என் மலர்tooltip icon

    மதுரை

    • 6-ந்தேதி சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார்.
    • 8-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும்.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினமும், தேரோட்டம் நேற்றும் நடைபெற்றது.

    தீர்த்த திருவிழா, தேவேந்திர பூஜை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளல், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி-பவளக்கனிவாய் பெருமாள் 16 கால் மண்டபத்தில் விடைபெறும் நிகழ்வு உள்ளிட்டவைகளுடன் சித்திரை திருவிழா இன்று முடிகிறது.

    மதுரை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளலுடன் தொடங்கியது. அங்கு 2 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் 3-ம் நாளான நேற்று காலை திருவீதி உலா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நாளை (5-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று நேற்று மாலை அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    முன்னதாக மாலை 6 மணியளவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்பு கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றிப்பட்டை, கரங்களில் வளைத்தடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேளதாளங்கள் முழங்க கள்ளழகர் தங்கை பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

    விரதம் இருந்து வரும் பக்தர்கள் ஆடியபடி அழகருடன் வந்தனர். வழிநெடுகிலும் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொய்கை கரைப்பட்டி, கள்ளந்திரி,அப்பன் திருப்பதி, ஜமீன்தார் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    சுந்தர்ராஜன் பட்டி மறவர் மண்டபத்தில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு எழுந்தருளிய கள்ளழகர் 2.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பின்பு கடச்சனேந்தல் சென்ற கள்ளழகர் அங்கு அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அங்கிருந்து புறப்பட்டு மூன்று மாவடிக்கு இன்று காலை 6 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கானோர் மூன்று மாவடியில் திரண்டிருந்தனர்.

    அவர்கள் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். வேடமணிந்த பக்தர்கள் ஆடிப்பாடியும், பெண்கள் கையில் சர்க்கரை தீபம் ஏந்தியபடியும் கள்ளழகரை வரவேற்றார்கள். அப்போது கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

    பின்பு அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் காலை 9 மணியளவில் கே.புதூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார். அங்கும் திரளான பக்தர்கள் திரண்டு நின்று கள்ளழகருக்கு எதிர்சேவை அளித்தனர். இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு கள்ளழகர் சென்றடைந்தார்.

    அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் மாலை 5 மணியளவில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மாலை 5.20 மணி முதல் 6 மணி வரை அம்பலக்காரர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து புறப்பட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செல்கிறார்.

    அங்கு அவருக்கு இரவு 9 மணி முதல் 12 மணி வரை திருமஞ்சனம் நடக்கிறது. நள்ளிரவில் அங்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதன்பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை கள்ளழகருக்கு அணிவிக்கப்படுகிறது.

    அதனை ஏற்று ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி கள்ளழகர் காட்சியளிக்கிறார். அதனை தொடர்ந்து தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு அதிகாலை 5 மணியளவில் மதுரை வைகை ஆற்றுக்கு வருகிறார்.

    அங்கு அதிகாலை 5.45 மணிக்கு கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மேலும் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 6-ந் தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார்.

    தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூகமுனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய விடிய தசாவதார காட்சி நடைபெறும்.

    7-ந் தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 8-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 10-ந் தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    • மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது.
    • மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    மதுரை

    உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் மதுரை பெத்தானியாபுரத்தில் பொதுமக்களுக்கு படிப்பகம் மற்றும் தொழிற்சங்க கொடி ஏற்றி பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மண்டல செயலாளர் வழக்கறிஞர் அழகர், கொடியற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சொக்கர், பேரவை மண்டல அமைப்பாளர் சரவணன், 62-வது வட்டச் செயலாளர் ஆரான் ஆகியோர் செய்திருந்தனர்.

    மாவட்டச் செயலாளர்கள் முனியசாமி, மணி, பிச்சைமணி தொழிலாளர் அணி மண்டல அமைப் பாளர்-தொழிலாளர்கள் அணி மாவட்ட அமைப் பாளர்கள் பாண்டியன், மயில்ராஜ், ரமேஷ் மற்றும் அணியின் மண்டல அமைப் பாளர்கள் செல்லப்பாண்டி, சிவபாலகுரு, கிருஷ்ண குமார், பத்மா, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் காளை இருந்து வந்தது. உடல்நல குறைவால் அந்த காளை இன்று காலை இறந்தது.

    இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக் கட்டுகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், அண்டா, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது. இந்த காளை ஊருக்குள் சுற்றும் போது செல்ல பிள்ளை யாகவும், வாடி வாசலில் சீறிப்பாயும் போது வீரனாகவும் மாறி ஊருக்கு பெருமை சேர்த்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த காளை இறந்துவிட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகை தந்து காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர் மந்தையில் காளையை நிறுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பெண்கள் உள்பட ஒட்டு மொத்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

