என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார் மற்றும் மயிலாடுதுறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் ஏ.வி.சி. கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், நாகை மாவட்ட கலெக்டருமான பிரவீன் நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதலில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதி வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் பார்வையிட்டு ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர், தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள சி.சி.டி.வி. மூலம் திரையில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டார். மேலும் வேட்பாளர்களுடைய முகவர்களின் அடையாள அட்டையை வாங்கி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வளாகத்திற்குள் அனுமதி பாஸ் பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேட்பாளருக்கு 3 முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு ஷிப்ட் கணக்கில் ஒருவர் மட்டுமே இங்கு தங்க முடியும் என்றார்.

    தொடர்ந்து சீர்காழி, பூம்புகார் ஆகிய பகுதிகளின் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறைகளை கலெக்டர் பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் பாலாஜி, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    குத்தாலம் அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் வாளவராயன் குப்பம் மேல தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி செல்வி (வயது 40). இவர் கடந்த 7-ந் தேதி மாலை தனது வயலுக்கு சென்ற போது பாம்பு கடித்து விட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது கணவர் தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழியில், குடிபோதையில் லாரி டிரைவர் வீட்டிற்கு வைத்த தீயில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் செல்வமணி (வயது 27). லாரி டிரைவர் இவர், நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் தனது கூரை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென்று வீடு முழுவதும் பற்றி எரிந்தது.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தி்ல் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து வந்து வீட்டிற்கு தீவைத்த செல்வமணியை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறையில் கத்தியால் குத்தி ரவுடி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை ரெயிலடி காவிரி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 48). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள அய்யப்பன் நேற்று முன்தினம் குடிபோதையில் ஆற்றங்கரை தெருவில் வசிக்கும் திருநங்கைகள் சிலரை திட்டிவிட்டு சென்றுள்ளார்.

    இதுகுறித்து திருநங்கைகள் அதே பகுதியை சேர்ந்த வடிவேலு மகன் கணேசன் என்பவரிடம் முறையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கணேசன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அய்யப்பனை தட்டி கேட்டுள்ளார். அப்போது அய்யப்பனுக்கும், கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கணேசனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அய்யப்பனை உருட்டுக்கட்டையால் தாக்கியதோடு கத்தியால் குத்தி உள்ளனர். இதில் கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து காயத்துடன் தப்பி ஓடிய அய்யப்பன் சிறிது தூரத்தில் ஆற்றங்கரையோரம் மயங்கி கீழே விழுந்துள்ளார். அய்யப்பனை தாக்கிய கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நள்ளிரவு 12 மணி அளவில் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு அய்யப்பன் இறந்து கிடந்துள்ளார். அய்யப்பன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பனின் தாய் மாலா(65) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அய்யப்பனை அடித்தும், கத்தியால் குத்தியும் கொன்றது கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த கணேசன்(43), திருவிழந்தூர் பகுதியை சேர்ந்த நீலமேகம் மகன் ரஞ்சித்(19), ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பாட்சா மகன் பஜூலுதீன்(21), அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் அருள்ராஜ்(21) கூறைநாடு மேல ஓத்தசரக்கு தெருவை சேர்ந்த காமராஜ் மகன் மணிகண்டன்(19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
    தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 73.38 சதவீத வாக்குகள் பதிவாகின.
    மயிலாடுதுறை:

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

    அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    மயிலாடுதுறையில் 73.38  சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-

    மயிலாடுதுறை- 70.17%
    பூம்புகார்- 75.39%
    சீர்காழி - 74.60%

    பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பொறையாறு:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆயப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் சலீம் (வயது62). இவர் தனது மனைவி ரஹமத் நிஷாவுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். வீட்டில் ரஹமத் நிஷாவின் தாய் சம்சுல்ஹூதா மட்டும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்சுல்ஹூதா கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த வேலைக்கார பெண் விக்டோரியா கொல்லைப்புறத்திற்கு செல்வதற்காக சந்து வழியாக சென்றுள்ளார். அப்போது கொல்லைப்புறத்தில் இருந்த கிரில் கேட் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் இதுகுறித்து சம்சுல்ஹூதாவின் சகோதரர் அக்பர் அலிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், சம்சுல்ஹூதா வீடு பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 12 பவுன், ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் அக்பர் அலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் திருக்கடையூர் பகுதியில் வியாபாரிகள் விற்பனைக்காக இளநீரை கொண்டு வந்து குவித்துள்ளனர்.
    திருக்கடையூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் கோடை காலம் என்பதால் திருக்கடையூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மதிய வேளையில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டு செல்கிறது.

    அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இளநீர், சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை விரும்பி வாங்கி சாப்பிட்டு தாகத்தை தணித்து கொள்கின்றனர்.

    இதனால் திருக்கடையூர் பகுதியில் வியாபாரிகள் விற்பனைக்காக இளநீரை கொண்டு வந்து குவித்துள்ளனர். திருக்கடையூர் சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல மடவிளாகம், தெற்கு வீதி, கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் இளநீர் விற்பனை அமோகமாக நடந்தது. திருக்கடையூர் பகுதியில் இளநீர் கடைகளில் தான் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    கொள்ளிடத்தில் உள்ள ஒரு கடைக்கு விற்பனைக்காக வந்த கத்தரிக்காய் வித்தியாசமாக இருந்ததால் அந்த கத்தரிக்காய்யை கடையில் காட்சி பொருளாக வைத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திற்கு கும்பகோணம் பகுதியில் இருந்து தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கொள்ளிடத்தில் உள்ள ஒரு கடைக்கு விற்பனைக்காக வந்த கத்தரிக்காய் வித்தியாசமாக இருந்தது. அதாவது ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய்கள் இருந்தன. 

