என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான கோவில்.
    • தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான திருக்கோவிலாகவும், சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் கொண்டு இங்கு சிவன் அகோரமூா்த்தியாக தனி சன்னிதியில் அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும். மேலும், நவ கிரக தலங்களில் கல்வி, தொழில் ஆகியவற்றின் அதிபதியான புதன் பகவானுக்குரிய தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திர விழா, கடந்த வாரம் 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், பிரம்ம வித்யாம்பிகை உடனான ஸ்வேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்–செல்வம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார் திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு. குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மூன்று தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். வருகின்ற மார்ச் 15-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர்.
    • மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவன் கோவிலான இக்கோவில் நவக்கிரகங்களில் புதனுக்கு உரிய தலமாகும்.

    இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் அகோரமூர்த்தியாக திருவெண்காட்டில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் இந்த தலம் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானுடைய ஆனந்த தாண்டவத்தின் போது அவருடைய 3 கண்களில் இருந்து சிந்திய நீர்த்துளிகள் இங்கு அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் இந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான இந்திர திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு சுவேதாரண்யேஸ்வரர், பிரம்ம வித்யாம்பிகை திருக்கல்யாண விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடந்தது. பின்னர் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தையொட்டி மாதவன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், பிராமணர் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • எதிர்காலத்தில் அரசு துறையின் உயர்பதவிகளுக்கு நீங்கள் உயர வேண்டும்.
    • உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பேசுகையில்:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தலா 1000 மாணவ- மாணவிகள்

    கலந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்த ஆணையிட்டார். அதன்படி, இங்கு நடந்த நிகழ்ச்சியில் 14 கல்லூரிகளை சேர்ந்த 1000 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனை–வுக்கான முன்னெடுப்புகள் ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணித தமிழ்வளர்ச்சி சவால்களும், சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்வி புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு சொற்பொழிவு நடைபெற்றது.

    மாணவ- மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் சொற்பொழிவாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார் மாபெரும் தமிழ் கனவு காணொளியை கண்டும் வரலாற்று சிறப்புகளை அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசு துறையின் உயர்பதவிகளுக்கு நீங்கள் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கல்லூரி வளாகத்தில் மாவட்ட நூலகத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சி, பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர்கள் அறிவுமதி, நந்தலாலா ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினர்.

    அதனை தொடர்ந்து தமிழ் பெருமிதம் குறித்தும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளக்கம் தந்து மற்றும் வினாக்கள் கேட்ட 8 மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் மகாபாரதி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, கல்லூரி நிர்வாக இயக்குனர் குடியரசு, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள் எழுந்தருளினார்.
    • பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் 108 திவ்யதேசங்களில் 11 திவ்ய தேச பெருமாள் கோவில்கள் அருகருகே அமைந்துள்ளன. இதில் பிரசித்தி பெற்ற வண்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடிமரம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் எழுந்த ருளினார். பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்து முறை செய்விக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு திரு மஞ்சனம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவ கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் பெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்து அருளி வீதி உலா நடைபெற்றது.

    • கலெக்டர் மகாபாரதி அரியாபிள்ளை குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • முதல் கட்டமாக குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாப்பிள்ளை குளம் உள்ளது. பல ஏக்கரில் பறந்து விரிந்துள்ள இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப் படாமல் அப்பகுதியில் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது சீர்காழி நகராட்சி மூலம் ரூ.1 கோடியே 11 லட்சம் செலவில் குளத்தை அழகுப்படுத்தும் விதமாக கரைகளை பலப்படுத்தி, நீர் நிரப்பி, சுற்றி நடைபாதை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த வாரம் பணிகளை தொடங்க நகராட்சி நிர்வாகம் முற்பட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அரியா பிள்ளை குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தொடங்கிட நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு அறிவுறுத்தினார்.

    இதனை அடுத்து சீர்காழி டிஎஸ்பி லாமெக் தலைமையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் குளத்தை சுற்றி குவிக்கப்பட்டு முதல் கட்டமாக குளத்தை தூய்மைப்படுத்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தொடங்கியது. நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் சித்ரா, நகர்மன்ற உறுப்பினர் நாகரத்தினம்செந்தில் ஆகியோர் மேற்பார்வையில் ஜேசிபி எந்திரம் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    போலீஸ் பாதுகாப்புடன் குளம் தூர் வாரும் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பொதுகழிப்பறை, சட்டநாதர் கோவில் கீழவீதி, நகராட்சி குப்பை கிடங்கு, மற்றும் குப்பைகளை பதப்படுத்தி உரம் தயாரிக்கும் பகுதிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொது கழிப்பறை ஆய்வின்போது கழிவறையை சுகாதாரமாக பாதுகாத்த தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

    ஆய்வின் போது பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்பொழுது குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை எனவும், கோயில் அருகே குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதாகவும் பொதுமக்கள் சிலர் குறைகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து உடனடியாக அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தினார்.

    மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மேலாளர் காதர் கான், உடன் இருந்தனர்.

