search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது - 33 பவுன் நகை மீட்பு

    பர்கூர் பகுதியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வாணியம்பாடியை சேர்ந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 33 பவுன் நகைகளை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வென்னம்பள்ளி பகுதியை சேர்ந்த சாந்தா, சின்னகாரகுப்பத்தை சேர்ந்த வாசுகி, பண்டசீமனூர் பகுதியை சேர்ந்த கல்கண்டு, கொண்டப்பநாயனபள்ளியை சேர்ந்த தமிழ்ராணி ஆகியோர் பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதை தொடர்ந்து மர்ம நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த காட்வின் மோசஸ் என்பவர் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் காட்வின் மோசஸ் பர்கூர், கந்திகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும், பிரபல திருடன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். அந்த நகைகளை உரியவர்களிடம் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    Next Story
    ×