search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பேர் சிக்கினர்

    பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கி, வங்கி மேலாளர்கள் மூலமாக தொகையை மீட்டெடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.

    இதில் தகுதியற்ற 8,408 பயனாளிகளில், இதுவரை 3,007 பயனாளிகளிடமிருந்து ரூ. 1 கோடியே 15 லட்சத்து 20 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு, அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து உதவி தொகையை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வசூல் செய்து, அரசுக்கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், இத்திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை சேர்த்து, தவறுதலாக பயனடைந்த தனிநபர்கள், கணினி மையங்கள் குறித்து ஒரு முழுமையான விசாரணை செய்து, அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து, அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சிபிசிஐடி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 2 ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் ஒரு தனி நபர் என 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது பெயர், விபரம் வெளியிடப்படவில்லை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×