என் மலர்tooltip icon

    மதுரை

    • ஓய்வுபெறும் நாளில் ஊரக வளர்ச்சி- ஊராட்சித்துறை பணிநீக்கத்தை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் அண்ணா பஸ் நிலையம் மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்்ப்பாட்டம் நடந்தது.

    ஓய்வூதியர்கள் மீதான நிலுவை ஒழுங்கு நடவ டிக்கைகளின் மீது தாமத மின்றி விசாரணை நடத்தி நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

    ஓய்வூதியர் குறை தீர்வு கூட்டத்தை மாநில, மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தி நிலுவை இனங்களை தீர்வு காண வேண்டும். ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு பெற்றோர்-ஓய்வு பெற உள்ளவர்களுக்கான தணிக்கைத்தடை கூட்டமர்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில, மாவட்ட நிர்வாகிகள் கிருபாகரன் சக்திராஜ், ஜெயராமன், சொக்கலிங்கம், தினகரசாமி, ஜெயசீலன், ராஜேந்திரன், கோமதி, பரமேசுவரன், அனைத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பால்முருகன், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேசினர்.

    அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நிறைவு ரையாற்றினார். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    • திருமங்கலத்தில் நர்சிங் கல்லூரி மாணவி திடீரென இறந்தார்.
    • பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி போலீஸ் சரகம் குராயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையத்துரை. இவருடைய மகள் பவானி(19). இவர் திருநகரில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று கல்லூரி செல்வதற் காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது பவானி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பவானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நூலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை
    • தமிழ் மொழியை வளர்க்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், மதுரையில் உள்ள உலக தமிழ் சங்க கட்டிடத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் கூடிய பிறமொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.

    இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தேவையான நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும் நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில், பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    • காமன்வெல்த் செஸ் போட்டியில் மதுரை மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
    • சர்வதேச அளவிலான செஸ் போட்டி களில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை.

    மதுரை

    சர்வதேச காமன்வெல்த் யூத் செஸ் போட்டி இலங்கையில் நடந்தது. இதில் மதுரை டி.எஸ்.பி. நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா (வயது 14) இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

    அவர் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான செஸ் போட்டி யில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற கனிஷ்கா கூறுகையில், "செஸ் விளையாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறேன்.

    மாநில அளவில் தொடங்கி, தேசிய அளவில் முன்னேறி, இன்றைக்கு சர்வதேச அளவில் சாதனை படைத்தது மகிழ்ச்சி தருகிறது. இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும், ருமேனியாவில் நடந்த சர்வதேச போட்டியில் 6-வது இடமும் கிடைத்தது.

    இந்த போட்டிகள் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல உதவியாக இருந்தது. சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை. இதற்காக தினமும் 10-12 மணி நேரம் வரை கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன்" என்றார்.

    கனிஷ்காவுக்கு, தர்ஷனி செஸ் அகாடமி பயிற்சியாளர் ராஜதர்ஷினி மற்றும் நிர்வாகிகள் அழகு செந்தில்வேல், மணிமாறன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • ராஜாஜி பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    • இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு தவழும் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில், மதுரை ராஜாஜி சிறுவர் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித கட்டணமுமின்றி அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 6 மாதமாக மாற்றுத்திறனாளிகள் கண்டிப்பாக நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டணமின்றி சென்று வந்ததைபோன்று மீண்டும் மாற்றுத்திறனாளிகள் பூங்காவிற்கு இலவசமாக செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    • மதுரையில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி ‘பார்’ நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனைத்தொடர்ந்து பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக பார் செயல்படுவதாக தகவல் வந்தது. இது தொடர்பாக விசாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமை யிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஜெய்ஹிந்த்புரம் டாஸ்மாக் கடைக்கு அருகில் சட்ட விரோதமாக பார் இயங்கி வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அனுமதியின்றி பார் நடத்தியதாக பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 61), சோலையழகுபுரம், ராமமூர்த்தி நகர் பன்னீர்செல்வம் ( 49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய தினகரன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது.
    • மதுரையில் 34 மாதங்களில் 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகரில் மதுரை டவுன், மதுரை தெற்கு, தல்லாகுளம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மேற்கண்ட 4 காவல் நிலையங்களிலும் சிறுமிகளுக்கு எதிராக பதி வான போக்சோ வழக்குகள் தொடர்பாக புள்ளி விவர பட்டியல் வெளியாகி உள்ளது.

    அதன்படி மதுரை மாநகரில் கடந்த 2020-ம் ஆண்டு 132 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 124 வழக்குகளும், 2022-ம் ஆண்டு அக்டோபர் வரை 150 வழக்குகளும் பதிவாகி உள்ளது.

    அதாவது கடந்த 34 மாதங்களில் மட்டும் மொத்த மாக 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மகளிர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த 5-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது.

