என் மலர்
மதுரை
- பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நடந்தது.
- தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது என விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.
மதுரை
மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள கலைஞர் திடலில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தின ராக தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,200 கிரிக்கெட் அணிையச் சேர்ந்த 13 ஆயிரத்து 200 வீரர்களுக்கு கிரிக்கெட் கிப்ட்டுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதா வது:-
இளைஞர் அணி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு நான் மதுரையில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினேன்.
அதனை ஒரு மாநாடு போல் அவர் நடத்தினார். தற்போது பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்னேன். இந்த குறுகிய காலகட்டத்திற்குள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி ஒரு மாபெரும் மாநாடு போல் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.
தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு பார்த்து பார்த்து பல திட்டங்களை செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழக அரசியலில் இளைஞர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார். மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேல், எஸ்ஸார் கோபி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், சிறை செல்வன், மேயர் இந்திராணி, இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி, மூவேந்திரன், மதன்குமார், விமல், கார்த்திக், திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், மன்றத்தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீரராகவன், தி.மு.க. தீர்மானக்குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவனியாபுரம் கிழக்குப்பகுதி இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் காளிதாஸ், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், திருமங்கலம் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகர செயலாளர் மு.சி.சோ. பா.ஸ்ரீதர், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கோபி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா, சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குருவித்துறையில் திருமண பத்திரிகை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
- இதில் ஆர். பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சோழவந்தான்
எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க. 51-வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதியன்று டி.குன்னத்தூரில் நடை பெறுகிறது.
இதனை முன்னாள் முதல்-அமைச்சர், எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இதற்கான திருமண அழைப்பிதழை மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், ஜெனகை நாராயண பெருமாள் கோவில், குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பாலகிருஷ்ணன், பேரூர் கவுன்சிலர்கள், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் பட்சத்திலுமே கண்மாய் நிரம்பும்.
- கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.
திருப்பரங்குன்றம்:
தமிழகத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் நிலையூர் கண்மாயும் ஒன்று. மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கண்மாய் 742 ஏக்கர் பரப்பளவும், சுமார் 27 அடி ஆழமும் கொண்டுள்ளது. பெரியமடை, சின்னமடை, உள்மடை என்று 3 மடைகளும், பெரிய கலுங்கு, சின்னகலுங்கு என்று 2 கலுங்கும் கொண்டதாகும். 1712 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கொண்ட கண்மாயாக உள்ளது. 25 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது.
மன்னர் காலத்து கண்மாய் என்ற பெருமை கொண்ட போதிலும் கனமழை பெய்யும்பட்சதிலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் பட்சத்திலுமே கண்மாய் நிரம்பும்.
அந்தவகையில் கடந்த சில ஒரு வாரத்திற்கு முன்பு தொடர் கனமழை பெய்தாலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கண்மாய் நிரம்பியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கனமழை கொட்டியது. மேலும் கால்வாய் வழியாக உபரி தண்ணீர் வந்தது. அதனால் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று மறுகால் பாய தொடங்கியது. கடந்த 2018-ம் ஆண்டில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம் கண்மாய் சார்ந்த நீர்பிடிப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் பலவீனமான கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2017-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.
- இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் வாங்கவேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்டத்தகுந்தது.
மதுரை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்டத் தகுந்தது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகிலுள்ள பிற மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டு உள்ளன.
கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடைவதில்லை. இதற்கு மாற்றாக, தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தும் பலன் இல்லை. எனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என
கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. நன்மை தருவதும் கூட. இதுதொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்து உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது சம்பந்தமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மனுதாரர் முன்கூட்டியே யூகத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர், தமிழக வேளாண்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
- மதுரை ஐகோர்ட்டில் 3 மாதங்களில் 6 ஆயிரத்து 300 வழக்குகளை நீதிபதிகள் விசாரித்தனர்.
- இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை ஐகோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு, பிரதான அமர்வாக இருந்து, பொது நல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிபதிகள், கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் நவம்பர் வரை 6 ஆயிரத்து 300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம்.
இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறி ஞர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தனர்.
