என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாராயணபுரம் தொடக்கப்பள்ளியில் கலெக்டர் அனீஷ்சேகரும், சிங்காரத்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரும் குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறினர்.
இன்று முதல் மேலும் 5,517 பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்
- மதுரை மாவட்டத்தில் இன்று முதல் மேலும் 5,517 பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- நாராயணபுரத்தில் கலெக்டர் உணவு பரிமாறினார்.
மதுரை
தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து இந்த திட்டம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
கடந்த 15-9-22 அன்று மதுரை கீழத்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பள்ளி குழந்தைகளுடன் காலை உணவு சாப்பிட்டார். இதை தொடர்ந்து மதுரை நெல்பேட்டையில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிக்கும் உணவு கூடமும் செயல்பட தொடங்கியது.
முதல்கட்டமாக 38 நகர்புற, உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிக்குட்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த திட்டத்தை இன்று முதல் விரிவுபடுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 47 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 5,517 குழந்தைகள் இன்று காலை பள்ளிகளில் காலை உணவை சாப்பிட்டனர்.
மதுரை நாராயண புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் கலெக்டர் அனீஷ்சேகர் பள்ளி குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த காலை உணவை ருசித்து பார்த்தார். பின்னர் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் வாசுகி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் கட்டமாக தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தில் 3,185 பள்ளிக் குழந்தைகள் பயனடைந்து வந்தனர். இன்றுமுதல் விரிவாக்க திட்டம் காரணமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 8,702 பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அனிஷ்சேகர் உத்தர விட்டுள்ளார்.