    எனவே அவர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாலியல் சில்மிஷம் தொடர்பாக குழந்தைகள் ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    • நீதித்துறை போட்டி தேர்வு புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
    • மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ராஜு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    மதுரை

    மதுரை சட்ட நூல் எழுத்தாளர் கே. சுவாமிராஜ் எழுதிய 'நீதித்துறை போட்டி தேர்வு' ஆங்கில புத்தக வெளியீட்டு விழா, மதுரை ஓட்டலில் நடந்தது. மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் ஆண்டிராஜ் தலைமை தாங்கினார். மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க செயலாளர் அன்பரசு புத்தகத்தை வெளியிட, சிதம்பரம் வக்கீல் ஜெயச்சந்திரன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் வக்கீல் லீமா, ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மதுரை ஐகோர்ட்டு வக்கீல் ராஜு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • கள்ளழகர் பக்தர்களின் நலன்கருதி கோரிப்பாளையம் பறக்கும் மேம்பால திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
    • மண்டகப்படிதாரர்கள் வலியுறுத்தினர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கள்ளழகர் கோவில் பாரம்பரிய மண்டகப்படிதாரர்கள் தலைவர் மோகன், செய லாளர் திருமால் ராஜன், பொருளாளர் கே.வி.கே.ஆர் பிரபாகரன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    பிரசித்திபெற்ற மதுரை கள்ளழகர் சித்திரை திரு விழாவில் எதிர்சேவை நடைபெறக்கூடிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற உள்ளன. இதில் சித்திரை திருவிழாவை சீர்குலைக்கும் முயற்சியாகும். இதுகுறித்து அதிகாரிகளிடமும், முதல்-அமைச்சரிடமும் கூறியும் கூட ஒப்பந்த பணிகளை தொடங்க உள்ளனர்.

    கோரிப்பாளையம் பறக்கும் மேம்பால திட்டத்தை மாற்றம் செய்து தமுக்கம் பகுதியில் உள்ள கருப்பணசுவாமி கோவிலில் இருந்து கோரிப்பாளையம் வரை மாற்றி அமைக்க வேண்டும். ஏற்கனவே அவுட்போஸ்ட் பகுதி வரை மேம்பாலம் இருக்கும் நிலையில் மீண்டும் தல்லாகுளத்தில் இருந்து கோரிப்பாளையம் வரை மேம்பாலம் அமைத்தால் சித்திைர திருவிழாவிற்கு வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

    மேம்பாலப்பணிகளால் கள்ளழகர் வருகை தரும் பொழுது கூட்டநெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தான நிலை உருவாகும்.

    அழகர்கோவில் சாலையில் உள்ள பாரம்பரியமிக்க மண்டகப் படிகளை மேம்பால பணிகளுக்காக இடிக்க இருப்பதாக அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர். மேலும் மண்டகப்படி தாரர்களை மிரட்டி மேம்பால பணிகளுக்காக இடத்தை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் மிரட்டி வருகின்றனர்.

    இதுபோன்ற செயல்களை அரசு கைவிட்டு மாற்று திட்டத்தில் பணிகளை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மேம்பா லத்திற்கான ஒப்பந்தத்தை நடத்தவிடமாட்டோம். பாலத்தை கட்டவிடாமல் தடுத்து நிறுத்தி பொது மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம்.

    தல்லாகுளம் பகுதியில் மேம்பாலம் கட்டினால் தூண்கள் உருவாகும்போது கள்ளழகர் எதிர்சேவை நடைபெறவதில் சிரமம் ஏற்படும்.

    கடந்தாண்டு சித்திரை திருவிழா கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த நிலையில் இது போன்ற மேம்பால பணிகளால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
    • பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி நடந்தது.

    மதுரை

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    மதுரை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர்களாக மூவேந்திரன், கண்ணன், கோசா பெருமாள், துணை தலைவர்களாக கோவிந்தமூர்த்தி, செல்வி, அரிச்சந்திரன், முத்துச்செல்வம், மஞ்சுளா, குப்பு, அனந்தஜெயம், மாவட்ட செயலாளர்களாக ஹரிகரபுத்திரன், சீதா, சித்ராதேவி, பொருளாளராக முத்துராம், அலுவலக செயலாளராக ஹரிகிரு ஷ்ணன், இளைஞரணி மாவட்ட தலைவராக சுரேஷ், விவசாய அணி மாவட்ட தலைவராக பூமி ராஜன், பட்டியல் அணி மாவட்ட தலைவராக வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • கமலஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி விழா 23-ந் தேதி தொடங்குகிறது.
    • கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது.

    மதுரை

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

    முதல் நாள் காலை 6 மணிக்கு விஷ்வக்சேன பூஜை, கலச ஆராதனை, ஹோமம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் கலசம் மேளதாளத்துடன் வீதி உலா நடக்கிறது. 12.30 மணிக்கு சமாராதனையும், மாலை 6.30 மணிக்கு ஆஞ்சநேயர் வீதி உலாவும் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    இதேபோல் 2-வது நாள் இரவு 7 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. இதனை தொடர்ந்து 12 ராசிகளுக்கான பலன் மற்றும் பரிகாரங்கள் கூறப்படுகிறது. 3-வது நாளில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், பரதநாட்டியம், கோலாட்டம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அலங்காநல்லூரில்பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • சொற்பொழிவு, நாடகம், கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டு, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூரில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை துணை செயலாளர் தொடங்கி வைத்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் வன்முறைக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து சொற்பொழிவு, நாடகம், கோலாட்டம், கும்மியாட்டம், பாட்டு, ரங்கோலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரத்தை மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் துணைத் தலைவர் காளிதாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர்கள் மரியா, காளிதாஸ், மாவட்ட வள பயிற்றுநர் தேவி, வட்டார இயக்க மேலாளர் மகாலட்சுமி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராதிகா, கலா ராணி, தேவி, முத்துச்செல்வி, உமாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் மரியா நன்றி கூறினார்.

    ×