்த ஏகாதசித் திருவிழா கடந்த 23 ஆம் தேதி, பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

    வைகுந்த ஏகாதசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரபத வாசல் திறப்பு உத்ஸவம் இன்று காலை நடைபெற்றது. காலை 4 மணிக்கு மூலவா் சேவை நடைபெற்றது.

    இதைத் தொடா்ந்து, மூலவா் பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

    பிறகு, ஐதீக முறைப்படி நடைபெற்ற வழிபாடுகளின் நிறைவில், அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் (உத்ஸவா்) ரத்ன அங்கி அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமதேராக புறப்பாடாகி, வேத மந்திரங்களுடன், மங்கள வாத்தியங்களும் முழங்க, காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் வழியே எழுந்தருளினாா்.

    அப்போது, கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு பக்தா்கள், பெருமாளை பின்தொடா்ந்து பரமபத வாசல் வழியே வெளியே வந்து, சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.

    • வங்கி கணக்குகள் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்பிலான தொகையுடன் முடக்கம்.
    • வாகன விபத்தில் ஈடுபட்ட 1,123 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    2023 -ம் ஆண்டின் தொடக்க நாளான இன்று நாகை எஸ்பி. அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாகை மாவட்டத்தில் 2022-ம் ஆண்டில் மட்டும் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பிடிக்கப்பட்டு, 68 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும் இரண்டு படகுகள், 4 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், கடத்தலில் ஈடுபட்ட 69 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொகையுடன் முடக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

    தொடர்ந்து 2021 ஆம் ஆண்டைவிட 2022 ஆம் ஆண்டில் குற்ற சம்பவங்கள் குறைந்து உள்ளது. திருட்டு வழக்குகள் 80 சதவீதம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், களவு போன 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.

    மேலும், 2022 -ம் ஆண்டில் வாகன விபத்தில் ஈடுபட்ட 1123 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் பாதுகாப்பான புத்தாண்டு அமைய நாகை மாவட்ட மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்தார்.

    • வாய்மேடு வரையிலான பஸ் வழித்தடத்தில் மகளிர் நலன் கருதி இலவச பஸ் இயக்க வேண்டும்.
    • மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா வேதாரண்யத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் வீரசுந்தரம் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் சாமிநாதன் கந்தசாமி, அமைப்பு செயலாளர் வைரக்கண்ணு, செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இணை செயலாளர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் மணவழகன், வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி நுகர்வோர் வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

    கூட்டத்தில் வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு வரையிலான பஸ் வழித்தடத்தில் மகளிர் நலன் கருதி இலவச பஸ் இயக்க வேண்டும்.

    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்.

    மானங்கொண்டான் ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

    • சந்தனக்கூடு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நாகூர் தர்காவை வந்தடையும்.
    • நாளை அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி கந்தூரி விழா கடந்த மாதம்(டிசம்பர்) 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு தர்கா அலங்கார வாசலில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

    கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரவு 8 மணிக்கு நாகை யாஹூசைன் பள்ளிவாசல் தெருவில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிகாலை நாகூர் தர்கா அலங்கார வாசலை வந்தடையும்.

    இதை தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

    • சந்தனக்கூடு ஊர்வலம் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.
    • நாகூர் நாயகம் மறைந்த நாளை கந்தூரி விழாவாக நாகூரில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    வட இந்தியாவில் அயோத்திக்கு அருகில் உள்ள மாணிக்கப்பூர் என்னும் ஊரில் கி.பி. 1491-ம் ஆண்டு ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப்- பீபி பாத்திமா ஆகியோருக்கு ஹஜ்ரத் சாகுல் ஹமீது நாயகம் (நாகூர் நாயகம்) மகனாக பிறந்தார். இவர் தனது 8 வயதிலேயே அரபிக் கல்வியை இலக்கண சுத்தமாக கற்றுத் தேர்ந்தார்.

    பின்னர் ஆன்மிக கல்வி பெற குவாலியர் சென்று ஹஜ்ரத் சையத் முகமது கவுஸ் சாகிப் என்பவரின் கல்விக்கூடத்தில் சேர்ந்தார். அங்கு 10 ஆண்டுகள் கல்வி பயின்றார். பின்னர் 404 மாணவர்களுடன் அங்கிருந்து சென்று மாணிக்கப்பூர், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆன்மிக பரப்புரை செய்தார்.