    இந்த கத்தரிக்காய் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் அந்த கத்தரிக்காய்யை கடையில் காட்சி பொருளாக வைத்துள்ளனர். மேலும் அந்த கத்தரிக்காய்யை காய்கறி வாங்க வரும் அனைத்து பொதுமக்களும் அதிசயமாக பார்த்து செல்கின்றனர். 

    ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய் இருப்பதால் இது அதிசயமானது என்றும், சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது போல் கத்தரிக்காயும் மூன்றாக இருப்பதால் அதிர்‌‌ஷ்டமானது என்று கூறி வருகின்றனர்.
    மயிலாடுதுறையில் குளிக்கும்போது மாணவியை படம் பிடித்தவர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்தவர் மாணவியை, அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் மகன் வினோத்கண்ணா, செல்போன் மூலம் குளிக்கும்போது படம் எடுத்துள்ளார். இதனை கண்ட அந்த மாணவியின் தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வினோத் கண்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். 

    வினோத்கண்ணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த மாணவி மயிலாடுதுறை தருமபுரம் சாலை ஆலமரத்தடியை சேர்ந்த நடராஜன் மகன் நவீன் என்பவருடன் நெருங்கி பழகுவதாகவும், இதனால் ஆத்திரமடைந்து வினோத்கண்ணா அந்த மாணவியை குளிக்கும்போது செல்போனில் படம் எடுத்ததும் தெரியவந்தது. 

    இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் (வயது 23), வினோத் கண்ணா (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    பூம்புகார் தொகுதியை சேர்ந்த 3 அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அ.தி.மு.க. நிர்வாகி. தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவரான இவரது வீட்டுக்கு நேற்று இரவு திடீரென வருமான வரித்துறையினர் வந்தனர். உங்கள் வீட்டை சோதனை செய்ய போகிறோம் என கூறி கதவை அடைத்தனர்.

    இதையடுத்து வீட்டில் பல்வேறு அறைகளில் சோதனை செய்தனர். இதில் சில ஆவணங்கள் மற்றும் பார்சல்களை கைப்பற்றினர் பின்னர் அங்கிருந்து சென்றனர்.

    இதேப்போல் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி அருணாசலம் மற்றும் கிடங்கல் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும் செம்பனார்கோவில் முன்னாள் ஒன்றியக் குழு தலைவருமான ஜனார்த்தனம் ஆகிய 2 பேர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இதிலும் சில ஆவணங்கள், பார்சல்கள் பறிமுதல் செய்யப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் 3 வீடுகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் என்ன இருந்தது என்பது குறித்து தகவல் இல்லை.

    தொடர்ந்து அடுத்தடுத்து பூம்புகார் தொகுதியை சேர்ந்த 3 அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பூம்புகார் அருகே சொந்த ஊரில், தி.மு.க. வேட்பாளருக்கு துர்கா ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். கிராமம், கிராமமாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.
    திருவெண்காடு:

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஆகும். நேற்று காலை திருவெண்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். கீழ வீதியில் உள்ள சர்வ சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

    அதனைத் தொடர்ந்து திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வடபாதி, சின்ன பெருந்தோட்டம், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளர் வக்கீல் பன்னீர்செல்வத்தை ஆதரித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் வாக்காளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி மலர்ந்த உடன் தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும். சொந்த ஊரான திருவெண்காடு பகுதியில் வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்ற பாடுபடுவேன்.

    எனவே வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து இரவு, பகலாக பாடுபட வேண்டும் என்றார்.

    துர்கா ஸ்டாலினுடன் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு குமார், ஒன்றிய பொருளாளர் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் அமைப்பாளர் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து அல்லி மேடு, அகர பெருந்தோட்டம், பெருந்தோட்டம் ஆகிய இடங்களில் துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பெருந்தோட்டம் கடைத்தெருவுக்கு வாக்கு சேகரிக்க வந்த அவரை ஊராட்சி தலைவர் மோகனா ஜெயசங்கர் தலைமையில் திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
    அசிக்காடு ஊராட்சி முருகன் தோட்டம் கிராமத்தில் சேதமடைந்து காணப்படும் நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தரப்படுமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த அசிக்காடு ஊராட்சி முருகன் தோட்டம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

    தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி மிகுந்த சேதம் அடைந்து தண்ணீர் குழாய்கள் உடைந்து இரும்பு ஏணி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் தெரியும் வண்ணம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இந்த நீர்த்தேக்க தொட்டியின் மிக அருகில் அய்யனார்கோவில், பிள்ளையார்கோவில், பிடாரியம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்வதால் பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென இடிந்து விழுந்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்பட கூடும் என்று அந்த பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    எனவே முருகன் தோட்டம் கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்டி தர நடவடிக்கை எடுப்பார்களா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    ×