என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஊத்தங்கரை அருகே லாரி டிரைவரை கொலை செய்த வழக்கில் கிளீனருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் அருகே புருஷோத்தமன் தெருவை சேர்ந்தவர் அரிபிரசாத் (வயது 47). சொந்தமாக டாரஸ் லாரி வைத்துள்ளார். இவரது லாரியில் டிரைவராக திருவண்ணாமலை மாவட்டம் அடிஅண்ணாமலையை சேர்ந்த பன்னீர் (42) என்பவர் வேலை செய்தார். கிளீனராக வேலூர் மாவட்டம் உத்திரமாதா கோவில் பச்சையப்பன் தெருவை சேர்ந்த சந்துரு என்கிற சந்திரசேகர் (44) இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி டாரஸ் லாரியில் சரக்கு ஏற்றி கொண்டு டிரைவர் பன்னீரும், கிளீனர் சந்துருவும் சென்றனர். அப்போது சந்துரு டிரைவர் பன்னீரிடம் வழியில் சரக்குகளை லாரியில் ஏற்றி செல்லலாம் என்றும் செலவுக்கு அந்த பணத்தை வைத்து கொள்ளலாம் எனவும் கூறினார்.

    இதற்கு டிரைவர் பன்னீர் மறுத்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பன்னீர் தனது முதலாளி அரிபிரசாத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் ஊத்தங்கரை அருகே கதவணி பிள்ளையார் கோவில் அருகே லாரி வந்தது. அந்த நேரம் தன்னை முதலாளியிடம் டிரைவர் பன்னீர் காட்டி கொடுத்து விட்டாரே என சந்துரு ஆத்திரத்தில் இருந்தார்.

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துரு, பன்னீரை சரமாரியாக குத்தினார். இதில் பன்னீர் இறந்தார். இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளீனர் சந்துரு கைது செய்தனர்.

    இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமாரி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சந்துரு என்கிற சந்திரசேகருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.
    ஊத்தங்கரை அருகே சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை பக்கமுள்ள அத்திப்பாடியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். 

    இதில் திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்த பூவரசன் (வயது21) என்பவர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் பிரதமரின் நிதி உதவி திட்டம் மூலமாக முறைகேட்டில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    பிரதமரின் கிஷான் நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக தொகையை மீட்டெடுத்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 97 தகுதியற்ற பயனாளிகளில் நேற்று வரையில் 4 ஆயிரத்து 972 பயனாளகளிடம் இருந்து ரூ.1 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மீதம் உள்ள 3,125 பயனாகளிடம் இருந்து உரிய தொகையை வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலமாக வசூலித்து அரசு கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரதமரின் கிஷான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் மற்றும் அவர்களை தவறுதலாக சேர்த்த கணினி மையங்களின் உரிமையாளர்கள், சம்பந்தபட்ட அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.சி.ஐ.டி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக 51 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சூளகிரி அருகே விவசாயி கொலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவருடைய மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்கவாரம் பக்கமுள்ள சஞ்சீவபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணப்பா என்கிற நாராயணசாமி (வயது 46). விவசாயி. இவர் வழக்கமாக இரவு தனது தோட்டத்தில் காவலுக்கு இருந்து அங்கேயே தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் காலை அவர் மாந்தோப்பில் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்த சூளகிரி போலீசார் நாராணயப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது நாராயணசாமியின் மகன் அருண்குமார் (20), அவரது தம்பி பசப்பா மகன் அஜித்குமார் (20), ஆகிய 2 பேரும் நாராயணப்பாவை அடித்துக்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட நாராயணப்பா நிலத்திற்கு வேப்பனப்பள்ளி அடுத்த கரியசந்திரத்தை சேர்ந்த விதவை பெண் ஒருவர் வேலைக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும், நாராயணப்பாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் நாராயணப்பா வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று அடமானம் வைத்து பணத்தை அவர் செலவு செய்து வந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அருண்குமாரும், தம்பி மகன் அஜித்குமாரும் கட்டை மற்றும் இரும்பு கம்பியால் நாராயணப்பாவை அடித்துக்கொலை செய்ததும், இவர்கள் 2 பேரும் சூளகிரி அருகே உள்ள தனியார் அட்டை கம்பெனியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மகனே தந்தையை அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தேன்கனிக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்குதல் நடத்தி வருவதாக கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    இதற்கு வட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இதில் மாநில குழு உறுப்பினர் ஆனந்த், அரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை தாக்கியவர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாம்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
    கல்லாவி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள மேட்டு சூளகரையைச் சேர்ந்தவர் முத்தரசு. இவரது மனைவி கல்பனா (வயது 23). இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் முத்தரசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த கல்பனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்பனாவின் தந்தை முனுசாமி கல்லாவி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஓசூர் அருகே உள்ள திப்பாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மனைவி மஞ்சுளா (வயது 43). திம்மராயப்பாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மஞ்சுளா, உடலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதில் பலத்த தீக்காயம் அடைந்த மஞ்சுளா சிகிச்சைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து மஞ்சுளாவின் மகள் மாலா அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்காரப்பேட்டை அருகே சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
    ஊத்தங்கரை:

    சிங்காரப்பேட்டை அருகே உள்ள எலவம்பாடியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். 

    இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜம்மானபுதூர் பக்கமுள்ள ஏ.கே.மோட்டூரைச் சேர்ந்த பிரேம்குமார் (வயது32) என்பவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வேலுமணி நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் வேலுமணி (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து இவரை உடன் பணிபுரியும் போலீசார் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

    அப்போது அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மீண்டும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே போலீஸ் ஏட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த வேலுமணி கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். 

    இவருக்கு விஜி(40) என்ற மனைவியும், மோகன்பிரசாந்த்(20), விஸ்வபிரகாஷ்(17) என 2 மகன்கள் உள்ளனர். இறந்த ஏட்டு வேலுமணியின் உடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேல், சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செல்லம்பட்டியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் உடல் அடக்கம் நடந்தது. அப்போது 21 குண்டுகள் முழங்க போலீசார், வேலுமணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பணியின் போது தலைமை காவலர் இறந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஆவின் நிறுவன காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியை அடுத்த மேல்சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 55). இவர் கிருஷ்ணகிரி ஆவின் பால் பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணியை முடித்து கொண்டு மேல்சோமார்பேட்டை கூட்ரோடு அருகே சைக்கிளில் அவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார், சைக்கிள் மீது மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட முனியப்பன் பலத்த காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முனியப்பன் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    நெருப்புகுட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் போலீசார் நெருப்புகுட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சூதாடிய அதேபகுதியை சேர்ந்த சின்னதம்பி (வயது 38), கோவிந்தராஜ் (22), ராஜ்குமார் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    தொப்பூர் அருகே வேன் கவிழ்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நல்லம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து பழுதடைந்த கார் ஒன்றை கயிறு கட்டி, வேன் மூலம் சேலத்திற்கு நேற்று முன்தினம் இழுத்து வந்தனர். இந்த வேனை காவேரிப்பட்டணத்தை சேர்ந்த டிரைவர் இர்பான் (வயது 22) என்பவர் ஓட்டி சென்றார். வேனில் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கவுதம் (22), ரூமன் (21), முகமது (21) ஆகியோர் உடன் வந்தனர்.

    தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தொம்பரகாம்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளி கவுதம் படுகாயம் அடைந்தார். டிரைவர் இர்பான் மற்றும் தொழிலாளர்கள் ரூமன், முகமது ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று இர்பான் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது தொழிலாளி கவுதம் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து காயம் அடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள வத்தல பள்ளி அருகே சஞ்சீவபுரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). விவசாயி. இவருக்கு எல்லம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நாராயணன் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இரவு படுத்து உறங்குவது வழக்கம்.

    இதேபோல் நேற்று இரவு தோட்டத்திற்கு சென்றார். அங்கு மூன்று பேருடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

    இந்த நிலையில் இரவு எல்லம்மாள், நாராயணனுக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார். உணவை வாங்கிய நாராயணன் திட்டி அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

    பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் எல்லம்மாள் தோட்டத்திற்கு வந்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் நாராயணன் பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த எல்லம்மாள் கதறி அழுதார்.

    இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் நாராயணன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    மதுஅருந்திய போது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணனுடன் மது அருந்திய அந்த மூன்று பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் சூளகிரி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×