    பிரார்த்தனை செய்தார்

    அதன் பின்னர் மெக்கா மாநகரம் நோக்கி பயணம் செய்தார். வழியில் லாகூரில் தங்கி இருந்தபோது, ஹாஜி ஹஜ்ரத் நூருதின் சாஹிப் எனும் செல்வந்தர் நாகூர் நாயகத்தைச் சந்தித்து தமக்கு பிள்ளை செல்வம் இல்லாமல் இருப்பது பற்றி கூறினார். அவருக்காக நாகூர் நாயகம் அல்லாவிடம் பிரார்த்தனை செய்தார். இதன் பலனாக ஹாஜி ஹஜ்ரத் நூருதின் சாஹிபுக்குசையத் முகமது யூசுப் சாகித் என்னும் இறைநேசர் பிறந்தார்.பின்னர் நாகூர் நாயகம் அவரது மகனார், மாணவர்கள் அனைவரும் இணைந்து இலங்கை, காயல்பட்டினம் கீழக்கரை, தென்காசி என பல்வேறு இடங்களுக்கு பயணித்து ஆன்மிக பரப்புரை செய்தனர். இறுதியாக நாகூர் நாயகம் தஞ்சாவூர் வந்தடைந்தார்.

    மன்னரின் நோயை சரி செய்தார்

    அப்போது தஞ்சையை ஆட்சி செய்த மன்னர் அச்சுதப்ப நாயக்கர் நீண்ட நாளாக தீர்க்க முடியாத நோயால் போராடிக் கொண்டிருந்தார். மன்னரின் அமைச்சர்கள் நாகூர் நாயகத்தை அணுகி மாளிகைக்கு வந்து மன்னனை பார்க்குமாறு வேண்டினர். அங்கு சென்ற நாகூர் நாயகம், மன்னனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். மன்னரின் நோய் தீர்ந்தது . அதேபோல் அதுவரை பிள்ளை பேறு இல்லாத மன்னர் நாகூர் நாயகத்தின் பிரார்த்தனையால் புத்திர பாக்கியம் பெற்றார்.இதற்கு கைமாறாக அம்மன்னர் ஏராளமான செல்வத்தையும், சொத்துக்களையும் கொடுக்க முன் வந்தார் .

    40 நாட்கள் நோன்பு நோற்றார்

    நாகூர் நாயகமோ கடலோரத்தில் தமக்கு ஒரு துண்டு நிலம் போதும் என்று கூறினார். அதன்படி மன்னர் 30 ஏக்கர் நிலத்தை கடலோரத்தில் வழங்கினார். அதுதான் இன்றைய நாகூர்

    நாகூர் நாயகம் ரஜப் மாதத்தில் நாகூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாஞ்சூருக்கு சென்று மரப்பலகையால் மூடப்பட்ட ஒரு குழிக்குள் அமர்ந்து 40 நாட்கள் நோன்பு நோற்றார். அங்கு தான் தற்போதைய வாஞ்சூர் பள்ளிவாசல் உள்ளது. அதேபோல நாகூர் கடலோரத்தில் அமைந்துள்ள சில்லடி பள்ளிவாசலிலும் 40 நாட்கள் நோன்பு நோற்றார். நாகூர் நாயகம் தனது 68-வது வயதில் நாகூரில் மறைந்தார். பின்னர் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    கந்தூரி விழா

    நாகூர் நாயகம் மறைந்த நாளை கந்தூரி விழாவாக நாகூரில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சமய பாகுபாடின்றி மதநல்லிணக்கத்துடன் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது.

    • பைபர் படகு கவிழ்ந்து 3 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
    • ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்தவர் எல்லப்பன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 58), முருகவேல் (40) மற்றும் எல்லையப்பன் ஆகிய 3 மீனவர்களும் வேதாரண்யம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 12 கடல்மைல் தொலைவில் நள்ளிரவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த அனிதா என்பவருக்கு சொந்தமான விசைப்படகு எதிர்பாராத விதமாக பைபர் படகில் மோதியது. இதில் பைபர் படகு கவிழ்ந்து 3 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

    இதைத் தொடர்ந்து மோதிய விசைப்படகு சம்பவ இடத்திற்கு சென்று 3 மீனவர்களையும் மீட்டனர். அப்போது ராஜேந்திரன் என்ற மீனவர் தண்ணீரில் முழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

    உடனடியாக அருகே உள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ராஜேந்திரன் உடலையும், மற்ற 2 மீனவர்கள் எல்லையப்பன், முருகவேல் ஆகியோரை கொண்டு வந்து சேர்த்தனர். கடலில் முழ்கிய படகை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து படகு உரிமையாளர் எல்லப்பன் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    படகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் மீனவர் கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்தில் பலியான ராஜேந்திரனுக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×