    • மதுரை அருகே லாரி மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள மூனாண்டிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் மகாதேவன் (32). இவர் திருமங்கலம்- செக்கானூரணி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கரடிக்கல் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகாதேவன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி சந்தியா கொடுத்த புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் கீழஉரப்பனூரை சேர்ந்த வேன் டிரைவர் பாஸ்கரன் மகன் பரண் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்லூர் 60 அடி ரோடு இருதயராஜபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் ஜம்புரோபுரம் மார்க்கெட்டில் முருகேசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி பாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஒட்டுமொத்த தமிழர்களும் போராடி பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று வளர்த்து வருகின்றனர். இந்த காளையை அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பூசாரி லோகு (34) பராமரித்து வருகிறார். இந்த காளை 6வயதை எட்டியுள்ள நிலையில் முனியாண்டி கோவிலில் சிறப்பு பூஜை செய்து காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதுகுறித்து சங்கத்தினர் கூறுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழர்களும் பங்கேற்று பெற்றுத்தந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் இந்த ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருகிறோம். இந்த காளைக்கு கரிகாலன் என பெயர் சூட்டி ஆண்டுதோறும் மே 1-ந்தேதி பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம். அதேபோல இந்த ஆண்டும் காளைக்கு பிறந்தநாள் விழா நடத்தினோம் என்றனர்.

    • 18-ம் படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று இன்று இரவு கள்ளழகர் மதுரை புறப்படுகிறார்.
    • நாளை காலை மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது.

    மதுரை

    சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரகாலமாக நடந்து வருகிறது. விழாவின் முத்தாய்ப்பாக நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளையுடன் முடிவடையும் நிலையில் அதன் தொடர்ச்சியாக கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா களை கட்ட தொடங்கும்.

    அதன்படி நேற்று முன்தினம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு சுந்தர்ராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று தோளுக்கி னியான் பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.

    சித்திரை திருவிழாவில் இன்று இரவு முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை கள்ளழகர் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன தொடர்ந்து காலையில் பல்லக்கில் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று இரவு 7மணியளவில் தோளுக்கினியான் என்று அழைக்கப்படும் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகராக வேடம் தரித்து மதுரை நோக்கி புறப்படுகிறார்.

    முன்னதாக கள்ளழகர் கோவில் காவல் தெய்வமாக கருதப்படும் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சன்னதி முன்பு தங்க பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர் கருப்பண்ணசாமிடம் உத்தரவு பெற்று மதுரையை நோக்கி புறப்பாடாகிறார்.

    இதில் மதுரை மட்டுமன்றி சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவதை முன்னிட்டு அழகர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கோபுரங்கள், மண்டபங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    இரவு மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் வழிநெடுகிலும் உள்ள கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்த ருளி அருள் பாலிக்கிறார். இரவு முழுவதும் சுவாமி புறப்பாடு நடைபெறுவதால் அழகர் கோவில் இருந்து மதுரை வரை உள்ள கிராமங்களில் சித்திரை திருவிழா களை கட்ட தொடங்கியுள்ளது.

    நாளை எதிர் சேவை

    கள்ளழகர் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 6மணிக்கு மூன்று மாவடிக்கு தங்கப் பல்லக்கில் வருகிறார். கள்ளழகர் மதுரைக்கு வருவதை வரவேற்கும் வகையில் அங்கு அவரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    நாளை இரவு 9 மணிக்கு கள்ளழகர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 5. 45மணி முதல் 6. 12மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்ந விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு வந்து மீண்டும் இருப்பிடம் சேரும் வரை வழிநெடுகிலும் உள்ள 480மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை மதுரை வடக்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மண்டல தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் வடக்கு கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (4-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த கோட்டத்திற்குட்பட்ட தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர் நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர், மேலமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • அ.ம.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • சோழவந்தான் பேரூரில் சின்னகடை வீதியில் அமைக்கப்பட்டிருந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூர் அ.ம.மு.க. சார்பில் சின்னகடை வீதியில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், சர்பத், தர்பூசணிகளை வழங்கினார்.

    இதில் பேரூர் செயலாளர்கள் திரவியம், மதன், மாவட்ட இணை செயலாளர் வீரமாரி பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், பாலு ராஜன், ஒன்றிய செயலாளர்கள் விருமப்பராஜன், நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், ரபீக், ராமகிருஷ்ணன், முருகன், ராசுமாரியப்பன், அம்பி கிருஷ்ணன், முத்துபாண்டி, வழக்கறிஞர் பிரிவு பிச்சைமணி, மாரியப்பன், மகளிர் அணி பாப்பாயி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
    • அந்த குழந்தை இறந்தது எப்படி? என்பது தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் சரகம் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதில்நாயக்கனூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி வாசுகி (வயது21). இவர்கள் சென்னை படப்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் வாசுகி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாகிய வாசுகியை பிரசவத்திற்காக கடந்த 26-ந்தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அங்கு அவருக்கு கப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது. தாயும்-சேயும் உடல் நலத்துடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பகலில் அந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். மேலும் அந்த குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

    பிறந்த சில நாட்களிலேயே பச்சிளம் பெண் குழந்தை இறந்தது தொடர்பாக எழுமலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தை இறந்தது எப்படி? என்பது தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • டிரோன்-சி.சி.டி.வி காமிரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்தாவது:-

