என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு திடீர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வேலுமணி நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் வேலுமணி (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து இவரை உடன் பணிபுரியும் போலீசார் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவரை மீண்டும் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே போலீஸ் ஏட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்த வேலுமணி கிருஷ்ணகிரி மாவட்டம் செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்.
இவருக்கு விஜி(40) என்ற மனைவியும், மோகன்பிரசாந்த்(20), விஸ்வபிரகாஷ்(17) என 2 மகன்கள் உள்ளனர். இறந்த ஏட்டு வேலுமணியின் உடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேல், சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் செல்லம்பட்டியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் உடல் அடக்கம் நடந்தது. அப்போது 21 குண்டுகள் முழங்க போலீசார், வேலுமணியின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். பணியின் போது தலைமை காவலர் இறந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






