என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    இளம்பெண் மீது வாலிபர் நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம், கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பனந்தோப்பு மங்களம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் மேச்சேரி. இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 22).

    நேற்று பச்சையம்மாள் வீட்டில் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான கோவிந்தராஜ் என்பவர் மகன் கார்த்திக் (17) வந்தார். குடிபோதையில் இருந்த அவர் , பச்சையம்மாள் வீட்டுக்கு வந்து அவரிடம் ‘தீப்பெட்டி இருந்தால் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டார். அதற்கு பச்சையம்மாள் ‘தீப்பெட்டி இல்லை’ என்று மறுத்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

    இதை கேட்டு வாலிபர் கார்த்திக்குக்கு ஆத்திரம் வந்தது. பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    சிறிதுநேரம் கழித்து கார்த்திக், ஒரு நாட்டு துப்பாக்கியுடன் பச்சையம்மாள் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது வீட்டு வேலைகளை பார்த்து கொண்டிருந்த பச்சையம்மாளை நோக்கி நாட்டு துப்பாக்கியால் திடீரென ஆவேசத்துடன் சுட்டார். இதில் பச்சையம்மாளுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் அவர் அலறி துடித்தார்.

    இதை பார்த்து வாலிபர் கார்த்திக், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்,

    பின்னர் காயம் அடைந்த பச்சையம்மாளை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    மேலும் கார்த்திக் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் கார்த்திக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இளம்பெண் மீது வாலிபர் நாட்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம், கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 264 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே, கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் உரிய அனுமதி வழங்கவில்லை. இதனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 134 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 130 பேர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ராயக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளாரிஅக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் அப்பாவு (வயது 57). விவசாயி. இவர் தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அப்பாவு நேற்று இறந்தார். அப்பாவு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 35). கெலமங்கலம் ஒன்றிய பா.ஜனதா கட்சி இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். கடந்த, 15-ந் தேதி இரவு குந்துமாரனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே, கெலமங்கலத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன் சேர்ந்து, வடமாநில தொழிலாளி ஒருவர் பிறந்த நாள் கொண்டாடினார்.

    இதற்கு போத்தசந்திரம் பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதன், இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே குடிபோதையில் இருந்த போத்தசந்திரத்தை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்து, ரங்கநாதன் வீட்டிற்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று, ஓட, ஓட அவரை விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர், ரங்கநாதன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது போத்தசந்திரத்தை சேர்ந்த தமிழரசன் (21), அம்ரீஷ் (20), ராஜேஷ் (23), சின்னராஜ் (22), தேவகுமார் (25), ராமு (26), லட்சுமணன் (24), பிரகாஷ் (26), கூட்டூர் கிரி (26) ஆகிய 9 பேரும் ரங்கநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேரையும் கெலமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
    ராயக்கோட்டை அருகே தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டையை அடுத்த பெத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அம்சவேணி(வயது 17). இவர் ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இவருடைய தாயார் தோட்டத்திற்கு வருமாறு அம்சவேணியை அழைத்துள்ளார். ஆனால் அம்சவேணி வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மகளை கண்டித்து விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்தபோது அம்சவேணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

    மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாவித்திரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தளி அருகே மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதி கணவன்-மனைவி பலியானார்கள்.
    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு கோவிந்தபுரா பகுதியை சேர்ந்தவர் சதர்கான் (வயது 67). இவர் மரக்கடை நடத்தி வந்தார். இவர், தனது மனைவி குலாப்கான் (55) என்பவருடன் நேற்று முன்தினம் தளி பகுதியில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் அவர்கள் தேன்கனிக்கோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    தளி-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ராம்நகர் அருகே இரவு சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்ட சதர்கான் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த குலாப்கானை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் நேற்று அதிகாலை இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் இறந்த கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    உத்தனப்பள்ளி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 28). பெயிண்டர். இவருக்கும், இவரது மனைவி அர்ச்சனா (21) என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு வெளியே சென்ற முனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கரடிகுட்டை கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கெலமங்கலம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. பிரமுகரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 35). தனியார் பள்ளி பஸ் டிரைவரான இவர் கெலமங்கலம் ஒன்றிய பா.ஜ.க. இளைஞரணி தலைவராகவும் இருந்து வந்தார். இவரை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரங்கநாதன் தனது மகன் பிறந்த நாளையொட்டி குந்துமாரனப்பள்ளியில் உள்ள பேக்கரி கடைக்கு கேக் வாங்க சென்றார்.