    மதுரை சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 5-ந்தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் முக்கிய நிகழ்ச்சியில் பொதுமக்கள் கள்ளழ கரை வைகை ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இந்த வருடம் புதியதாக தேனி ஆனந்தம் சில்க்ஸ் பின் வாயில் எதிரில் தனிவழியும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு கிழக்கே 50 மீட்டர் தொலைவில் தற்காலிக படிக்கட்டுகளும், ஓபுளா படித்துறை பாலத்தின் வடக்கு பகுதியின் அருகில் சாய்வுதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட வழிகளின் மூலமும் ஏற்கனவே வைகை ஆற்றின் தென்பகுதியில் ஓபுளாபடித்துறை அருகில் உள்ள படிக்கட்டுகள் மூலமும் பொதுமக்கள் மேற்படி வழிகளை பயன்படுத்தி ஆற்றுக்குள் இறங்கி தரிசனம் செய்யு மாறு முன்னேற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சாமி தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டி மாநகராட்சி அலுவலகம், தமுக்கம் மைதானம். எக்கோ பார்க். காந்தி மியூஷியம், ராஜாஜி பூங்கா, பொது பணித்துறை அலு வலகம் மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகியவைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாலை யோரங்களில் அமர்வதையும், உறங்குவதையும் தவிர்த்து மேற்கண்ட இடங்களில் தங்கி சாமி தரிசனம் செய்ய வேண்டு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.

    மேலும் ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக அனைத்து நிகழ்வுகளையும் பொதுமக்கள் காணும் வகையில் தமுக்கம் நேரு சிலை, ஜி - டெக்ஸ் டெய்லர் கடை அருகிலுள்ள பெங்குவின் ஜெராக்ஸ் கடை, தமுக்கம் கருப்பசாமி கோவில், தமுக்கம் ரேமண்ட் ஷோரூம், அமெரிக்கன் கல்லூரி, ஆழ்வார்புரம் மூங்கில் கடை இறக்கத்திலுள்ள தேனி ஆனந்தம் சில்க்ஸ் நுழைவு வாயில், வைகை ஆற்றின் வட கரையில் உள்ள ஓபுளா படித்துறை பாலம், குமரன் சாலை, பந்தல்குடி அம்பேத்கர் சிலை ஆகிய 9 இடங்களிலும் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கள்ளழகரை மேற்படி எல்.இ.டி. திரைகள் மூலம் பார்த்து தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளை கண்டறிய தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநகரங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை மாநகரில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகும் நபர்களின் முகங்களை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள குற்றவாளிகளின், சந்தேக நபர்களின் புகைப்படத்து டன் ஒப்பீடு செய்து குற்ற வாளிகளை கண்டறியக் கூடிய தொழில்நுட்பத்தின் படி, குற்ற வாளிகள் மதுரை மாநகருக்குள் உள்ளே நுழைந்தாலே கண்டறிய முடியும்.

    மேலும் பீப்பிள் கவுண்ட் என்ற ஆப் மூலம் திருவிழா விற்கு வந்துள்ள பொது மக்களின் எண்ணிக்கை யை கணக்கிட்டு உடனுக்குடன் அந்த இடங்களில் பாது காப்பு பலப்படுத்துவதுடன் மாற்று ஏற்பாடுகள் செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் கள்ளழகர் வரும் வழித்தடங்களில் மட்டும் 350 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு. சி.சி.டி.வி. காமிரா பதிவுகள் 2 கட்டுப்பாட்டு அறைகளின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் டிரோன் காமிராவில் படம்பிடிப்பது மட்டுமின்றி, ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டு பொது மக்களுக்கு அறிவிப்புகள் வழங்கவும் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கப்பிரிவு காவல் ஆளினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.
    • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார்.

    மதுரை:

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சியை ஏற்கும் விதமாக கடந்த 30-ந்தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

    இதையடுத்து சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்குமேல் சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.

    12-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார்.

    வழிநெடுக உள்ள சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகரை, மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நாளை நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுதினம் (5-ந்தேதி) அதிகாலையில், தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    இதைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • மே 3-ந்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.
    • மே 4-ந்தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படும் வைபவம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில் ஆகும். நவராத்திரி, சிவராத்திரி மட்டுமல்ல சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால், ஒவ்வொரு திருவிளையாடலும் வெகு சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம்.

    வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றா லும் மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்றதுமே நினைவிற்கு வருவது சித்திரை திருவிழா தான்.

    இது சைவ-வைணவ ஒற்றுமையை உணர்த்தும் விழாவாகவும் விளங்கு வதால் சிவனடியார்கள் மட்டுமல்ல திருமால் பக்தர்களும் கொண்டாடும் பெருவிழா ஆகும். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டா பிஷேகம் ஏப்ரல் 30-ந்தேதியும், மீனாட்சி அம்மன் திக் விஜயம் மே 1-ந் தேதியும், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மே 2-ந்தேதியும் நடை பெற்றது.

    மே 3-ந்தேதி தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ந்தேதி வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரை புறப்படும் வைபவம் நடைபெறும்.

    சித்திரை திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களும் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நிகழ்வுகளை காண மதுரை மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வருவார்கள்.

    இந்நிலையில், மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

    ×