என் மலர்
மதுரை
- மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
- நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
திருமங்கலம்
1970 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ந்தேதி அன்று சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி பகுதியில் நகராட்சி சார்பில் நீர் வரத்து கால்வாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி சேர்மன் ரம்யா முத்துக்குமார், துணைச்சேர்மன் ஆதவன் அதியமான் ஆகியோர் பங்கேற்று மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் மகளிர் சுய உதவி குழுவினர், தூய்மை இந்தியா திட்ட சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், சரவண பிரபு, கவுன்சிலர்கள் சின்னசாமி, திருக்குமார், வீரக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விஸ்வகர்மா சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- சங்க தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார்.
மேலூர்
மேலூர் சந்தைப் பேட்டையில் விஸ்வகர்மா சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சங்க தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஆறுமுகம் ஆசாரி, கோவில் பூசாரி தனபாலன், நிர்வாக குழு மூத்த உறுப்பினர் சண்முகம், கேசவன் முன்னிலை வகித்தனர். கோவிலின் செயலாளர் கேசவராஜா, பொருளாளர் தியாகராஜன், துணைத் தலைவர் சக்திவேல் முருகன், துணைச் செயலாளர் பிச்சை பாண்டி, இளைஞரணி செயலாளர் நளன், மகளிரணி செயலாளர் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலூர் விஸ்வகர்மா சங்கத்திற்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன் கோவிலில் வருகிற ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.41ஆயிரத்து 900 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேலூர்
மேலூர் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.41ஆயிரத்து 900 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார கல்வி அலுவலர் அழகுமீனா தலைமையில் நடந்தது. இதில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 10 மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கீதா மற்றும் சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- திருமங்கலத்தில் மருதுபாண்டியர்கள் சிலையை நிறுவக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- முடிவில் நகர தலைவர் விஜேந்திரன் நன்றி கூறினார்.
திருமங்கலம்
ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலில் போர் தொடங்கியது மருது சகோதரர்கள் தான். இதற்காக அவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிட்டு கொல்லப்பட்டனர். இதன் நினைவாக மருது பாண்டியர்களுக்கு சிலை அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்க லம் ராஜாஜி சிலை முன்பு மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி சார்பில் மதுரை மேற்கு மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவர் வேல்முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் மற்றும் ஓ.பி.சி. மாநில தலைவர் சாய்சுரேஷ் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் மருது பாண்டியர் களுக்கு சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் தங்கப் பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசி குமார், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் திருமாறன், மாவட்ட துணைத்தலைவர் ஓம் ஸ்ரீ முருகன், சரவணன், சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர தலைவர் விஜேந்திரன் நன்றி கூறினார்.
- வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
- வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் ஆண்டிபட்டியில் உள்ள சோழவந்தான் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறையினருக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. வனச்சரக அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.வனவர்கள் பூபதி ராஜன், லோகநாதன், முருகேசன் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சதக்கத்துல்லா தலைமையில் வீரர்கள் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர். வனப்பகுதியில் தீ பிடித்தால் அணைக்கும் முறை பற்றியும், புயல், மழை, வெள்ளம் பேரிடர் காலங்களில் மீட்கும் முறை பற்றியும் உள்ளிட்ட செயல்முறை கருவிகளோடு பயிற்சியளித்தனர்.
- மதுரை அருகே புதிய ரக வாழைக்கன்று அறிமுகம் செய்யப்பட்டது.
- பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
சிறுமலை வாழை உற்பத்தியை அதிகப்படுத்தும் விதத்தில் வாழை புத்தாக்க திட்டத்தில் புதிய ரக திசுகள் சார் வாழைக்கன்று அறிமுகம் வாடிப்பட்டியில் நடந்தது. கிரட்செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். நபார்டுமாவட்ட மேலாளர் சக்தி பாலன் முன்னிலை வகித்தார். கிரட் இயக்குநர் கண்மணி வரவேற்றார். மாவட்ட மேலாளர் பாலசந்திரன், சிறுமலை வாழை புத்தாக்க திட்டத்தின் கீழ் திசுக்கள் சார் முதல் வாழை கன்றை சிறுமலை காய்கறி உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குநர் கீதாவுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பேப்ஸ் இயக்குநர் அருள், சிபோ பழனிவேல் உள்பட தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். சீனிவாசன் நன்றி கூறினார்.
- பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
- மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார்.
மதுரை
மதுரை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவல கத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார்.
தெற்கு மண்டலத்தி ற்குட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவத நல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழ வெளிவீதி.
கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ. 3 லட்சம் மோசடி செய்த ஆடிட்டர் கைது செய்யப்பட்டார்.
- திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடிட்டர் செந்தில்குமாரை கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்க லத்தை சேர்ந்தவர் ஜெகன். இவரது மகள் கேத்தரின் (வயது39). இவர் மதுரையில் புகழ்பெற்ற ரப்பர் நிறுவனத்திற்கு ரப்பர் புஷ் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனிக்கு ஆடிட்டராக திருப்பரங்கு ன்றத்தை அடுத்துள்ள ஹார்வி பட்டியை சேர்ந்த செந்தி ல்குமார்(39) உள்ளார். இவர் கேத்தரின் நிறுவனத்திற்கு 2021 முதல் 2023வரையில் ஜி.எஸ்.டி. வரி கட்டுவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கி யுள்ளார்.
அதில் ரூ.3.5 லட்சத்தை கட்டாமல் மோசடி செய்துள்ளார். இதனை கண்டுபிடித்த கேத்தரின் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் புகார் செய்தார். அதன் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடிட்டர் செந்தில்குமாரை கைது செய்தனர்.
- கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
- கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.
சோழவந்தான்
தமிழக அளவில் முதன்முறையாக இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசுங் பூட்டியா கால்பந்து பள்ளியுடன் இணைந்து கல்வி சர்வதேச பள்ளி கால்பந்து அகாடமியை தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத் திட்டுள்ளது. சோழவந்தான் கல்வி சர்வதேச பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விளையாட்டுத் துறை இயக்குநர் சங்கிலிகாளை முன்னிலை வகித்தார். விளையாட்டு மேனேஜர் விவீதா வரவேற்றார். லதா விழாவை தொகுத்து வழங்கினார். பைசுங் பூட்டியா கால்பந்து பயிற்சிப் பள்ளியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் ராதாகிருஷ்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு கால்பந்து துறையின் வளர்ச்சி மற்றும் நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.
அவர் கூறுகையில், மதுரையில் உள்ள இளம் கால்பந்து ஆர்வலர்கள் கால்பந்தில் திறமைகளை கற்றுக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக இந்த அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளின் மூலம் மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் திறம்பட செயலாற்றி பரிசுகள் பெற முடியும் என்றார். கல்வி பள்ளியின் விளையாட்டு ஆலோசகர் விக்னேஷ் நன்றி கூறினார்.
- கரடிக்கல்லில் நாளை ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் முன்பதிவு தொடங்கியது.
- வள்ளித்திருமணம் நாடகம் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் நடைபெற உள்ளது என்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் திருக் கல்யாண நிகழ்ச்சியை யொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை (23-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக கரடிக்கல் கிராமத்தில் திருமங்கலம்-செக்கானூரணி ரோட்டில் கள்ளர் பள்ளிக்கு எதிரே உள்ள பிரமாண்ட மைதானம் தயாராகி வருகிறது. காலரி, வாடிவாசல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கான காளைகள் முன்பதிவு மற்றும் மாடுபிடி வீரர்க ளுக்கான முன்பதிவு நேற்று மதியம் ஆன்லைனில் தொடங்கி நடந்து வருகிறது. இந்தமுறை 600 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இந்த போட்டிகளில் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த உள்ளூர் மாடுபிடி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும், அனைவரும் பார்வையாளர்களாகவே இருப்பார் கள் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
போட்டிகளை அமைச்சர் மூர்த்தி, தெற்குமாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மணிமாறன், மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். இது குறித்து ஜல்லிகட்டு போட்டிகளை நடத்தும் விழா கமிட்டியினர் கூறுகையில், போட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும். ஒவ்வொரு பிரிவிலும் 50 மாடு பிடிவீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சீரூடைகள் வழங்கப்படும்.
