என் மலர்tooltip icon

    மதுரை

    • ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நிரந்தரம் சட்டம் கொண்டு வந்தவர் மோடி என ஓ.பன்னீர் செல்வம் பேட்டியில் பேசினார்.
    • தற்போது சில அமைப்புகள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர்

    அவனியாபுரம்

    சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு பிரச்சினை வந்தபோது அன்று தமிழக அரசு சார்பில் முதல்வராக இருந்த நான், பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அவரின் உதவியால் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்கின்ற வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் தற்போது வரை அப்படியே இருக்கிறது.

    தற்போது சில அமைப்புகள் சில சந்தேகங்களை எழுப்புகின்றனர். அதற்கு தமிழக அரசு தான் உரிய பதில்களை அளிக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி., கோபாலகிருஷ்ணன், ஐயப்பன் எம்.எல்.ஏ., முருகேசன், இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் வையத்துரை மாரி, ஒத்தக்கடை பாண்டியன், தேன் சுகுமாறன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா, மார்க்கெட் ராமமூர்த்தி, உசிலை பிரபு, ஆரைக்குடி முத்துராமலிங்கம் உள்பட பலர் இருந்தனர்.விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அருகில் கோபாலகிருஷ்ணன் எம்.பி. உள்பட பலர் உள்ளனர்.

    • நவீன எந்திரம் மூலம் சாக்கடை அடைப்பை அகற்றும் பணிைய மேயர் நேரில் ஆய்வு செய்தார்.
    • இதில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகரின் இதய பகுதியாக, மேலமாசி வீதி உள்ளது. தெற்குமாசி-மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள டி.எம்.கோர்ட் அருகில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடி வந்தது. இதனால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி வியாபாரிகள் மதுரை மாநகராட்சியிடம் புகார் கொடுத்தனர்.

    அதன்படி ஊழியர்களும் சாக்கடையை அடைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்து கொடுத்தனர். ஆனாலும் அந்த பகுதியில் சாக்கடை அடைப்பு தொடர்கதையாக நீடித்து வந்தது. இதற்கிடையே மதுரை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் பாதாள சாக்கடை அடைப்பை உறிஞ்சி அகற்றும் வகையில், அதிநவீன எந்திரத்துடன் கூடிய வாகனங்களை கொள்முதல் செய்து உள்ளது.

    நவீன எந்திரம் மூலம் இன்று காலை டி.எம்.கோர்ட்டு சாக்கடை அடைப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் வாயிலாக அங்கு தொடர்கதையாக நீடித்து வந்த சாக்கடை அடைப்பு பிரச்சனைக்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இந்த பணியை மாநகராட்சி மேயர் இந்திராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை- போடி இடையே விரைவில் பயணிகள் ரெயில் முழுமையாக இயக்கப்படும்.
    • மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை - தேனி வரை பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தேனி - போடி இடையே 15 கிமீ தொலைவுக்கான அகல ரெயில் பாதை பணிகள் தற்போது முடிந்து உள்ளன. இங்கு ஏற்கனவே ரெயில் என்ஜின் விடப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

    தேனி - போடி புதிய அகல ரெயில் பாதையில் நேற்று 120 கி.மீ வேகத்தில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி போடியில் இருந்து புறப்பட்ட ரெயில் என்ஜின், தேனிக்கு 9 நிமிடங்கள், 20 நொடியில் சென்றது. இந்த ஆய்வின் போது லோகோ பைலட் முத்துகிருஷ்ணன், உதவி லோகோ பைலட் அய்யனார் ஆகியோர் ரெயில் இன்ஜினை ஓட்டினார்கள். தேனி- போடி அகல ரெயில் பாதை சோதனையின் போது தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    மதுரை- தேனி இடையே பயணிகள் ரெயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. தேனி முதல் போடி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. எனவே மதுரை-போடி இடையே பயணிகள் ரெயிலை முழுமையாக இயக்குவது என்று மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 423 கிலோ புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது.
    • போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுவதாக சமயநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    திண்டுக்கல்-திருமங்கலம் ரோட்டில் சமயநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனசோதனை நடத்தப்பட்ட இடத்தில் இருந்து சற்று தொலைவில் ஒரு ஆம்னி பஸ், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.

    அதன் அருகில் நின்ற 2 கார்களில் சில நபர்கள் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு இருந்தனர். எனவே அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பெட்டியை சோதனை செய்து பார்த்தனர்.

    அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 423 கிலோ புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அதுகுறித்து விசாரித்தபோது புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளை ஆந்திராவில் இருந்து மதுரைக்கு ஆம்னி பஸ்சில் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பஸ் மற்றும் கார்களில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி பஸ் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆம்னி பஸ்சின் உரிமையாளரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுனில் முத்தையா, டிரைவரான பாலாஜி பீடா மண்டலம் நாயுடு வீதியை சேர்ந்த டோட்டா பாண்டி, கண்டக்டரான கடப்பாவை சேர்ந்த வெங்கடராமி ரெட்டி, வல்லபரத்தை சேர்ந்த தாடிக்கொண்டா, பெங்களூருவை சேர்ந்த சந்துரு, மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் அருண்குமார், கோசாகுளம் சிவசக்தி நகர் டேவிட் தினகரன், ராஜபாளையம் டி.பி. மில் ரோடு ராஜேந்திரன், சிவா ஆகிய 9 பேரை சமயநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து ஆம்னி பஸ்சின் உரிமையாளர், டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மதுரையில் உள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.

    இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
    • தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றவை. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா அன்று சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், பெரிய சப்பரம் போன்ற தேர்களில் எழுந்தருளி கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடைவர்.

    இதில் அம்மன் தேரை பெண்கள் இழுப்பது தனிச் சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி சப்பர திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 16-ந் தேதி காலை 5 மணிக்கு நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினம் மார்கழி 1-ந் தேதி தொடங்குவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேர் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    அஷ்டமி திருவிழா நடைபெற உள்ளதால் சப்பரம் உலா வரும் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
    • அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை மெயின்ரோட்டில் அரசு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதை நோட்டமிட்ட மர்மநபர் தலைகவசம் அணிந்தபடி ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த கற்களை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை திறக்க முயன்றார்.

    இதனால் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த நபர் ஏ.டி.எம்.எந்திரத்தில் கற்களால் உடைக்க முயன்றார். அப்போது திடீரென அதிக சத்தத்துடன் அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேறி மோட்டார் சைக்களில் தப்பினார்.

    அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையம் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாட்டின் வயிற்றுப்பகுதியில் செரிக்காத பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
    • பசுவின் வயிற்றில் இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்றவையும் இருந்தன.

    மதுரை:

    மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்தவர் பரமேசுவரன். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிர் இனத்தை சேர்ந்த பசு ஒன்றை வாங்கினார். அந்த பசு, 2 மாதங்களுக்கு முன்பு கன்று ஈன்றது. அதன்பின்னரும், பசுவின் வயிறு பெரிதாக இருந்தது.

    எனவே பரமேசுவரன் சந்தேகம் அடைந்து, பசுவை மதுரை கால்நடைத்துறை பன்முக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அந்த பசுவை கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்ததில், மாட்டின் வயிற்றுப்பகுதியில் செரிக்காத பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பசுவிற்கு டாக்டர்கள் குழுவினர், அறுவை சிகிச்சை செய்தனர்.

    அந்த பசுவின் வயிற்றில் தேங்கி இருந்த பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள் மொத்தமாக வெளியே எடுக்கப்பட்டன.

    சுமார் 65 கிலோ எடையில் அந்த கழிவு பொருட்கள் இருந்தன. மேலும் இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்றவையும் இருந்தன. இந்த அறுவை சிகிச்சையானது, சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

    அந்த பசுவும், அதன் கன்றும் மதுரை தல்லாகுளம் பன்முக ஆஸ்பத்திரியில் பராமரிக்கப்பட்டு நல்ல ஆரோக்கியத்துடன் நேற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு
    • கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக நடவடிக்கை

    தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் அர்ச்சகர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் தடையை அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர். 


    மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த ஏற்கனவே தடை உள்ளது. செல்போன்களுடன் செல்லும் பக்தர்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான லாக்கர்களில் செல்போனை வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். இந்நிலையில் அனைத்து கோவில்களிலும் செல்போன்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைமுறை இனி அனைத்துக் கோவில்களிலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மதுரையில் ஷாரிக் மதுரை நேதாஜி ரோட்டில் தங்கியிருந்தது செல்போன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
    • ஷாரிக் எங்கு தங்கியிருந்தான்? என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. இது உளவுத்துறைக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மதுரை:

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் 19-ந்தேதி குக்கர் குண்டு வெடித்தது. இதில் தொடர்புடைய ஷாரிக் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

    இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கும் மற்றும் கேரளாவுக்கும் சென்று திரும்பியது தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஷாரிக் சென்ற இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அவன் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் கவுரி அருண்குமார் என்ற பெயரில் நவம்பர் 3-ந் தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் தங்கி இருந்துள்ளான்.

    அதன் பின்னர் அவன் மதுரைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப்பெட்டியில் வந்துள்ளான். இதன்பிறகு நாகர்கோவிலுக்கு சென்ற ஷாரிக் அங்கு மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் 'பிரேம்ராஜ்' என்ற பெயரில் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி இரவு வரை 4 நாட்கள் தங்கி இருந்துள்ளான். இதுவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஆனால் ஷாரிக் மதுரை வந்து எங்கு தங்கினான்? என்பது இன்று கண்டுபிடிக்கப்படவில்லை. அவன் பதுங்கியிருந்த இடம் மர்மமாக உள்ளது. அதுபற்றி தெரியாத அளவுக்கு அவனுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளனர்.