    அப்போது குந்துமாரனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் கெலமங்கலத்தை சேர்ந்த சதிஷ் என்பவருடன் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இதற்கு, போத்தசந்திரம் பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே ரங்கநாதன் இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். வடமாநில தொழிலாளிக்கு ஆதரவாக ரங்கநாதன் பேசியதால் ஆத்திரமடைந்த போத்தசந்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கநாதன் வீட்டுக்கு வந்து அவரை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதை தடுக்க முயன்ற அவரது மனைவி கீதா (25) மற்றும் அண்ணன் மஞ்சுநாத் (37) ஆகியோரையும் அவர்கள் தாக்கியதும் தெரியவந்தது.

    மேலும் போத்தசந்திரத்தை சேர்ந்த தமிழரசன் (21), அம்ரீஷ் (20), ராஜேஷ் (23), சின்னராஜ் (22), தேவகுமார் (25), ராமு (26), லட்சுமணன் (24), பிரகாஷ் (26), கூட்டூரை சேர்ந்த கிரி (26) ஆகிய 9 பேர் ரங்கநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதில் பிரகாஷ் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி குந்துமாரனப்பள்ளியில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இதேபோல் நேற்று ஓசூரில் பா.ஜ.க.வினர் மற்றும் ரங்கநாதனின் உறவினர்கள், பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முரளி, சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குற்றவாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் ஸ்வேதா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசலு மற்றும் கட்சியினர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, கொலையாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

    பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கெலமங்கலம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.
    கிருஷ்ணகிரி அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியை அடுத்த ராமர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித்தொழிலாளி. இவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் இவரது மனைவி பானுமதி (வயது 50)-க்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பானுமதி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பானுமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரங்கநாதன் (வயது 35). இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். தற்போது பா.ஜனதா கட்சியில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி கீதா(25) என்ற மனைவியும், ரிஷிகேஷ் (3), தனஞ்செயன் (1) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று ரங்கநாதனின் மகன் தனஞ்செயனின் பிறந்த நாள் ஆகும். இதனால் மகன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ரங்கநாதன் அப்பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று கேக் வாங்கினார்.

    பிறகு இரவில் ரங்கநாதன் வீடு அருகே சென்றார். அப்போது அங்கு கார், மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென ஒரு மர்ம கும்பல் வந்தனர். அவர்கள், ஆயுதங்களால் ரங்கநாதனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கி வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக் கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலையுண்ட பா.ஜனதா பிரமுகர் ரங்கநாதனுக்கும், பொட்டசந்திரம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கநாதனை கொலை செய்தவர்கள் அந்த கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை குந்துமாரனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே பா.ஜனதாவினர் திடீரென திரண்டனர். பா.ஜனதா மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் அக்கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, ஓசூர் கலால் டி.எஸ்.பி. சங்கர், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர்கள் ராயக்கோட்டை கமலேசன், தேன்கனிக் கோட்டை சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர், ‘ரங்கநாதனை கொன்ற கும்பலை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்’ என்று கூறினர். இதைத்தொடர்ந்து பா.ஜனதாவினரிடம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானக்கண்ரகுநாதன் மற்றும் போலீசார், கன்டகானப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த மாதேஷ் (வயது 46), மாரப்பா(38), கிருஷ்ணமூர்த்தி(46), சீனிவாசன்(48), மல்லேஷ்(28) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், பர்கூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார், பூமாலை நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த சரவணகுமார்(42), பார்த்தீபன்(28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    உத்தனப்பள்ளி அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா இருதாளம் பக்கமுள்ள தாசன்புரத்தை சேர்ந்தவர் லட்சுமய்யா (வயது 52). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது சகோதரர் மற்றும் அவருடைய மகன்களுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் மாலை வேலை முடிந்து அவரது சகோதரர் மற்றும் அவரது மகன்கள் வீடு திரும்பினார்கள். ஆனால் லட்சுமய்யா தனது நிலத்தில் உள்ள கால்நடை கொட்டகைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய உறவினர்கள் தோட்டத்திற்கு சென்ற அங்கு கொட்டகையில் உடல் எரிந்த நிலையில் லட்சுமய்யா பிணமாக கிடந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமய்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உத்தனப்பள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×