வெற்றி பெறும் வீரர்களுக்கு பீரோ, கட்டில், தங்ககாசு, குத்துவிளக்கு, பேன், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப் படும். காயமடைந்த வர்க ளுக்கு உாிய சிகிச்சை யளிக்க மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கால்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒத்துழைப் புடன் ஜல்லிக்கட்டு போட்டி கள் நடைபெற உள்ளது. போட்டிக்கு முந்தைய நாளான இன்று இரவு வள்ளித்திருமணம் நாடகம் ஜல்லிக்கட்டு மைதானம் அருகில் நடைபெற உள்ளது என்றனர்.
- வருகிற 30-ம் தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந் தேதி திக்விஜயமும் நடக்க உள்ளது.
- சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடத்தக்கது சித்திரை திருவிழா ஆகும். 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். 2 வார காலம் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (23-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் சுவாமி சன்னதியின் முன்உள்ள கொடிமரம் முன்பு எழுந்தருள்வர்.
பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடக்கும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். முன்னதாக இன்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.
விழா நடக்கும் நாட்களில் தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். வீதிஉலாவின்போது 4 மாசி வீதிகளிலும் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
வருகிற 30-ம் தேதி பட்டாபிஷேகமும், மே 1-ந் தேதி திக்விஜயமும் நடக்க உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது. மறுநாள் (3-ந் தேதி) மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. 4-ந் தேதி சித்திரைத் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவிலின் 4 கோபுரங்களும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது.
அதனை தொடர்ந்து 3-ந்தேதி கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அழகர் மலையில் இருந்து புறப்பாடாகி மதுரை வரும் கள்ளழகர் 5-ந் தேதி அதிகாலையில் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள்.
- பதில் மனு தாக்கல் குறித்து மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
- அபராத தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும்.
மதுரை:
மதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா பகுதியில் எனக்கு சொந்தமான நிலத்தில் 2,224 சதுரஅடி நிலத்தினை வைகை ஆறு திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தினர்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கையகப்படுத்தப்பட்ட எனது நிலத்திற்கு பதிலாக இழப்பீட்டு தொகை அல்லது மாற்றிடம் வழங்க கோரி தொடர்ந்து பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது நிலத்தை கையகப்படுத்தியதற்காக மாற்று நிலம் அல்லது உரிய இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் கடந்த 2014-ம் ஆண்டு இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார். 2014-ம் ஆண்டு மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநகராட்சி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இறுதிக்கட்ட விசாரணைக்காக இந்த ஆண்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதுவரையிலும் மாநகராட்சி தரப்பில் சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா? இல்லையா? அல்லது மனுதாரரின் மனு பரிசீலனை செய்யப்பட்டதா? இல்லையா? அல்லது மனுதாரர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் முறையாக கையகப்படுத்தப்பட்டதா? அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு அவர்களுக்கான அறிவிப்பு முறையாக வழங்கப்பட்டதா..? உள்ளிட்ட எந்த தகவலையும் தெரிவிக்காததால் இந்த வழக்குக்கு தீர்வு காண இயலவில்லை.
மதுரை மாநகராட்சி கமிஷனரின் இத்தகைய செயல் ஏற்புடையதல்ல. எனவே மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகையை மதுரை மாநகராட்சியின் பொது நிதிக்காக வழங்க வேண்டும். வழக்கு குறித்து வருவாய் ஆவணங்களுடன் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






