என் மலர்
கரூர்
- ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கான ஆலோசனை முகாம்
- கரூர் கலெக்டர் பிரபு சங்கர் அழைப்பு
கரூர்,
ஆதிதிராவிடர் மாணவ, மாணவி யருக்கு தொழில், வேலைவாய்ப்பு வழிகாட்டும் ஆலோசனை முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் வழிகாட்டும் ஆலோசனை முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 25) கரூர் அரசு கூட்டரங்கில் ஆலோசனை முகாம் நடைபெறும். இதே போல குளித்தலை கோட்டத்துக்கு வரும் 26-ந்தேதி அய்யர்மலை அரசு கலை கல்லுாரி கூட்டரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதி திராவிட மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- 5234 போலீசார் சார்பில் ரூ.16.27 லட்சம் நிதி வழங்கப்பட்டது
- கரூர் எஸ்.பி.சுந்தரவதனம் வழங்கினார்
கரூர்,
சாலை விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 34) இவர், திண்டுக்கல் மாவட்டம், பழநியில், சிறப்பு காவல் படை போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம், சாலை விபத்தில், அஜித் உயிரிழந்தார். இதையடுத்து, 'காக்கும் உறவுகள்' 2017 பேட்ஜ் சார்பில், 36 மாவட்டங்களில், 5,324 போலீசார் மூலம், 16 லட்சத்து 27 ஆயிரத்து 439 ரூபாய் நிதி திரட்டப்பட்டது. அந்த நிதியானது அஜித் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ். பி., சுந்தரவதனம், அஜித் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
- கூப்பிட்ட குரலுக்கு வராததால் சிறுவன் தாக்கப்பட்டார்
- காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதி
கரூர்,
குளித்தலையை அடுத்த, பெருமாள் கவுண்டம்பட்டி காலனி, வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சரவணன் (வயது 15). இவர், கடந்த 21ம் தேதி, பழனி என்பவரது பெட்டிக்கடை அருகே விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது, திருச்சி மாவட்டம், எட்டரை பஞ்சாயத்து கோப்பு கிராமத்தை சேர்ந்த கோபி (வயது 28), சரவணனை அழைத்த போது, வராததால் சிறுவனை தாக்கினார். இதில் காயமடைந்த சரவணன், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, சரவணனின் தாய் சுதா அளித்த புகாரின்படி தோகை மலை போலீசார் வழக்குப்பதிந்து, கோபியை கைது செய்தனர்.
- ஜார்க்கண்ட் மாநில தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்
- விசாரணைக்கு பின்னர் உடலை வடமாநிலத்திற்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை
கரூர்,
ஜார்கண்ட் மாநிலம் சோடா மாவட்டம் பதம்பூர் பகுதியை சேர்ந்தவர் அனந்த ஹரி ராய் மகன் பரமேஸ்வரராய் (வயது 55). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது ஊரில் இருந்து கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி வாட்டர் போர்டில் சமையல் வேலைக்கு சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி தண்ணீர் பள்ளி வாட்டர் போர்டு அருகே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பிறகு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரராய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சகோதரிகள் சண்டையில் விபரீத முடிவு
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள மருதம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் சின்ராசு (வயது 43). கூலித் தொழிலாளி. இவரின் மகள்கள் பவானி (17), சுபிக்ஷா (11). இதில், சுபிக்ஷா, அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சின்ராசு தனது மனைவியுடன் வேலைக்கு சென்று வரும் நிலையில், வீட்டில் இருக்கும் சகோதரிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதே போல பவானிக்கும், சுபிக்ஷாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சுபிக்ஷா, பவானி வெளியே சென்ற நேரம் பார்த்து, வீட்டுக்குள் சென்று, புடவையை பேனில் மாட்டி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பெற்றோர்புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார், சிறுமியின் உடலை மீட்டு மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் பெற்றுத்தந்த எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கபட்டது
- குளித்தலை நங்கவரம் பகுதியில், ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
குளித்தலை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிட்ட முதல் தொகுதியான குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை நங்கவரம் பகுதியில், ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பரிந்துரைப்படி, குளித்தலை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான நங்கவரம் பகுதிக்கு புதிய காவல் நிலையம் வேண்டி குளித்தலை நகர தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குளித்தலை இரா.மாணிக்கம் சட்டமன்றத்தில் எடுத்துரைத்து நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவிலான புதிய காவல் நிலையம் பெற்று தந்தமைக்கும், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் நங்கவரம் பேரூராட்சி மக்களின் சார்பாக முத்து (எ) சுப்பிரமணி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏ. இரா.மாணிக்கத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி நச்சலூர் சங்கர், ஒன்றிய பிரதிநிதி செல்வம், விவசாய அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், தோகைமலை தி.மு.க. இளைஞரணி செயலாளர் சசிகுமார், நெய்தலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது
கரூர்:
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது: மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
15வது நிதி குழு மானியத் திட்டத்தில் நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம், முதல்வரின் பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்டுவது, பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை புனரமைப்பது, புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவது, பள்ளிகளில் புதிய சமையலறை கூடம் கட்டுதல் ஆகியற்றை வேகமாக முடிக்க வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில், நிலுவையில் உள்ள வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அன்புமணி ஆகியோர் பங்கேற்றனர்.
- தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் காவிரி ஆற்றில் ஆய்வு செய்தனர்
- தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுாரில் காவிரி ஆறு செல்கிறது. ஆற்றில் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மக்களை பாதுகாக்கும் வகையில், அந்த பகுதியை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு இன்ஸ்பெக்டர் சுபோத் டாங்கே தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். மாயனூர் கதவணை, காவிரி ஆற்று படுகை பகுதிகள், அதிகம் தண்ணீர் செல்லும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். இதில் கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கரூர் பகுதியில் தொடர் மழை பெய்தது
- இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் கோடை வெயிலில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
கரூர்:
தமிழகத்தில் வெப்ப சலனம் குறைந்ததால் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதையடுத்து நேற்று 2-வது நாளாக கரூர் டவுன், தான்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், திருமா நிலையூர், செல்லாண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் கோடை வெயிலில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: கரூரில் 2 மி.மீ., க.பரமத்தியில் 1.8 மி.மீ., மாயனுாரில் 3 மி.மீ., பாலவிடுதியில் அதிகபட்சமாக 30.3 மி.மீ., மயிலம்பட்டியில் 3 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.38 மி.மீ., மழை பதிவானது.
- கரூரில் மே 1-ந் தேதி முதல் இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது
- முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர்களை, அலுவலக வேலை நேரங்களில் நேரடியாகவோ அல்லது இ.மெயில் அல்லது தொலைபேசி வாயிலாக பெயர்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்
கரூர்:
கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் மே 1 முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மல்யுத்தம் மற்றும் ஜூடோ விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள், விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்கள் பெயர்களை, அலுவலக வேலை நேரங்களில் நேரடியாகவோ அல்லது இ.மெயில் அல்லது தொலைபேசி வாயிலாக பெயர்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கரூரில் பஸ் ஸ்டாண்டில் மயங்கி கிடந்தார்
- போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்
கரூர்,
கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத கண்பார்வை இழந்த மாற்றுத் திறன் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்திருந்தார். ரவுண்டானா பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டும் காணாமல் சென்ற நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து போலீசார்கள் மற்றும் சட்டம் ஒழுங்குபோலீஸ்காரர் அவரை அடையா ளம் கண்டு, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் அப்பகுதிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்த முதியவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத அந்த முதியவருக்கு உதவி செய்த மூன்று காவலர்களின் செயல்களை கண்ட பொதுமக்கள் `சபாஷ்' என்று பாராட்டினர்.
- மருதுார் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம்
- பிரேதத்தை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை
கரூர்,
மருதூர் டவுன் பஞ்., வீரம்பூரில் அதிகாலையில் ரயிலில் அடிபட்டு, அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார், எவ்வாறு ரயிலில் அடிபட்டார் என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






