என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை தலைமை தபால் நிலையத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    பசுமலை புது அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது59). இவர் மதுரை மீனாட்சி பஜார் தலைமை தபால் அலுவலகத்தில் எம்.டி.எஸ். பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரை பத்மநாபன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். பெண் ஊழியர் பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை.

    பத்மநாபன் தொடர்ந்து பெண் ஊழியரிடம் தொல்லை செய்து வந்துள்ளார். மனமுடைந்த பெண் ஊழியர் இந்த சம்பவம் குறித்து தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மற்றொரு ஊழியர் பத்மநாபனை போலீசார் கைது செய்தனர்.

    • ராமநாதபுரம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    மதுரை

    ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை இரு மார்க்கங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1-ந்தேதி முதல் செகந்திராபாத்தில் இருந்து வாரந்தோறும் புதன் கிழமை இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் செல்லும். இது ஜூன் மாதம் 28-ம் தேதி வரை அமலில் இருக்கும். மறு மார்க்கத்தில் ராமநாதபுரத்தில் இருந்து மார்ச் 3-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.50 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் செல்லும். இந்த சேவை ஜூன் மாதம் 30-ந்தேதி வரை அமலில் இருக்கும். மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

    • சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.

    மதுரை:

    முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் மூலமாக நான் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2013 முதல் 2021-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். பொதுமக்கள் இடையே எனக்கு நற்பெயர் உள்ளது.

    இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022 ஆகஸ்ட் 23-ந் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் எவ்விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் உள்ளது.

    சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே, ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை யாரும் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஆறுமுகம் சுவாமி ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கும், அவற்றைப் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

    இந்நிலையில், இடைக்காலத் தடையை நீக்குமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.

    அரசு தரப்பில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையானது சட்டசபையில் விவாதிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

    இதனையடுத்து அத்வானி மற்றும் உச்சநீதிமன்ற பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டிய நீதிபதி, இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். விசாரணைக்காக அழைத்து மனுதாரர் மீது குற்றம் சாட்டுவது எப்படி? என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார்.

    நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் உள்ள கருத்துக்களின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஆனால் தனிநபர் குற்றச்சாட்டு வேறு குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    • மதுரையில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கடைபிடிக்கப்பட்டது.
    • தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று முதல் 8-ந் தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    2019-20-ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளை நினைவுகூறும் வகையில் ''ஆட்சிமொழிச் சட்ட வாரம்" ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று (1-ந் தேதி) முதல் 8-ந் தேதி வரை ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டாடப்படுகிறது.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள் அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நடத்தியும், அரசு அலுவலர்களுக்கு கணினித் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கு பயிற்சி அளித்தும், மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்களுடன் பட்டிமன்றம் நடத்தியும், ஒன்றியம், வட்ட அளவில் அரசு பணியாளர்கள், பொதுமக்கள், தமிழ் அமைப்புகளுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் நடத்தியும் ஆட்சிமொழிச் சட்டவாரம் கொண்டா டப்பட உள்ளது.

    தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொள்ள தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரத்தை சிறப்பாக கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி பால் விநியோக நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
    • மதுரை மாவட்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் பொது மேலாளர் மற்றும் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கடந்த 20 .10. 2022 அன்று சென்னை கோட்டையில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் சங்கப் பிரதிகளை அழைத்து பால் விலை உயர்வு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியது .பின்னர் விலை அறிவிக்கும் போது சங்கப்பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் மிகவும் சொற்ப விலையான லிட்டருக்கு ரூ.3 மட்டுமே விலை உயர்வு செய்து அறிவித்தார்கள் .

    மேற்கண்ட விலை மூலம் உற்பத்தியாளர்களுக்கு ரூ.31 வரை பால்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆனால் தனியார் பால் நிறுவனங்களில் ரூ.38 முதல் 46 வரை கொடுத்து பால் கொள்முதல் செய்கிறார்கள் .தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களை நேரடியாக சந்தித்து பாலை கொள்முதல் செய்கிறார்கள் .தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக விலை கொடுக்க முடியாததால் பிரதம சங்கங்களால் அதிக அளவில் பால் கொள்முதல் செய்து ஒன்றியத்திற்கு அனுப்ப முடியவில்லை .இதனால் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் படிப்படியாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

    எனவே மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லிட்டருக்கு ரூ.7 ஊக்கதொகையாக உடனடியாக வழங்கினால் மட்டுமே பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் . வருகிற 10-ந் தேதிக்குள் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 11-ந் தேதி முதல் மதுரை மாவட்டத்தை தொடர்ந்து ஒன்றியத்துக்கு பால் வழங்குவது நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்பாக தங்கு நிர்வாகிகள் வெண்மணி சந்திரன்,சுப்பிரமணி ஆகியோர் கூறும்போது, மாட்டு தீவனங்களின் விலை அதிகரித்து விட்டது. இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு ரூ .42 தருவதாக கூறிவிட்டு ரூ. 32 தான் தருகிறது. எனவே ஊக்க தொகையாக லிட்டர் ரூ.7 தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி பால் விநியோக நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

