என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரையில் கூட்டுறவு வாரவிழா ெகாடியேற்றத்துடன் தொடங்கியது.
    • மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    முதல் நிகழ்ச்சியாக கூட்டுறவு கொடி ஏற்று விழா மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், திருநகர் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் மற்றும் சின்ன உடப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் நடந்தது.

    விழாவில் உறுதிமொழியை கூட்டுறவுத்துறையயைச் கூட்டுறவாளர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் இணைப்பதிவாளர்கள், துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு விற்பனை மேளா தொடங்கப்பட்டது. இதை கலெக்டர் அனீஷ்சேகர் பார்வையிட்டார்.

    • தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்-ஆண்டு விழா மதுரையில் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு துறையின் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்-ஆண்டு விழா மதுரையில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராமபாண்டியன், மாவட்ட சிறுதொழில் முகமை உதவி கமிஷனர் சுரேஷ் பாபுஜி, மாநில தலைவர் திருமுருகன், துணைத் தலைவர் பால்கனி, செயலாளர் விஜிஸ், இணை செயலாளர்கள் மணிகண்டன், மாரிமுத்து, பொருளாளர் விஜயன், செயற்குழு உறுப்பினர்கள் காஞ்சனா, ஊர்மிளா, செல்வம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், உணவு பொருள் வியாபாரி சங்க கவுரவ தலைவர் ஜெயபிரகாசம், மடீட்சியா தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்பள தொழிலுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், அபராதம் தொகையை ரத்து செய்ய வேண்டும், அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீதான உணவு பாதுகாப்பு துறையின் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • சரசுவதி நாராயணன் கல்லூரியில் பாதுகாப்பான பஸ் பயண கருத்தரங்கம் நடந்தது.
    • மதுரையை விபத்து இல்லாத நகரமாக உருவாக்க மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் பேசினார்.

    மதுரை

    மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இணைந்து மாணவர்கள் "பாதுகாப்பான பேருந்து பயணம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமையில் நடந்தது. மதுரை அரசு போக்குவரத்துக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். துணை மேலாளர் அறிவானந்தம், போலீஸ் உதவி கமிஷனர் செல்வின் ஆகியோர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் பேசுகையில் இளைஞர்கள், மாணவர்கள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இரு சக்கர வாகனங்களை வாங்கி அதன் தொழில்நுட்பம்பற்றி தெரியாமல் இருப்பதாலும், சாலை போக்குவரத்து விதிகளை மீறுவதாலும் அதிகளவு விபத்துகள் ஏற்படுகிறது. இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது.

    பஸ்சில் இடம் இருந்தாலும் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை விரும்புகிறார்கள். அது ஆபத்தான பயணமாகும். கடந்த அக்டோபர் மாதம் முடிய இவ்வாண்டில் 600-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. மதுரையை விபத்து இல்லாத நகரமாக உருவாக்க மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் இருளப்பன், ராமகிருஷ்ணன், விஜயகுமார் நன்றி கூறினர்.

    • கார்த்திகை திருவிழா வருகிற 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடக்கிறது.
    • தீப தினத்தன்று லட்சதீபங்கள் ஏற்றப்படுகின்றன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாத திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடக்கிறது. 1-ந் தேதி காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது.

    விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். விழாவின் முக்கிய நாளான 6-ந் தேதி கார்த்திகை தீபதினத்தன்று மாலையில், கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும்.

    மேலும் அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, கீழமாசிவீதியில் உள்ள அம்மன் தேரடி மற்றும் சுவாமி சன்னதி தேரடி அருகில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வில் எழுந்தருள்கிறார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கோவில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம், உபய வைரக்கிரீடம் போன்ற நிகழ்வுகள் நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோவில் பாலஸ்தாபன பூஜை நடந்தது.
    • இதன் ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பழமையும் பெருமையும் வாய்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பாக நடத்தப் படும் பாலஸ்தாபன பூஜை நடந்தது. இந்த பூஜையையொட்டி காலை 8 மணிக்கு விநாயகர்பூஜை, புண்யா ஹவாசனம்,வாஸ்து சாந்தி செய்யப்பட்டது.

    காலை 11.45 மணிக்கு விமானம், மூலஸ்தான சுவாமிகள், பரிவார மூர்த்திகள், கொடிமரம் உள்ளிட்ட அனைத்திற்கும் கலை இறக்கும் நிகழ்வு நடந்தது. இந்த பூஜையினை முத்துராமன் பட்டர், கார்த்திக் பட்டர் ஆகியோர் செய்தனர். இதன் ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன் தலைமையில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    • திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
    • இதில் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து, வேளாண்மை, ஆடை, வாகனம், அழகு மற்றும் ஆரோக்கியம், உணவு பதப்படுத்தும் முறை, தளவாடங்கள் மற்றும் பொருத்துதல், கற்கள் மற்றும் நகைகள், பசுமை வேலை, சுகாதார பாதுகாப்பு, ஹைட்ரோகார்பன், உள்கட்டமைப்பு உபகரணங்கள், கருவியாக்கம், ஐ.டி., வாழ்க்கை அறிவியல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, சுரங்கம், வண்ணப்பூச்சுகள் மற்றும் பூச்சு, பிளம்பிங், சில்லறை விற்பனை, ரப்பர், விளையாட்டு, தொலை தொடர்பு மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளால் 800-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் இந்த பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பத்தை வருகிற 20-ந் தேதிக்குள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண். 0452-2308216-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பாசிசத்தை நுழைய விடாத வகையில் மாணவரணி மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார்.
    • மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மருதுபாண்டி தலைமையில் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் மாணவரணி, இளைஞர் அணிகளுடன் இணைந்து செயல்படுகிறார். இந்தி திணிப்பு போராட்டத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது தி.மு.க. மாணவர் அணி தான். அப்போது மாணவ

    ரணியில் இருந்தவர்கள் தான் தற்போது அரசியலில் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளனர்.

    கல்லூரிகளில் மாணவரணியில் இருப்பவர்கள் திராவிட மாடலை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் உணர்வு பூர்வமாக இந்தியை எதிர்க்கும் ஒரே இயக்கம் தி.மு.க. மட்டுமே ஆகும். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்க இருக்கிறார்.

    பாசிசத்தை தமிழகத்தில் நுழைய விடாத வகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதல் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,வழக்கறிஞர் கலாநிதி, மாணவர் அணி இணை, துணை அமைப்பாளர்கள் அதலை செந்தில்குமார், பூவை ஜெரால்டு, மண்ணை சோழராஜன், சேலம் தமிழரசன், உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    • ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-விமான நிலைய சாலையில் தனியார் டயர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனிக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கிணறு கம்பெனி வளாகத்தில் அருகே உள்ளது.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் இயற்கை உபாதைக்காக சென்ற முதியவர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் உடைந்திருந்ததை அறியாமல் கிணற்றில் தவறி விழுந்தார்.

    இதைகண்ட அருகில் இருந்த டீக்கடைக்காரர்கள் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இறங்கிய வீரர்கள் முதிவரை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். அதன்பின் அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கிணற்றில் விழுந்த முதியவர் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பசீர் (55) என தெரியவந்தது. ஓட்டல் நடத்தி வந்த இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

    கடந்த 1 வாரத்திற்கு முன்பு பசீர் அங்கிருந்து தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இந்த வழக்கு தொடர்பாக மேலும் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை சேடப்பட்டியை அடுத்த வீராளம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மனைவி ஜோதிமணி (வயது 36). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது.

