search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    • நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
    • விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நாகை மாவட்டம் நாகூரில் உலக புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாக திகழும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு ஊர்வலம் நேற்று இரவு நாகை யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், ஷாநவாஸ் எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தன கூட்டின் மீது வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களை தூவி வழிபட்டனர். ஸ்தூபி இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம் , தாரை தப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தனகூடு ஊர்வலம் இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூரை வந்தடைந்தது. கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளில் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். தொடர்ந்து மயக்க நிலையை அடைந்த சந்தனம் பூசிய கலீபா மஸ்தான் சாஹிப் பக்தர்கள் கூட்டத்தில் தூக்கி வரப்பட்ட நிலையில் சுற்றியிருந்த பக்தர்கள் அவரை தொட்டு வணங்கினர்.தொடர்ந்து யாத்ரீகர்களுக்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஷாநவாஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    சந்தனகூடு ஊர்வலத்தை முன்னிட்டு இன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விழாவில் பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் ஈடுபட்டனர்.

    Next Story
    ×