    • அரசு நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சோமன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, தானிபட்டி கிராமத்தில் உள்ள வில்லூர் கண்மாய், பிள்ளையா கண்மாய், வண்ணாரக் கண்மாய், புது ஊரணி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சுமார் 13 லட்சம் மதிப்புள்ள சீமை கருவேல மரங்கள், நாட்டு கருவேல மரங்கள் மற்றும் இதர மரங்களை தானிபட்டி கிராம பொதுமக்கள் சார்பாக சுப்பிரமணி என்பவர் அரசின் உரிய அனுமதியின்றி சட்ட விரோ தமாக வெட்டி விற்பனை செய்ய முயற்சித்து வருகிறார்.

    ஆகவே அரசு சார்பில் மரங்களை வெட்டுவதற்கு பொது ஏலம் நடத்தினால் அரசிற்கு வருவாய் கிடைக்கும். எனவே தானிபட்டி கிராமத்தில் உள்ள வில்லூர் கண்மாய், பிள்ளையா கண்மாய், வண்ணாரக் கண்மாய், புது ஊரணி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள், நாட்டு கருவேல மரங்கள் மற்றும் இதர மரங்களை வெட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசிற்கு வருவாய் கிடைக்கும் வகையில் பொது ஏலம் நடத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தானிப்பட்டி கிராம கண்மாய்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டு வதற்கான ஒப்பந்தங்கள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • மதுரை மாவட்டத்தில் இன்று முதல் மேலும் 5,517 பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
    • நாராயணபுரத்தில் கலெக்டர் உணவு பரிமாறினார்.

    மதுரை

    தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து இந்த திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    கடந்த 15-9-22 அன்று மதுரை கீழத்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் காலை உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து மதுரை நெல்பேட்டையில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் உணவு கூடமும் செயல்பட தொடங்கியது.

    முதல்கட்டமாக 38 நகர்புற, உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிக்குட்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த திட்டத்தை இன்று முதல் விரிவுபடுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 47 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 5,517 குழந்தைகள் இன்று காலை பள்ளிகளில் காலை உணவை சாப்பிட்டனர்.

    மதுரை நாராயண புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் கலெக்டர் அனீஷ்சேகர் பள்ளி குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த காலை உணவை ருசித்து பார்த்தார். பின்னர் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் வாசுகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் கட்டமாக தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தில் 3,185 பள்ளிக் குழந்தைகள் பயனடைந்து வந்தனர். இன்றுமுதல் விரிவாக்க திட்டம் காரணமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 8,702 பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அனிஷ்சேகர் உத்தர விட்டுள்ளார்.

    • சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் விழாவில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    மதுரை

    மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லூரியில் 29-வது விளையாட்டு போட்டி நடந்தது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், தெப்பக்குளம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, கல்லூரி செயலாளர் கரிக்கோல்ராஜ், பொரு ளாளர் ஏ.சி.சி. பாண்டியன், தாளாளர் ஜெயகுமார், தலைவர் மாரிஸ்குமார், முதல்வர் கார்த்திகாராணி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி பேசுகையில், 'பெண்கள் பாதுகாப்பு, சமூக ஊட கங்களில் பெண்களின் அணுகுமுறை மற்றும் ஆன்லைன் குற்றங்கள்' குறித்து எடுத்து ரைத்தார். விளையாட்டு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாரா ஒலிம்பிக் வீரர் ரஞ்சித் குமார், இன்ஸ்பெக்டர் தங்கமணி ஆகியோர் பதக்கம், பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    • அவனியாபுரத்தில் தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் 92-வது வார்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர் கருப்புசாமி ஏற்பாட்டில் அபி ரத்த பரிசோதனை நிலையத்துடன் இணைந்து மருத்துவ முகாம் நடந்தது.

    வட்ட செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் மந்தை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் திருப்பரங் குன்றம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அன்பாலயம் செல்வம், தனுஷ்கோடி, பாலமுருகன், சிவமணி, சிவமுருகன், பிரசாந்த், பாண்டியராஜன், தமிழ் அகிலன், முத்துக்கருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் இருதய நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
    • மன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுமாறு மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தெரி வித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மேலவெளி வீதியில் நூற்றாண்டு கடந்த விக்டோரியா எட்வர்டு மன்றம் இயங்கி வருகிறது. இங்கு நவீன நூலகம் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. இங்கு உறுப்பினர்களாக உள்ள சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சென்னை வடபழனியில் உள்ள போர்டிஸ் மருத்துவ மனையும், விக்டோரியா எட்வர்டு மன்றமும் இணைந்து இருதய அறுவை சிகிச்சை மற்றும் இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு முகாம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த மருத்துவ முகாமிற்கு மன்றச் செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தலைமை தாங்குகிறார். இந்த மருத்துவ முகாமில் தலை சிறந்த மருத்துவர்கள் பங்கேற்று உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கு கிறார்கள். தேவைப்படும் நபர்களுக்கு இலவச பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. அனைத்து இதயம் தொடர்பான பிரச்சி னைகளுக்கும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