- மதுரையில் போலி ஆவணம் தயார் செய்து பெண்ணிடம் நிலம் மோசடி செய்தனர்.
- இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
கர்நாடக மாநிலம் பெங்களூரு, சி.வி. ராமன் நகரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி சாந்தி ஷீலா. இவர் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நாகமலை புதுக்கோட்டை யில் எனது கணவர் ராஜசேகரன் மற்றும் சென்னை கொளத்துரை சேர்ந்த அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேருக்கும் 11 சென்ட் மனை மற்றும் வீடு உள்ளது.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன், அவரது மகன் ஸ்ரீதர் ஆகியோர் திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன் என்பவர் மூலம், போலி ஆவணம் தயார் செய்துள்ளனர். அதற்கான விற்பனை உரிமை, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிகுமார் என்பவருக்கு தரப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர்கள் மேலபொ ன்னகரம், சண்முகானந்தா புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் இளங்கோ பாக்யராஜ் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றுள்ளனர். இதற்கு நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை கொளத்தூர், காவேரி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தி, இவர்களது மகன் ஸ்ரீதர், திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பழனிகுமார், நாகமலை புதுக்கோட்டை சிவபாண்டி, திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன், நாகமலை புதுக்கோட்டை ஆதிமூலம், இளங்கோ பாக்யராஜ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஒரே குடும்பத்தை சேர்ந்த3 பேர் சிக்கினர்.
மதுரை
மதுரையில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் ஆலோசனையின் பேரில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று மதுரை கட்டபொம்மன் நகர், குதிரை பாலம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளுடன் வந்த 6 பேரை பிடித்து சோதனை செய்தனர். மேலும் அவர்களிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூடைகளை பிரித்து பார்த்தனர்.
அதில் 2 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.10 ஆயிரத்து 450 ரொக்கம் இருப்பது கண்டறிப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மீனாம்பாள்புரம், காமராஜர் தெரு சேதுபதி (29), கார்த்திக் (25), மகாலிங்கம் மகன் பரத் (24), சேதுபதி மனைவி ரம்யா (22), பவளவல்லி (45) செல்லூர் பிரபு மனைவி சசிகலா (38) என்பது தெரிய வந்தது.
இதில் பவளவல்லி, சேதுபதி, ரம்யா ஆகிய 3 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பவளவள்ளியின் மகனான சேதுபதியின் மனைவி ரம்யா ஆவார். மேற்கண்ட 3 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கூட்டு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 3 யானைகளுக்கு வனத்துறை உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி விட்டது.
- தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் சுமார் 24 வளர்ப்பு யானைகள் உள்ளன. அவைகள் பாகன்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 3 கோவில் யானைகளின் நிலை, உரிமை சான்றிதழ் ஆகிவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் மதுரை மாவட்ட வனத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு மதுரை மாவட்ட வனத்துறை பதில் அளித்து கடிதம் அனுப்பி உள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகளுக்கான உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் பார்வதி (மீனாட்சி அம்மன் கோவில்), தெய்வானை (திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவில்), சுந்தரவல்லி (கள்ளழகர் கோவில்) உள்பட 7 யானைகள் பராமரிக்கப்படுகிறது. இவற்றுக்கு தமிழ்நாடு மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டம்-2011-ன் படி வனத்துறை உரிமை சான்றிதழ் வழங்கி வருகிறது. இதில் யானையின் எடை, வயது, பெயர், உயரம், உடல்நிலை, புகைப்படம் உள்பட பல்வேறு விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.
தமிழ்நாடு முதன்மை தலைமை வனவிலங்கு காப்பாளர் மூலம் வழங்கப்படும் இந்த சான்றிதழ், இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான 3 கோவில் யானைகள் விஷயத்தில் காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அது கோவில் யானைகள் பராமரிப்பில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
புதுச்சேரி யானை மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகள், உரிய சான்றிதழின்றி உள்ளது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருமங்கலத்தில் நடந்த கலைத்திருவிழாவில் 31 பள்ளிகள் பங்கேற்றன.