    அவனுக்கு அடைக்கலம் கொடுத்த நபர்கள் யார்? யார்? என்பதும் தெரியவில்லை. இதனை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். போலீசார் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மர்மமான இடத்தில் ஷாரிக்கை தங்க வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் மதுரையில் ஷாரிக் மதுரை நேதாஜி ரோட்டில் தங்கியிருந்தது செல்போன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அவன் நவம்பர் 6-ந் தேதி நள்ளிரவு வந்துள்ளான். அவன் 8-ந் தேதி மதியம் வரை தங்கியிருந்து உள்ளான். இருந்தபோதிலும் ஷாரிக் எங்கு தங்கியிருந்தான்? என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. இது உளவுத்துறைக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தற்போது தேசிய பாதுகாப்பு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மத்திய உளவுத்துறை 'மதுரைக்கு வந்து சென்ற ஷாரிக் போலீசாரால் எளிதில் அணுக முடியாத இடத்தில் தங்கி இருந்துள்ளான். இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க முடியவில்லை. மதுரையில் தங்கியிருந்த ஷாரிக் பற்றி இன்னும் முழுமையாக அறியமுடியவில்லை. இதில் உண்மையை கண்டுபிடிப்பதில் உளவுத்துறை அதிகாரிகள் முழு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    • சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
    • ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு.

    மதுரை

    திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் 1-வது பிட், கைத்தறிநகர் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

    மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கைத்தறிநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் போர்டுகளில் அரசு விதிமுறையின்படி அந்த வண்டியின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும்.
    • விதிமீறிய வண்டிகளை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும்.

    மதுரை:

    கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு பிறப்பித்துள்ள முறையில் தான் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.

    ஆனால் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்களின் படங்களை நம்பர் பிளேட்டில் எழுதுவது மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் எழுதி கொள்கின்றனர். இது சட்டவிரோதமானது.

    இதுகுறித்து மாவட்ட போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சட்டவிரோதமாக இருக்கும் வாகனத்தின் நம்பர் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி இருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திலக் குமார் ஆஜராகி பேசும்போது, மனுதாரர் சந்திரசேகர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கும்போது கோரிக்கையை மட்டும் வைக்கவில்லை சட்டவிரோத நம்பர் போர்டுகளை அகற்றவில்லை எனில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் மனு அளித்துள்ளார் என்பதை சுட்டி காட்டினார்.

    இதனை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். ஒரு கோரிக்கை வைக்கும்போது இதுபோன்று மிரட்டும் தொனியில் மனுவின் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம் என கூறினர்.

    மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் போர்டுகளில் அரசு விதிமுறையின்படி அந்த வண்டியின் நம்பர் மட்டுமே இடம்பெற வேண்டும். வேறு எந்த வகையிலும் எழுத்தோ தலைவர்களின் படமோ, நடிகர்களின் படமோ இடம்பெற கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வாகன போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறையினர் இதுகுறித்து தினந்தோறும் வாகன சோதனை நடத்த வேண்டும்.

    விதிகளை மீறிய நம்பர் போர்டுகளை அகற்ற வேண்டும். விதிமீறிய வண்டிகளை பறிமுதல் செய்து அதிகபட்ச அபராதங்கள் விதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • பிச்சி பூக்கள் ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 1,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
    • மற்ற பூக்களான செவ்வந்தி, அரளி, சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளன.

    மதுரை:

    மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்கள் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளிலேயே பனி காரணமாக மொட்டுக்கள் கருகும் நிலையால் மகசூல் வெகுவாக குறைந்துள்ளன.

    மதுரை மாவட்டம் எலியார்பத்தி, வலையங்குளம், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 50 டன்னுக்கு மேல் மல்லிகை பூக்கள் வரத்து இருக்கும். தற்போது பனிப்பொழிவு காரணமாக மகசூல் குறைந்ததால் மதுரை மார்க்கெட்டுக்கு மல்லிகை பூக்களின் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது.

    இதன் காரணமாக பூக்களின் விலை வரலாறு காணாத அளவில் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 1 கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூக்கள் இன்று ரூ.2 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. வரும் காலங்களிலும் மல்லிகை பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் பிச்சி, முல்லை பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பிச்சி பூக்கள் ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை பூக்கள் 1,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    இது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. மற்ற பூக்களான செவ்வந்தி, அரளி, சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளன.

    விலை உயர்வு காரணமாக மல்லிகை பூக்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் பிச்சி மற்றும் முல்லை பூக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    ×