    மேலும் டாக்டர்களின் பரிந்துரையின்படி இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைகள் இலவசமாக எடுக்கப்படு கிறது. பை-பாஸ் சிகிச்சை, இருதய வால்வு மாற்றுதல், இதயமாற்று அறுவை சிகிச்சை, ஸ்டண்ட் வைத்தல் போன்ற மருத்துவ சேவைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து தரப்படும்.

    மேலும் முக்கியமாக இந்த மருத்துவ முகாமில் பங்கேற்கும் இதயம் தொடர்பான நோயாளிகள் ஏற்கனவே சிகிச்சை எடுத்து வரும் பட்சத்தில் அதற்குரிய முழு விவரங்களை கையில் எடுத்து வரவும், அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

    இந்த மருத்துவ முகாமில் மன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

    • 39 பாராளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தை நீங்கள் நீட் தேர்வுக்காக முடக்க வேண்டாமா?
    • செங்கலை காட்டியே நீங்கள் காலத்தை கழித்து விடலாம் என்று நினைத்தால் அது உங்களுடைய செங்கோலுக்கு அழகாக இருக்காது.

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு விலக்கு கோரிக்கை வலியுறுத்தினேன் என்று பிரதமரை சந்தித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். நீட் தேர்வு விலக்கு அதனுடைய ரகசியம் எங்கள் பாக்கெட்டில் இருக்குது என்று சொன்னவர், இன்றைக்கு நீட் தேர்வு விலக்குக்கு சட்ட போராட்டம் தொடரும் என்று சொல்லி இருக்கிறார்.

    முதல் கையெழுத்து நீட் தேர்வு விலக்கு என்று சொன்னார்களே, இன்றைக்கு 22 மாதங்கள் ஓடிவிட்டது, நீட் ரத்து நிலைமை என்ன?

    மூத்த அமைச்சர்கள் இல்லாமல், நேற்று அமைச்சரானவர் இன்றைக்கு பிரதமரை சந்திக்கிறார். முதலமைச்சர் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும்போது சந்தித்திருக்கிறார், அவர் வெளிநாட்டுக்கு சென்று இருந்தால் கூட இது மரபாக நினைக்கலாம். ஆனால் முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கிற போது அவர் அமைச்சரவையில் இருக்கிற விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திப்பது மரபுக்கு உட்பட்டதாக இல்லை.

    பிரதமரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்திருப்பது என்பது முழுக்க முழுக்க உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துகிற நடவடிக்கையாக, ஒரு முக்கிய அங்கமாகத்தான் சந்தித்திருக்கிறாரே தவிர, தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

    மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை, மூத்த அமைச்சர்களை அழைத்து செல்லவில்லை. எதற்காக? ஒருவேளை தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரதமரை வாய்க்கு வந்ததை, வசை பாடியதை மன்னிப்பு கேட்பதற்காக தனியாக சென்றாரோ? என்னவோ?. அது பிரதமருக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் மட்டுமே தெரியும்.

    39 பாராளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு பாராளுமன்றத்தை நீங்கள் நீட் தேர்வுக்காக முடக்க வேண்டாமா?

    செங்கலை காட்டியே நீங்கள் காலத்தை கழித்து விடலாம் என்று நினைத்தால் அது உங்களுடைய செங்கோலுக்கு அழகாக இருக்காது. செங்கலை காட்டியே நீங்கள் காலத்தை கழித்து விடலாம் என்று நினைத்தால் மக்கள் அதை நம்ப தயாராக இல்லை.

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார். இந்த நாட்டிலே இந்த நாட்டிலே என்கிற அந்த பாடல் தான் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த 2020-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானைக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டது.
    • கடந்த 4 நாட்களாக எழுந்து நடக்க முடியாமல் படுத்த நிலையில் யானை உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் இருந்து பார்வதி என்ற பெண் யானை வாங்கப்பட்டது. 26 வயதான இந்த யானை கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பார்வதி யானைக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருவிழாவின்போது காலில் சிறிய அளவு காயம் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மீனாட்சி அம்மன் கோவிலில் பார்வதி யானைக்கு 2 கண்களிலும் கண்புரை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து தாய்லாந்து மருத்துவ குழுவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் யானை பார்வதிக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து யானைக்கான சிகிச்சை குறித்து காணொலி மூலம் ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.

    இதற்கிடையே கோவில் யானை பார்வதிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக யானை நடைபயிற்சிக்கு செல்லவில்லை.

    தொடர்ந்து யானைக்கு கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக எழுந்து நடக்க முடியாமல் படுத்த நிலையில் யானை உள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ×