என் மலர்tooltip icon

    கரூர்

    • உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடைபெற்றது
    • மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உலக சுற்றுலா தினவிழா- 2023 முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழாவினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் விழிப்புணர்வுசுற்றுலா பயணத்தை சுற்றுலாத்துறையின் மூலமாக கரூர் மாவட்டத்தைச் சார்ந்த அரசு ஆதி திராவிட பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள 50 மாணவர்களை தேர்ந்தெடுத்து புகழிமலை சமணர்படுக்கை, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசு அருங்காட்சியகம், இராயனூர் மைசூர் போர் நினைவுதூண், திருக்காம்புலியூர் அம்மா பூங்கா மற்றும் வைகைநல்லூர் குண்டாங்கல் சமணர்சிற்பம் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டது .இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தினை மாணவ, மாணவியர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அறிவு சார்ந்த நல்ல தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, உதவி சுற்றுலா அலுவலர் காமில் அன்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

    • கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதிகளில் நாளை மறுநாள் மின் தடை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பணிகள் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்திலிருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின் பாதையிலும் , தொழிற்சாலை மின் பாதையில் புகளூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நானப்பரப்பு,புகளூர்,செம்படாபாளையம் ,தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம், வீரராஜபுரம், தர்மராஜபுரம், செந்தூர் நகர், மேத்யூ நகர், தோட்ட குறிச்சி கிழக்கு ,ஈ ஐ டி பாரி எதிரில்.பூங்காநகர்,செந்தூர்நகர்,20.லைன்.தெரு,மாரியப்பபிள்ளைதெரு,கக்கன் காலனி, கிழக்கு தவிட்டுப்பாளையம் ,தளவாபாளையம், குண்ணிக்காட்டூர் ,கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம், தெற்கு மலையம்மன் கோழிப்பண்ணை, குமாரசாமி கல்லூரி, தளவாபாளையம் மேற்கு, தளவாபளையம் என்.ஹெஜ் 7 ,தெற்கு அம்மாபட்டி ,ஜல்லி மெஷின், பூஜா கோழி பண்ணை,கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை , பெரியபுதூர், ஆவரங்காட்டு புதூர், மூர்த்திபாளையம் , பண்டுதகாரன்புதூர் , கணபதிபாளையம் புதூர், அய்யம்பாளையம் , செங்காட்டனூர், மூணூட்டு பாளையம்,மலையம்மன்நகர் மற்றும் இதர பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • மலைத்தேனீக்கள் அந்த வழியாக சென்றவர்களை அவ்வப்போது தீண்டி அச்சுறுத்தி வந்தது.
    • மலை தேனீக்கள் தீண்டியதில் விவசாயி ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன் புதூர் பகுதி சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). விவசாயி. இவரது தோட்டம் செல்வநகர் பகுதியில் உள்ளது. அவரது தோட்டத்தின் அருகே இருந்த தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    இந்நிலையில் மலைத்தேனீக்கள் அந்த வழியாக சென்றவர்களை அவ்வப்போது தீண்டி அச்சுறுத்தி வந்தது. ராமசாமி நேற்று தண்ணீர் பாய்ச்சுவதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் பறந்து சுற்றி திரிந்த மலை தேனீக்கள் ராமசாமியை தீண்டியது.

    இதில் வலி தாங்க முடியாமல் ராமசாமி அருகில் இருந்த கிணற்று தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் நீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கி இருந்து விட்டு மூச்சு தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் கிணற்றுக்கு மேலே வந்தபோது அங்கு சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மலை தேனீக்கள் ராமசாமியை சுற்றி மீண்டும் கொட்டியது.

    இதில் ராமசாமி மயக்கம் அடைந்தார். அதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் ராமசாமியை வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்வ நகர் பகுதியில் தென்னை மரத்தில் கூடு கட்டி உள்ள ஆயிரக்கணக்கான மலை தேனீக்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மலை தேனீக்கள் தீண்டியதில் விவசாயி ஒருவர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கரூரில் கணவனை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்

    கரூர்,  

    கரூர் மாவட்டம், சணப்பிரட்டி வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த, ஜெயகாந்தன் மனைவி மதுமதி (வயது 26) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த, 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுமதி, திரும்பி வர வில்லை.

    உறவினர்களின் வீடுகளுக்கும், மதுமதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் ஜெயகாந்தன், போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுமதி எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகின்றனர்.

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டிட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆதார் கார்டை ஒப்படைக்க வந்த 15 பேர் கைது

    கரூர் 

    கரூர் அரசு காலனியில் ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பில்டர்ஸ் நிறுவனம் 80 வீடுகளை கட்டி விற்பனை செய்தது.