    சம்பவத்தன்று ஜோதி மணி வீராளம்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், சரமாரியாக அடித்து உதைத்து தப்பி சென்றது. இது தொடர்பாக ஜோதிமணி, சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாண்டி (31), சிவனாண்டி (60), தங்கேஸ்வரன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மதுரை திருமங்கலம் அடுத்த பன்னிகுண்டு, கிழக்கு தெருவை சேர்ந்தவர் போதும்பொண்ணு (வயது 50). இவரது கணவர் சந்திரன். இவர் அங்கு உள்ள ஒரு கோவிலில் மேளக்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிலர், கோவில் திருவிழா நிகழ்ச்சியின்போது முதல் மரியாதை கேட்டதாக தெரிகிறது. இதற்கு போதும்பொண்ணு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 8 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கியது. படுகாயமடைந்த போதும்பொண்ணு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் பெரியபாண்டி, அவரது மகன் பால்பாண்டி, மகள் ஜோதி, பெரிய பாண்டி சகோதரர் சின்னபாண்டி, அவரது மனைவி பாப்பாத்தி, பெரியபாண்டி மனைவி பொன்னுத்தாய், நீலமேகம் மகள் மீனாட்சி ஆகிய 8 பேரிடம் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாடிப்பட்டி அருகே ஜவுளி பூங்காவில் இருந்து வெளியேறிய மழைநீர் வயல்களுக்குள் புகுந்தது.
    • வடிகால் அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளி பூங்கா உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட பனியன் மற்றும் ஆயத்த ஆடை தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் உள்ளது. இந்த ஜவுளி பூங்காவை சுற்றிலும் தடுப்பு சுவர்கள் 4 புறமும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பூங்காவின் தென்மேற்கு புறம் உள்ள கம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. அதனால் அந்தபகுதியில் பெய்த மழைத்தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் வெளியேறி வயல்கள், புளியந்தோப்புகள், தென்னந்தோப்பு பகுதிகளில் புகுந்துவிடுகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    பல ஆண்டுகளுக்கு முன் தாதம்பட்டி கண்மாய் நிரம்பியபின் மாறுகால் செல்லும் ஓடை தேசியநான்குவழிச்சாலை அமைத்ததால் தூர்ந்து போய்விட்டது. இதனால் வயல்வெளிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லவழியில்லாமல் வயலுக்குள் தேங்கி விடு கிறது. எனவே தூர்ந்து போன ஓடைக்கு மாற்றாக புதியதாக மழைவெள்ளம் செல்லும்படியாக வடிகால் அமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக விவசாயி கருப்பையா என்பவர் கூறியதாவது:-

    தாதம்பட்டியில் ஒருங்கி ணைந்த ஜவுளிபூங்கா சுமார் 127ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிகஅளவில் மழைபெய்யும்போது மழை வெள்ளம் காம்பவுண்டுசுவர் இடிந்துவிழுந்ததால் எங்கள் வயல்களில் புகுந்துவிட்டது. இதனால் தற்போது நான் பயிரிட்டுள்ள 4 ஏக்கரில் 300 தென்னைமரங்களிலும், 10 மாமரங்களிலும், 50 செண்டில் உள்ள தீவண புல்லிலும் தண்ணீர்தேங்கி வடிகால் இல்லாததால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    மேலும் அடுத்தடுத்துள்ள தென்னந்தோப்புகளிலும் மழை வெள்ளம் புகுந்து தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஜவுளிபூங்கா தண்ணீர் வெளியில் செல்ல வடிகால் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் பகுதியில் உள்ள ஜெ.பி.நகரில் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து கொள்வது வழக்க மாக உள்ளது.

    இந்த நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் இப்பகுதியில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் இப்பகுதி மக்கள் உதவி பொறியாளரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் 3 நாட்க ளாக மழைநீருடன் கலந்த சாக்கடை நீர் வெளியேறா மல் துர்நாற்றம் வீசுகிறது. இதனை கண்டித்தும், மழை, கழிவுநீரை அகற்றக் கோரியும் இப்பகுதி மக்கள் இன்று அவனியாபுரம் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் நேரில் வந்து மக்களின் கோரிக்கை களை உடனே நிறைவேற்று வதாகவும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதினால் மழை நீரை வடிகால் வாய்க்காலில் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மழை நீரை தேக்கத்தை அகற்றுகிறோம் என உறுதி கூறினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    ×