என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டாக்டர் செல்லக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களும் தொற்று உறுதியாகி வருகிறது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லக்குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் தனது தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்து வந்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    இதையடுத்து செல்லக்குமார் எம்.பி., சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,256 ஆக உயர்ந்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,41,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,307-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,47,591 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 3,107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,256 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 2,255 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  44 பேர் உயிரிழந்துள்ளனர்.
    பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கி, வங்கி மேலாளர்கள் மூலமாக தொகையை மீட்டெடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.

    இதில் தகுதியற்ற 8,408 பயனாளிகளில், இதுவரை 3,007 பயனாளிகளிடமிருந்து ரூ. 1 கோடியே 15 லட்சத்து 20 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு, அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து உதவி தொகையை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வசூல் செய்து, அரசுக்கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை சேர்த்து, தவறுதலாக பயனடைந்த தனிநபர்கள், கணினி மையங்கள் குறித்து ஒரு முழுமையான விசாரணை செய்து, அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 2 ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஒரு தனி நபர் என 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது பெயர், விபரம் வெளியிடப்படவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ஊத்தங்கரை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை அடுத்த சாலமரத்துப்பட்டி அருகே உள்ள கஞ்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் சுரேஷ் (வயது 24). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதை அவருடைய குடும்பத்தினர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாமல்பட்டி போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தேன்கனிக்கோட்டையில் பிரதமரின் வேளாண்மை நிதிஉதவி திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பிரதம மந்திரி வேளாண்மை நிதிஉதவி திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு ஏ.ஐ.கே.எஸ். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமப்பா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் வெங்கடேஷ், துணை செயலாளர் ராஜா, மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பேசினர்.

    இதில் நிதிஉதவி திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகளுக்கான பழைய கடன்களை தள்ளுபடி செய்து உடனடியாக புதிய கடன்களை வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    ஓசூரில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து பெண், 2 சிறுவர்களை கத்தியை காட்டி மிரட்டி 8¼ பவுன் நகையை கொள்ளையடித்த பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பகுதி வேலு நகரில் வசித்து வருபவர் பார்த்திபன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சர்மிளா. இந்த நிலையில், கடந்த 2-ந் தேதியன்று 3.30 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பூமிகா (வயது 21) என்ற பெண், கிழிந்த துணிகளை தைத்து தருவதாக சர்மிளாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.

    இதையடுத்து திடீரென 5 பேர் திபுதிபுவென புகுந்து சர்மிளா மற்றும் அவரது மகன்களை கத்தியை காட்டி மிரட்டி, சர்மிளா அணிந்திருந்த தாலி செயின், 2 தோடுகள், மோதிரங்கள் உள்ளிட்ட 8¼ பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்று விட்டனர். இது சம்பந்தமாக ஓசூர் சிப்காட் போலீசில் சர்மிளா குடும்பத்தினர் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் கொள்ளைக்கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி பூமிகா மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நேற்று பெங்களூரு அருகே பொம்மசந்திரதின்னே பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார் (25), ஒசதுர்கா பகுதியை சேர்ந்த புட்டராஜூ (25), அதே பகுதியை சேர்ந்த கிரண் (25) மற்றும் சிக்காரிபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (23) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர், மேலும், அவர்களிடமிருந்து 8¼ பவுன் நகைகளும், 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
    கர்நாடகாவில் இருந்து தளி வனப்பகுதிக்குள் 50 யானைகள் வந்துள்ளதால் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ஓசூர் ஆகிய வனப்பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அங்கிருந்து இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வனப்பகுதிக்குட்பட்ட பேலகரை காப்புக்காட்டிற்கு நேற்று வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின்பேரில் தளி வனச்சரகர் நாகராஜ், வனவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் தளி வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து இந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர் அதற்கான பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காட்டுயானைகள் கூட்டம் தளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் அருகில் உள்ள பேலகரை, கும்ளாபுரம், கங்கனப்பள்ளி, அளேவூர், கும்மாளஅக்ரஹாரம், உனுசேநத்தம், மல்லேஷ்வரம், தேவரப்பெட்டா உள்ளிட்ட கிராமங்களில் வாழும் கிராமமக்கள் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தேவையில்லாமல் இரவு நேரங்களில் வெளியே சுற்றித்திரியக்கூடாது. விவசாய தோட்டங்களில் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த காட்டுயானைகள் கூட்டம் தளி வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் வனப்பகுதிக்குள் நுழைந்தால் வனப்பகுதியை ஒட்டி விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, நெல், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்று அழித்துவிடும். எனவே காட்டுயானைகள் கூட்டத்தை கர்நாடகாவிற்கே மீண்டும் விரட்டி, விவசாயிகள் மற்றும் கிராமமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,016 ஆக உயர்ந்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 4,29,416 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,154-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,45,606 ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 2,916 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,016 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 2,149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  41 பேர் உயிரிழந்துள்ளனர்.
    பர்கூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வாணியம்பாடியை சேர்ந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 33 பவுன் நகைகளை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வென்னம்பள்ளி பகுதியை சேர்ந்த சாந்தா, சின்னகாரகுப்பத்தை சேர்ந்த வாசுகி, பண்டசீமனூர் பகுதியை சேர்ந்த கல்கண்டு, கொண்டப்பநாயனபள்ளியை சேர்ந்த தமிழ்ராணி ஆகியோர் பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதை தொடர்ந்து மர்ம நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த காட்வின் மோசஸ் என்பவர் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காட்வின் மோசஸ் பர்கூர், கந்திகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும், பிரபல திருடன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். அந்த நகைகளை உரியவர்களிடம் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    கந்திகுப்பம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் செங்கொடிபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26), பெயிண்டர். இவர், கந்திகுப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். 

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஜித்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனப்பள்ளி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்கப்படுகிறதா? என போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் மகராஜகடை போலீசார் காட்டிநாயனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற போகனப்பள்ளி நடேசன் (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    காவேரிப்பட்டணம் போலீசார் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக அரிகான்கொட்டாய் பகுதியை சேர்ந்த திருப்பதி (42) என்பவரை கைது செய்தனர். போச்சம்பள்ளி போலீசார் கல்லாவி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற சூளகரை தங்கராஜ் (61) என்பவரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரிடம் இருந்தும் பணம் மற்றும் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டையை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி லீலாவதி (வயது 45). அண்ணாத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாதுரை மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை மனைவி தட்டி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த லீலாவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×