    • திருமண வரம் அருளும் உத்வாகநாதர் கோவிலில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • திருமாங்கல்யம், ஆடைகள், மாலைகள் ஆகியவற்றை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    குத்தாலம்:

    இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் இந்து சமயத்தை சேர்ந்த ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கோவில்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமண வரம் அருளும் உத்வாகநாதர் சுவாமி கோவிலில் 4 ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள், சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் ஜம்புகென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி காவல்துறை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா திறந்துவைத்தார்.

    மாணவர்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சியில் சீர்காழி காவல்த்துறை சார்பாக சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மன்றம் தொடக்கவிழா நடைபெற்றது.

    சீர்காழி டிஎஸ்பி.லாமெக் தலைமை வகித்தார்.

    காவல்ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா மன்றத்தை திறந்து வைத்து மாணவர்களுக்கு விளையாட்டு உபகரண பொருட்களை வழங்கினார்.

    மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மன்றத்தில் பொது நூலகம், விளையாட்டு பொருட்களை பயன்படுத்தும் வகையில் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட திருக்குறள் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை 31-ம்ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
    • மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் போட்டிகள் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்காவில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி ஆகிய பள்ளிகளில் இருந்து திருக்குறள் பண்பாட்டு பேரவை 31ஆம்ஆண்டு நிறைவு விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் ஆண்டு முழுவதும் நடத்தி அதிலிருந்து வெற்றி பெறும் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், சீர்காழி - எல்.எம்.சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    புலவர் பனசை. மூர்த்தி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ராதாகிருஷ்ணன், பேராசிரியர் வீழிநாதன், சாயிராம் கல்விக்குழுமம் தாளாளர் ராஜா ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    திருக்குறள் பண்பாட்டுப் பேரவை செயலர் சிவ.அன்பழகன், தலைவர் வே. சக்கரபாணி, பொருளர். முரு.முத்துக்கருப்பன் ஆகியோர்கள் தலைமை வகித்தனர். அகோரமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ராமநாதன், எல். எம். சி பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மோகன் தாஸ் அறிவாநந்தம், வைத்தியநாத சாமி, ச.மு.இ மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் எஸ். முரளிதரன், பேரவை கொள்கை பரப்புச் செயலர் க.இளங்கோ, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம், சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் வித்யா ஆகியோர் கலந்து கொண்டனர். துணை செயலர் நந்த.இராசேந்திரன் நன்றிக் கூறினார்.

    • சப்த கன்னிகள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது.
    • 108 பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தில் பாதாள வீரன் மற்றும் சப்த கன்னிகள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது.

    காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை முன்னே செல்ல பச்சை காளி, பவளகாளி ஆட்டத்துடன் சக்திகரகம் முன்னே செல்ல 108 பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    .இதனை தொடர்ந்துபாதாள வீரன் மற்றும் சப்த கன்னி சுவாமிகளுக்கு சிறப்பு பாலபிஷேகம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை வகித்தார்.

    சீர்காழி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு முன்னிலை வகித்தார். சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணியில் ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது விழாவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் கலந்து கொண்டனர் முடிவில் ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் வினோதா நன்றி கூறினார்.

    • அகோரமூர்த்தி சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • கொன்றை மரத்தடியில் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.

    முன்பு ஒரு காலத்தில் மருத்துவாசுரன் என்பவர் சிவபெருமானை வேண்டி நடுக்கடலில் தவம் இருந்தான். அவனுடைய தவத்துக்கு மெச்சிய சிவபெருமான் அவர் கேட்டபடி தனது சூலாயுதத்தை வழங்கினார். இதனை பெற்ற மருத்துவாசுரன் தேவர்கள் மற்றும் மக்களை துன்புறுத்தினான். இதை பொறுக்க முடியாமல் அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    இதுபற்றி அறிந்து வர சிவபெருமான், நந்தியை அனுப்பினார். அப்போது நந்தியின் காது, கொம்பை தன்னுடைய சூலாயுதத்தால் அசுரன் முறித்து விட்டான். இதனால் ஏற்பட்ட காயங்களை பார்த்த சிவபெருமான் தனது 5 அகோர முகத்திலிருந்து தீப்பிளம்பாக தோன்றினார். இதனைக் கண்ட அசுரன் பயந்து சிவபெருமானிடம் சரணாகதி அடைந்தான். அவனுடைய வேண்டுகோளை ஏற்று சிவபெருமான், திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அகோரமூர்த்தியாக தனிச்சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் இந்திர திருவிழாவின்போது மருத்துவாசுரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவிலில் இந்திர திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மருத்துவாசுரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அகோரமூர்த்தி பக்தர்கள் புடைசூழ தனது சன்னதியில் இருந்து மேளம், தாளம் முழங்க புறப்பட்டார். அப்போது முதல் மரியாதையாக சரபோஜி அக்ரஹாரம் சார்பில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் எம்பாவை யோகநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் வேத கோஷங்கள் முழங்கிட, பட்டு சாத்தி, பன்னீர் தெளித்து வரவேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் பழங்கள், மாலை, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி வழிபட்டனர். பின்னர் மண்டபத்தில் அகோரமூர்த்தி சாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து கொன்றை மரத்தடியில் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், விழா குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    ×