search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 யானைகளுக்கு வனத்துறை உரிமை சான்றிதழ் காலாவதி
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதியை படத்தில் காணலாம்.

    3 யானைகளுக்கு வனத்துறை உரிமை சான்றிதழ் காலாவதி

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 3 யானைகளுக்கு வனத்துறை உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி விட்டது.
    • தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு முழுவதும் கோவில்கள் மற்றும் மடங்களில் சுமார் 24 வளர்ப்பு யானைகள் உள்ளன. அவைகள் பாகன்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் 3 கோவில் யானைகளின் நிலை, உரிமை சான்றிதழ் ஆகிவை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் மதுரை மாவட்ட வனத்துறையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு மதுரை மாவட்ட வனத்துறை பதில் அளித்து கடிதம் அனுப்பி உள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகளுக்கான உரிமைச் சான்றிதழ் காலாவதியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் பார்வதி (மீனாட்சி அம்மன் கோவில்), தெய்வானை (திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவில்), சுந்தரவல்லி (கள்ளழகர் கோவில்) உள்பட 7 யானைகள் பராமரிக்கப்படுகிறது. இவற்றுக்கு தமிழ்நாடு மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டம்-2011-ன் படி வனத்துறை உரிமை சான்றிதழ் வழங்கி வருகிறது. இதில் யானையின் எடை, வயது, பெயர், உயரம், உடல்நிலை, புகைப்படம் உள்பட பல்வேறு விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.

    தமிழ்நாடு முதன்மை தலைமை வனவிலங்கு காப்பாளர் மூலம் வழங்கப்படும் இந்த சான்றிதழ், இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான 3 கோவில் யானைகள் விஷயத்தில் காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    தமிழ்நாடு வளர்ப்பு யானை மேலாண்மை மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் வளர்ப்பு யானையை பராமரிக்க 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அது கோவில் யானைகள் பராமரிப்பில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    புதுச்சேரி யானை மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானை திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில் யானைகள், உரிய சான்றிதழின்றி உள்ளது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×