என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூரில் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.54 லட்சம் சிக்கியது.

    ஒசூர்:

    தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    மாநிலம் முழுவதும் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், போக்கு வரத்து சுங்க சாவடிகள்,டாஸ்மாக் கடைகள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகங்கள் என லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.7 கோடி பணம், 7 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச புகாரில் தொடர்புடைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த அதிரடி சோதனையில் லஞ்ச பணம் ரூ.2.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இன்று காலை நடந்த இந்த அதிரடி சோதனை பற்றிய விவரம் வருமாறு:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை 4 மணி முதல் மாவட்ட எஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி கிருஷ்ணராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இதில், கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 40 ரூபாய் மேஜைக்கடியில் இருந்து கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த சோதனைச் சாவடியில் வெளி மாநிலத்தில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை, இங்குள்ள பணியாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதிப்பதால் அதிக அளவு விபத்து ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து, தொடர்ச்சியாக அடிக்கடி லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 12-ந் தேதி ஓசூர் பகுதியில் உள்ள மற்றொரு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடை பெற்றது. இன்று கர்நாடக பகுதியில் இருந்து வாகனங்கள் தமிழகத்திற்குள் நுழையும் பகுதியான ஜுஜுவாடி பகுதியில் அதிரடியாக சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    ராயக்கோட்டை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவரது மனைவி விஜயசாந்தி (வயது 22). கடந்த 8.8.2020 அன்று குடும்ப பிரச்சினை காரணமாக அவர் வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விஜயசாந்தியின் தாய் முனியம்மா ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். இதனால் மன உளைச்சல் அடைந்த தனது மகள் தற்கொலை செய்து விட்டதாக கூறியிருந்தார். இந்த நிலையில் திருமணம் ஆகி 5 ஆண்டில் விஜயசாந்தி இறந்திருந்ததால் இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக ராயக்கோட்டை போலீசார் மாற்றினர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஓசூர் சிறையில் அடைத்தனர்.
    மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூரை அடுத்த சிவம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு பிரபு மோட்டார்சைக்கிளில் மத்தூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது போச்சம்பள்ளி சமத்துவபுரம் அருகே வந்தபோது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பிரபு ஓட்டிசென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் தலையில் அடிபட்டு பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 78). இவருக்கு மணிமேகலை, ராஜேஸ்வரி என 2 மனைவிகள் உள்ளனர். இந்தநிலையில், வேடியப்பனுக்கு சொந்தமான வீட்டை 2-வது மனைவி ராஜேஸ்வரிக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த முதல் மனைவி மணிமேகலை மற்றும் அவரது 3 மகன்கள் கேட்டனர். இதனால் மனமுடைந்த வேடியப்பன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊத்தங்கரை அருகே புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் ரோந்து சென்றனர். அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற அந்த பகுதியை சேர்ந்த சந்திரன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    மேலும் கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ராயக்கோட்டை அருகே திருநங்கை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராகவி (வயது 26). திருநங்கையான இவர் நேற்று முன்தினம் விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து திருநங்கை ராகவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    ஊத்தங்கரை:

    சிங்காரப்பேட்டை அருகே உள்ள சென்னூரை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய உறவினர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதில் போச்சம்பள்ளி தாலுகா சுண்டகாப்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 25) என்பவர் மாணவியை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயக்கோட்டை அருகே கெலமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியர்களிடம் தகராறு செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள ஒன்னுகுறிக்கி கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்தர் (வயது 47). தொழிலாளி. இவர் கெலமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு, நேற்று மது போதையில் வந்தார். 

    பின்னர் அங்கு பணியில் இருந்த ஊழியர்களை அவர் ஆபாச வார்த்தையால் திட்டி தகராறு செய்தார். இது குறித்து மின்சார வாரிய உதவி பொறியாளர் கண்ணையன் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்தரை கைது செய்தனர்.
    ராயக்கோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    கெலமங்கலம் அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா (வயது 31). மனநலம் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 

    பின்னர் வீட்டுக்கு வந்த அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் பழனி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சேகர், சிவராஜ், கண்ணு, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த போராட்டத்தில் விவசாயிகள் ஏர் கழப்பை, மண் வெட்டி, நெற்பயிர்களை கையில் ஏந்தியவாறு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நஞ்சுண்டன், சின்னசாமி ஆகியோர் பேசினாாகள்.

    இந்த போராட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின் மசோதா, 2020ஐ சட்டமாக்கக்கூடாது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் விவசாயிகளை இழுத்தடிக்க கூடாது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர் அருகே தீயில் கருகி மூதாட்டி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 80). இவருடைய கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கோவிந்தம்மாள் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மூதாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மண்எண்ணெய் விளக்கு தவறி விழுந்து மூதாட்டி மீது பிடித்து கொண்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தம்மாள் கூச்சலிட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து மூதாட்டியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் தீ வீட்டில் மளமளவென பரவியதால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    பின்னர் தீயணைப்பு படையினர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உடல் கருகிய நிலையில் மூதாட்டி இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும் வீடும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இளம்பெண் பலியானார். மேலும் 16 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனிடையே கிருஷ்ணகிரியை சேர்ந்த 26 வயது இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு ரத்தம், சளி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பெண் கடந்த 13-ந் தேதி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த இளம்பெண் பலியானார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இவர்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 422 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 150 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
    ×