என் மலர்
மதுரை
- மதுரை மாநகராட்சி புகார் எண்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது.
- இதன் வாயிலாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
மதுரை
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், குறைகளை தெரிவிக்க ஏதுவாக, 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக, புதிய அலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் எண் (7871661787) அறிவிக்கப்பட்டு இருந்தது. அது இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. எனவே பொதுமக்கள் தொலைபேசி மற்றும் மதுரை மாநகராட்சியின் www.mducorpicts.com இணையதளம் மூலம் புகார் தெரிவிக்கலாம். அப்போது சம்பந்தப்பட்டவருக்கு புகார் ஒப்புகை எண், குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இதன் வாயிலாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகாரின் நிலையை அறிந்து கொள்ளலாம். இந்த தகவலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஆந்திராவில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை ஆகியவை கொடிகட்டி பறந்து வருகின்றன. எனவே அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், மீனாட்சி அம்மன் கோவில் உதவி கமிஷனர் காமாட்சி ஆலோசனை பேரில், தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது 21 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த மதன்குமார் (30) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி மதுரையில் விற்று வந்துள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.எஸ்.காலனி போலீசார் கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த செக்கானூரணியை சேர்ந்த குபேந்திரன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் விளாச்சேரி மெயின் ரோடு முனியாண்டி புரம் சந்திப்பில் கஞ்சா விற்ற மகாவிஷ்ணு (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் அ.தி.ம.மு.க. நிர்வாகிகள் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர்.
- ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள், உயர்மட்டசெயல்திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிலைய செயலா ளர்கள் கூட்டம் வருகிற 22-ந்தேதி ஈரோட்டில் நடக்கிறது.கூட்டத்துக்கு அவைத்தலைவர் தாஜீதீன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் பூங்கா பி.கே.மாரி முன்னிலை வகிக்கிறார். துணைப் பொதுச்செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர்
நெல்லை முத்துக்குமார் வரவேற்று பேசுகிறார்.
கழக வளர்ச்சிகப்பணிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான உயர்சாதி பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, தமிழக கவர்னரின் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுச்செயலாளர் வழக்கறிஞர் பசும்பொ ன்பாண்டியன் பேசுகிறார்.
ஈரோடு மாவட்ட செயலாளர், உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார் நன்றி கூறுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வணிக வரி அதிகாரி என கூறி தொழிலதிபரிடம் பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.
- போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.
மதுரை
மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அப்பளம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனில் பேசிய மர்ம நபர் தான் சென்னை வடக்கு மண்டல வணி வரித்துறை இயக்குநரின் உதவியாளர் என கூறியுள்ளார்.
மேலும் உங்கள் நிறுவனத்தில் வரிஏய்ப்பு நடந்துள்ளது. எனவே வருகிற 30-ந் தேதி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவோம். இதில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்றால் ரூ.25 ஆயிரத்தை கூகுள் பே மூலமாக அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
தவறினால் உங்கள் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்படும் என அந்த நபர் மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இதுகுறித்து தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்க தலைவர் திருமுருகனிடம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து விசாரித்த போது போனில் மிரட்டியது மோசடி பேர்வழி என தெரிய வந்தது.
இது தொடர்பாக வணிகவரி இணை ஆணையரிடம் புகார் தரப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை மாநகராட்சியை கண்டித்து நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தை திருமாறன் கண்டனம்.
- சாலையில் கழிவுநீர் ஓடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த 15-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தியது.
மதுரை
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே கீழ சித்திரை வீதியில் மழை நீர் போக வழி இல்லை. பாதாள சாக்கடை கழிவுநீர் போக வழி இல்லை. பக்தர்கள் செல்லும் சாலையில் கழிவுநீர் ஓடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடந்த 15-ந் தேதி மறியல் போராட்டம் நடத்தியது. யாரை ஏமாற்ற இந்த கபட நடமாடுகிறார்கள் என்று தெரியவில்லை.
மதுரை மக்களவை உறுப்பினராகவும் மாநகராட்சி துணை மேயராகவும் தங்களது கட்சியை சேர்ந்தவர்களே இருக்கும்போது இது போன்ற செயல் மக்களை ஏமாற்றும் செயலாகத்தான் அனைவரும் பார்க்கின்றனர். தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளை வேலை வாங்க முடியாமல் மாநகராட்சி அலட்சியமாக இருப்பது போல அலட்டிக்கொண்டு போராட்டம் என்று மக்களை ஏமாற்றும் வேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்திருக்கிறது.