    கட்டிய வீடுகள் யாவும் தரமற்று இருப்பதாகவும் வீடுகளை உடன் சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கையோடு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக முதல்வர், கரூர் கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் கரூர் ஆர்.டி.ஓ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளை பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.

    இப்பகுதியில் தார் சாலைகள் அமைக்கப்படவில்லை, சாக்கடை வசதி, குடிநீர் வசதி செய்து தரவில்லை. இது குறித்து முறையிட கலெக்டர் ஆர்.டி.ஓ. என்று பல அதிகாரிகளை சந்தித்து வருகிறோம். மேலும் அந்த நிறுவனத்தை அரசு முடக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்ற ஒப்படைக்க போவதாக அறிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு காலனி சேகர் தலைமையில், 15-க்கும் மேற்பட்டோர் தங்களின் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைக்க வந்தனர். ஆனால் அவர்கள் போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனை அடுத்து அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 15-க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • புகளூர் காகித ஆலை மேலாளர் தற்கொலைக்கு காரணம் என்ன?போலீசார் தீவிர விசாரணை
    • தோட்டத்திற்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேலாயுதம் பாளையம், போலீசார் தீவிர விசாரணை

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள மசக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சிவக்குமார்(வயது 47). இவர் புகளூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் விற்பனை பிரிவு முதுநிலை மேலாளராக பணியாற்றி பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி(42). இவர்களுக்கு கிருத்திக் (12) என்ற மகன் உள்ளார் .இவர் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

    சிவக்குமார் டிஎன்பிஎல் காகித ஆலையில் பணியாற்றி வருவதன் காரணமாக காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் மசக்கவுண்டன் புதூரில் உள்ள அவருக்கு சொந்த மான தோட்டத்திற்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கேள்வியுற்று அங்கு வந்த அவரது உறவி னர்கள், சிவகுமாரை மீட்டு வேலாயுதம்பாளையம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்த னர். இதுகுறித்து சிவகு மாரின் மனைவி ஜெயந்தி தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த அவர் கணவ ரின் உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்களின் நெஞ்சை கனக்க செய்தது.

    பின்னர் இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வேலாயுதம்பா ளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.

    அவர் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக சிவக்குமார், கடந்த ஒரு வாரமாக காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீட்டிற்கு செல்லாமல் தனது சொந்த ஊரான மசக்கவுண்டன் புதூரில் தங்கி இருந்து அங்கு சாப்பிட்டு வந்துள்ளார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக அவர் உளைச்சலுக்கு ஆளானதாக தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்து உள்ளது.

    கரூர் அரசு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில்தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் மண்ம ங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கம், இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு இணைந்து தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு கல்லூரி கலை யரங்கில் நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் துணைக் குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் நடேசன், தாளாளர் கோதை நடேசன், செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளோபல் சமூகநல பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் சங்கர் வரவேற்றார்.

    கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கௌசல்யா, குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம், குளித்தலை கிராமியம் இய க்குனர் டாக்டர் நாராயணன், இலங்கை தமிழர் நலன் தனி வட்டாட்சியர் நேரு ஆகி யோர் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பேசினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவ ருக்கும் சட்ட கையேடு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.முடிவில் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமாபிரியா நன்றி கூறினார்.

    நவராத்திரி 3-வது நாளை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோவிலில் நவராத்திரி 3- நாளை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதேபோல் சேமங்கி மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை கோவில், நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில், புன்னம் மாரியம்மன், பேரூர் அம்மன் கோவில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை கோவில், மாரியம்மன் கோவில், நன்செய் புகளூர் பத்ரகாளி கண்டியம்மன் கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சிஅம்மன், உப்பு பாளையம் மாரியம்மன், புன்னம் மாரியம்மன், பகவதி அம்மன், பேரூர்அம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன், மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் நவராத்திரி 3-வது நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • கரூர் நன்னியூர் புதூரில் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
    • மீண்டும் மணல் அள்ள அனுமதி கோரி போராட்டம்

    கரூர்,

    கரூர் மாவட்டம் நன்னியூர் புதூரில் செயல்பட்டு வரும் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கரூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,

    கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் நன்னியூர் புதூர் கிராமத்தில் அரசு மணல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மணல் கிடங்கில் கடந்த ஒன்றரை மாதங்களாக அமலாக்கத்துறை சோதனையால் குவாரிகள் மூடப்பட்டு மாட்டு வண்டியில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்களது மாடுகளுக்கு தீவனமாக வாங்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் குவாரியில் மணல் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தஞ்சை போன்ற மாவட்டங்களில் மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி இருக்கும் நிலையில் கரூர் மாவட்டத்திலும் மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி வழங்க வேண்டும். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் மூலம் லாரிகளுக்கு மணல் அல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தவுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு மணல் கிடங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி கொடுக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். 

    • தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக மணல் திருட்டு நடைபெறுகிறது
    • மணல் அள்ளுபவர்கள் குறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

    வேலாயுதம்பாளையம், 

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக கரூரில் பல மணல் குவாரிகள் செயல்பட வில்லை. இதனால் கரூர் சுற்று வட்டார பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றில் சிலர் சட்ட விரோதமாக இரவு நேரத்தில் லாரிகளில் கடத்துகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றுக்கு சென்று மணல் அள்ளிய இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆற்றுக்கு செல்லும் பாதையில் வாகனங்கள் செல்லாத வகையில் குழி பறித்து வைத்தனர். ஆனால் மணல் கொள்ளையர்கள் அந்த குழியை மூடி பாதையை சரி செய்து தொடர்ந்து மணல் அள்ளி வருகின்றனர்.

    மணல் கொள்ளை தொடர்பாக வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை, போலீசார் ஆகியோருக்கு தொடர்ந்து தகவல் அளித்தும் மணல் அள்ளுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தோட்டக்குறிச்சி பகுதி பொதுமக்கள் கூறும்போது, தோட்டக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் இங்குள்ள காவிரி கரை ஓரம் செங்கல் சூளை வைத்துள்ளார். இவர் இரவில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி தனது இடத்தில் கொட்டி வைக்கிறார். அதை நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உழவர்பட்டியை சேர்ந்த ஒருவர் தனது லாரி மூலம் அள்ளி செல்கிறார். அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் மணல் அள்ளுபவர்கள் குறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை. இதனால் அவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே காவிரி கரையில் இதுபோல் திருட்டு மணல் அள்ளிய குழிகள் அனைத்தும் தற்போது புதை குழிகளாக மாறி உள்ளது. இதில் சிக்கி ஆற்றில் குளிக்க சென்ற வெளியூரை சேர்ந்த பலர் இறந்துள்ளனர். இருந்தும் மணல் அள்ளுபவர்கள் திருந்தவில்லை. அதை வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளும் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

    • விடிய விடிய பெய்த மழையால் அரசகவுண்டனூர் செம்மடை குளம் கரை உடைப்பு ஏற்பட்டது
    • கரையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

    குளித்தலை, 

    கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளான செம்பியநத்தம் ஊராட்சி அரச கவுண்டனூரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில செம்மடை குளம் உள்ளது.

    இந்தக் குளத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பினால் தண்ணீர் வெளியே செல்வதற்கு மிக குறுகிய அளவில் கடைக்காவல் உள்ளது. இந்த குளம் மழைக்காலங்களில் நீர் நிரம்பி நின்றால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கான நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கிணற்றுகளில் தண்ணீர் ஊற்று அதிக அளவில் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருகின்றனர்.

    இந்நிலையில் இரவு அப்பகுதியில் கனமழை பெய்தது. கனமழையில் குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறும் வழி மிகவும் குறுகலாக உள்ள காரணத்தினால் உடைந்து தண்ணீர் அதிக அளவில் வீணாகி செல்கிறது. இதனால் செம்மடை குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும்.உபரி நீர் வெளியேறும் கடைகால் பகுதியை சிமெண்ட் பூச்சு கொண்டு கட்ட வேண்டும். வெளியேறும் உபரி நீர் வீணாகாமல் அருகிலுள்ள வெல்லப்பாறை குளத்திற்கு செல்லுமாறு வழிவகை செய்ய வேண்டும் மற்றும் குளத்தில் உள்ள தண்ணீர் அதிக அளவில் வெளியேறும் முன் கரையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புன்னம் சத்திரத்தில் 2 மணி நேரம் சிலம்பு சுற்றி மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்
    • மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் , சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் பொன்னும் சத்திரம் சேரன் பள்ளி வளாகத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 92 -வது பிறந்த நாளை முன்னிட்டு சிலம்பத்தில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவனர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்து சிலம்பு சுழற்றும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்து வயதுக்கு மேல் உள்ள 550-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்ஐஸ் கட்டி மீது நின்று சிலம்பம் சுற்றுவது, சைக்கிளில் சுற்றிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, கண்ணை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றுவது, பானையின் மீது நின்று கொண்டு சிலம்பம் சுற்றுவது, முட்டை அட்டியின் மேல் நின்று சிலம்பம் சுற்றுவது, ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றுவது என சுமார் 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பதக்கம், சான்றிதழ், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட சிலம்பம் சங்கத்தின் தலைவர் சுரேஷ், கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் கார்த்திக், எக்ஸ்போ பிரைட் கிளை மேலாளர் சிவக்குமார் , கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வீரதிருப்பதி, பாரதம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் ஆசான் சௌந்தரராஜன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் , சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    ×