- இந்த கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
திருமங்கலம்
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2022-2023ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா திருமங்கலம் அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
6-ம் வகுப்பு முதல் முதல் 8-ம் வகுப்பு வரை வரையிலான மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட உதவித்திட்ட அலுவலர் கார்மேகம், மாவட்ட கல்வி அலுவலர் செல்வகணேஷ், வட்டார கல்வி அலுவலர்கள் சின்னவெள்ளைச்சாமி, நமச்சிவாயம், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீதேவி சண்முகம் ஆகி யோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கர்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த கலைதிருவிழாவில் 1500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாநில மற்றும் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறலாம் என்பதால் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- பொது மக்கள் குறைகளை தெரிவித்தால் நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்துவேன் என்று அய்யப்பன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் துணைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா, பொறுப்பு ஆணையாளர் பாண்டித்தாய் மற்றும் துணைத் தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் கலந்து கொண்டார். உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், பேனர்கள் வைக்கவும் ஏற்கனவே உள்ள தடையை அமல் படுத்தவும், மீறுவோர் மீது ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
மேலும் திருமணம் மண்டபத்திற்கு சீல் வைக்க கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளை விரைவு படுத்துவது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் இரவில் தூங்க முடியாத நிலை உள்ளது. கொசு மருந்து அடித்தாலும் மூச்சு திணறல் ஏற்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுத்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.
உசிலம்பட்டி நகர் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி பொது இடத்தில் பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம் விதித்து பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும். மேலும் வார்டுகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை என்னிடம் தெரிவித்தால் அதற்கு நிதி ஒதுக்கி வேலைகள் நடைபெற செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டரின் மறுஉத்தரவு வரும்வரை திருமங்கலம்-கப்பலூர் வாகனங்களுக்கு சுங்க கட்டண விலக்கு தொடரும்.
- வருகிற 2-ந் தேதி கலந்து ஆலோசித்து போராட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற கடந்த வாரம் திருமங்கலம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் கப்பலூர் போராட்ட எதிர்ப்பு குழு மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்தை அழைத்து சமரச கூட்டம் நடந்தது.
கூட்டத்தின் முடிவில் கோட்டாட்சியர் அபிநயா, இந்த கூட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும். அதுவரையில் திருமங்கலம், கப்பலூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு நடைமுறை தொடரும் என்றார்.
பேச்சுவார்த்தைக்கு பின் பேராட்டக்குழுவினர் நிருப ர்களிடம் கூறுகையில், திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் உட்பட தென்காசி - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் அனைத்திற்கும் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வருகிற 2-ந் தேதி கலந்து ஆலோசித்து போராட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
கூட்டத்தில் திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமன், டி.எஸ்.பி. வசந்தகுமார், திருமங்கலம் நகராட்சி கமிஷனர் பேலன்ஸ் லியோன், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், தி.மு.க. நகர செயலாளர் ஸ்ரீதர் உட்பட பலர் இருந்தனர்.
- வாடிப்பட்டி யூனியன் குட்லாடம்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- 6 மாநில ரெட்டி நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி சக்தி மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தியது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி யூனியன் குட்லாடம்பட்டியில் 6 மாநில ரெட்டி நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி சக்தி மருத்துவமனை இணைந்து எலும்புமூட்டு நோய் மற்றும் மகப்பேறு நோய்க்கான இலவச மருத்துவமுகாம் நடந்தது. யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார். சங்க தலைவர் வைத்தியலிங்கம் தொடங்கி வைத்தார். ஆலோசகர் பட்டாபிராமன், துணைத் தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் கிருபாகரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கதிரவன் வரவேற்றார்.
அகில இந்திய ரெட்டி நல சங்க பொருளாளர் கே.ஆர்.முரளிராமசாமி, திருமங்கலம் மோனிகா சதீஷ், கார்த்திக் செல்வம் ஜெ.சி.பி.ரங்கசாமி, பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர். மருத்துவர்கள் வெங்கடேஷ் பாபு, சுமதி தலைமையில் மருத்துவகுழுவினர் 345 பேருக்கு மருத்துவஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.