மதுரையில் மட்டுமல்ல தமிழகத்திலேயும் தங்களது கூட்டணி கட்சிகள் தானே ஆட்சி செய்கிறது. எனவே கூட்டணி கட்சியில் வலியுறுத்தி இந்த அவல நிலையை போக்கி இருக்கலாமே. அதை விடுத்து போராட்டம் செய்வதை எந்த வகையில் மக்கள் நம்புவார்கள்.
வேண்டுமானால் இந்த மறியல் போராட்டத்திற்கு பதிலாக மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.பி. மற்றும் துணை மேயர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தானே.
இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.
- செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
- மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயிலின் பயண நேரத்தை குறைப்பது என்று ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. அதன்படி நாளை மறுநாள் (19-ந் தேதி) முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சியில் இருந்து முறையே நண்பகல் 12.10, 12.42, 12.53, 13.45 மணிக்கு பதிலாக, 11.30, 12.02, 12.13, 13.20 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.10 மணிக்கு பதிலாக மாலை 4.25 மணிக்கு, 45 நிமிடங்கள் முன்பாகவே செல்லும்.
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.
- தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது.
மதுரை:
விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், "அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த தனிநீதிபதி முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிலை வைக்கப்பட்ட பின் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் அனுமதி பெறும் வரை சிலையை தகரம் அமைத்து மூடிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அது முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில் சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே இது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "பட்டா இடத்திலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது டின் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல" என வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், "அந்த பகுதியில் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அதோடு அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது" என வாதிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள், "அதிகாரிகள் மனுதாரரின் மனுவை நிலுவையில் வைத்திருப்பது ஏன்? இதனால் காவல்துறையினரே சிரமத்திற்கு ஆளாகின்றனர். முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டது.
ஆகவே அனுமதி பெறும் வரை சிலையை திறக்கக்கூடாது. அதற்கு பொறுப்பேற்று மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது. அதற்கு அனுமதிக்கவும் கூடாது என உத்தரவிட்டனர்.
- கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
- சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
மதுரை
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சாத்தூர் ஓடைப்பட்டி வேட்டுவநாதர் கோவிலில் அய்ப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.
மதுரையில் உள்ள பல்வேறு கோவில்களில் இன்று காலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அங்கு சிறப்பு பூசுகள் நடந்தன. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதூர் மற்றும் விளாச்சேரியில் உள்ள அய்யப்பன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். மேலும் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை முருகன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். பழமுதிர்சோலை முருகன் கோவிலில் மாலை அணிந்த பக்தர்கள், முன்னதாக அழகர்கோவில் ராக்காயி அம்மன் கோவிலில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடினர்.
இதே போன்று மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவில்,அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில், மேலமாசி வீதி நேரு ஆலால விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்றே பலர் மாலை அணிய கோவில்களில் திரண்டதால் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்களாக காட்சி அளித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவில்களிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். விருதுநகரில் சொக்கநாதர் கோவில், பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், ராமர் கோவில் ஆகிய கோவில்களில் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.
சிவகாசியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் பலர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தூரில் சிவன் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னிதானம், வெள்ளகரைப் பிள்ளையார் கோவில், ஓடைப்பட்டி வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். குருசாமி தளபதி முருகன் கன்னிச்சாமி களுக்கு மாலை அணிவித்து அய்யப்ப சாமிக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

மானாமதுரை தர்ம சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மானாமதுரை வைகை ஆற்று கரையில் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் திறக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. அதைதொடர்ந்து அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த துளசிமணி மாலைகளை சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து மாலையணிந்து சபரிமலை செல்ல 48 நாள் விரதத்தை தொடங்கினார்கள்.
சபரிமலை மலையில் கொரோனா கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மானாமதுரையில் இருந்து சபரிமலை செல்ல ஏராளமான பக்தர்கள் மாலையிட்டனர்.
- தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பாலமேடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
- இதில் 10-ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
அலங்காநல்லூர்
சென்னையில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தென் மாவட்ட அணியில் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அவர்கள் சிறப்பாக விளையாடி அந்த அணி தங்கப்பதக்கம் பெற்றது. இதையடுத்து 6 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, உதவி தலைமை ஆசிரியர்கள் விஜித்ரா, முருகன், முதுநிலை ஆசிரியர் செந்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் மதுசிங், சத்தியசீலன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளமாறன், பயிற்சியாளர் சதீஷ்ராஜா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். இதில் 10-ம் வகுப்பு பயிலும் ஆறுமுகம், கவிபாலன் ஆகிய இருவரும் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
- திருமங்கலத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுகன் (வயது31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சித்ரா திருமங்கலம் நகைக்கடையில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் திருமணமாகி 8 மாதம் ஆகிறது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டின் படுக்கை அறையில் சுகன் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து சுகனின் தாய் முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்களது ஊரில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர்.
- தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது பழைய சுக்காம்பட்டி கிராமம். மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இதனை அறிந்த கிராம மக்கள், தங்களின் ஊரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுக்கடைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டினர். இந்நிலையில் மதுக்கடை தொடங்க திட்டமிட்டிருந்த கட்டிடத்தில் நேற்று இரவு மதுபாட்டில்கள் இறக்கி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனை அறிந்த கிராம மக்கள் இன்று காலை மேலூர்-அழகர்கோவில் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரெபோனி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் தாசில்தார் சரவணபெருமாளும் பழைய சுக்காம்பட்டி கிராமத்திற்கு வந்தார். தாசில்தார் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தங்களது ஊரில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதில் சமரசம் அடைந்த கிராம மக்கள், மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்து விலையில்லா செட்டாப் பாக்ஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
- 16 ஆயிரத்து 702 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 36.40 லட்சம் டிஜிட்டல் தர நிலை வரையறை மற்றும் உயர் வரையறை செட் ஆப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மதுரை:
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தனது சேவையை தொடருவதற்கு முன்னர் ஒரு சில தனியார் நிறுவனங்கள் கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வந்ததோடு கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அதிகளவு கட்டணத்தை வசூலித்து வந்தன.
2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் குறைந்த கட்டணத்தில், நிறைந்த கேபிள் டி.வி. சேவையை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை புனரமைத்து புத்துயிர் அளித்தார்.
இதனால் 4.94 லட்சமாக இருந்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 474 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக கீழ் இணைப்புகள் வழங்கப்பட்டு 70.52 லட்சமாக உயர்ந்தது.
இந்தியா முழுவதும் கேபிள் டி.வி. சேவைகளை நான்கு கட்டங்களில் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்தது.
இதையடுத்து 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி டிஜிட்டல் சேவையை தொடங்கி வைத்து விலையில்லா செட்டாப் பாக்ஸ் விநியோகத்தை தொடங்கி வைத்தார். அதன் மூலம் 16 ஆயிரத்து 702 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 36.40 லட்சம் டிஜிட்டல் தர நிலை வரையறை மற்றும் உயர் வரையறை செட் ஆப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சென்னை, சேலம், கோவை, திருச்சி மதுரை ஆகிய நகரங்களில் உயர் வரையறை கேபிள் டிவி சேவையை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதுதான் படிப்படியாக இன்றைக்கு ஆலமரம் போல் வளர்ந்திருக்கிற அரசு கேபிள் டி.வி. நிறுவனம். பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 595 அரசு இ சேவை மையங்களை நிர்வாகித்து வந்தது.
அரசு கேபிள் டிவியின் கீழே 2017 ஏப்ரல் முதல் 36 லட்சம் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 21 லட்சம் செட்டாப் பாக்ஸ் மட்டுமே செயலில் உள்ளன. 11 லட்சம் பாக்ஸ்கள் செயல்பாட்டில் இல்லை. தி.மு.க. அரசுக்கு ஏழை எளிய மக்கள் மீது அக்கறை இல்லை என்பதை தான் இது காட்டுகிறது.
அரசு கேபிள் டி.வி. வாடிக்கையாளர்கள் 5 லட்சம் பேர்களை தனியாருக்கு மாற்றம் செய்திருப்பது அரசு கேபிள் டிவிக்கு மூடுவிழா நடத்துகிற உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தனியாருக்கு சிவப்பு கம்பளம் விரித்து தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த செயலுக்கு ஒப்புக்கு தப்பாக சேர்மனை நீக்கி இருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆலமரமாக வளர்ந்திருக்கிற அரசு கேபிள் நிறுவனத்தின் மீது மறைமுகமாக கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு யுத்தமாக பார்க்கிறோம். இந்த நடவடிக்கை அரசு கேபிள் டிவியை காப்பாற்றவா? அல்லது மூடுவிழா நடத்துவதற்கா? என்று அரசு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






