என் மலர்
கன்னியாகுமரி
- உலக சுகாதார மையம் 2023-ம் ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்திருந்தது.
- 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை என்.வி.கே.எஸ்.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செய்து காட்சிபடுத்தினார்கள்.
திருவட்டார்:
உலக சுகாதார மையம் 2023-ம் ஆண்டை சிறு தானியங்கள் ஆண்டாக அறிவித்திருந்தது. இதையடுத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவட்டார் வட்டத்திற்கு உட்பட்ட ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி. மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கம்பு, சோளம், குதிரை வாலி உட்பட சிறு தானியங்களால் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை என்.வி.கே.எஸ்.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் செய்து காட்சிபடுத்தினார்கள். இந்த உணவு வகைகளை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சின் ஒரு பகுதியாக என்.வி.கே.எஸ்.டி. கல்லூரி வளாகத்தில் உள்ள கேன்டீனில் சிறுதானிய உணவு கவுண்டரை திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் முன்னிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் என்.வி.கே.எஸ்.டி. கல்வி குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார், மாநகராட்சி, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள், என்.வி.கே.எஸ்.டி. மேல்நிலைபள்ளி ஆற்றூர் முதல்வர் விமலாஸ்ரீ, கல்வியியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீலதா, என்.வி.கே.எஸ்.டி. வித்யாலயா வெட்டு வெந்தி முதல்வர் அனிதா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரஷோப் மாதவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.
நாகர்கோவில்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவை யொட்டியுள்ள 5 சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா பதிவு எண் கொண்டு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 3 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ஏராளமான கட்டுமான தொழிலாளர்களும், மீனவர்களும் சேர்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.
ஆசாரிப்பள்ளம், பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனிவார்டு திறக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.
குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 முதல் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 1 வாரத்தில் மட்டும் 21 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
- அண்ணாவின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி:
கொட்டாரம் பேரூர் தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கொட்டாரம் சந்திப்பில் அண்ணாவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அண்ணாவின் உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கொட்டாரம் பேரூர் தி.மு க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலைமை தாங்கி அண்ணாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க. முன்னாள் அவைத்தலைவர் ராஜகோபால், கொட்டாரம் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் சுப்பையாபிள்ளை, ஒன்றிய பிரதிநிதி சந்திரசேகர், கிளை செயலாளர்கள் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தொழில் ஆகும். இங்கு 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இந்த கடல்சீற்றத்தின் போது ஏற்படும் ராட்சத அலையில் நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம்அடைந்து விட்டன. இதனால் சேதம் அடைந்த இந்த தூண்டில் வளைவு பாலத்தை சீர மைக்க வேண்டும் என்று இந்த பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவு பாலம் நீட்டிக்கப் பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தூண்டில் வளைவு பாலத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை போடாமல் சிறிய கற்களை போட்டு தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீ னவர்களின் நாட்டுப்படகு கள் மற்றும் வள்ளங்கள் ராட்சத அலையில் சிக்கி அடிக்கடி கவிழ்ந்து மீனவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் பகுதி மீனவர்கள் கன்னியா குமரி, சின்னமுட்டம் போன்ற பகுதிகளுக்கு தங்களது நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும், நீளமாகவும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கோவளம் பகுதியை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று பொதுப்பணித் துறை கடல் அரிப்பு தடுப்பு கோட்ட பொறியாளர்கள் கோவளம் மீனவர் பிரதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் கோவளம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலத்தை கூடுதலாக 20 மீட்டர் நீளம் நீட்டித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன் பயனாக கோவளம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கம்போல் கோவளம் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
- திருமாவளவன் எம்.பி. இன்று மாலை திறந்து வைக்கிறார்
- மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார்.
நாகர்கோவில்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே சண்முகா தெருவில் இன்று (15-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்குகிறார். புதிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. திறந்து வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்ட ரங்கம் முன்பு மணிப்பூர் மாநில மக்களுக்கு நீதி வழங்கக்கோரி நடைபெறும் சிறப்பு மாநாட் டில் கலந்து கொள்கிறார். இதுகுறித்து மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை நாகர்கோவில் வருகிறார். அவருக்கு மாநகர் மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படு கிறது. புதிய அலுவலகத்தை திறந்து வைக்க வருகை தரும் அவருக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றார்.
- ஜான்சன் மற்றும் அவரது மகனின் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
- தந்தை-மகனுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தி சிரக்காகோடுபகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 65). கூலித்தொழிலாளி.இவரது மகன் ஜோஜி (38). இவருக்கு லிஜி (32) என்ற மனைவியும், டெண்டுல்கர் (12).
ஜான்சன் மற்றும் அவரது மகனின் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஜான்சன் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர். அங்கு வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்த அறையை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு ஜோஜி, அவரது மனைவி லிஜி, மகன் டெண்டுல்கர் ஆகியோர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இது குறித்து மண்ணுத்தி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடல் கருகி கிடந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்பு ஜான்சனை தேடியபோது விஷம் குடித்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோஜி, அவரது மகன் டெண்டுல்கர் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஜான்சன் தனது மகன், பேரன், மருமகள் ஆகியோரை பெட்ரோல் ஊற்றி உயிேராடு தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று ஜோஜி, தனது மகன் மற்றும் மனைவியுடன் ஒரு அறையில் படுத்து தூங்கி இருக்கிறார். அப்போது ஜான்சன் அந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டி இருக்கிறார்.
பின்பு மகன் குடும்பத்தினர் படுத்திருந்த அறைக்குள் ஜன்னல் வெளியே வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதனால் அறைக்குள் படுத்திருந்த ஜோஜி உள்பட 3 பேரும் மீதும் தீப்பிடித்து எரிந்தது.மகன் குடும்பத்தினர் படுத்திருந்த அறைக்கு தீ வைத்த ஜான்சன், பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விஷம் குடித்துள்ளார்.
ஜான்சன் எதற்காக மகன், பேரன், மருமகளை உயிரோடு தீ வைத்து எரித்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், தந்தை-மகனுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவித்தனர்.
இதனால் குடும்ப தகராறு காரணமாக மகன் குடும்பத்தினரை எரித்து விட்டு ஜான்சன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஜான்சன் சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. அவரது உடல் தேறியதும், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜோஜியின் மனைவி லிஜி கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மகன் குடும்பத்தினரை உயிரோடு எரித்து விட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மருத்துவமனையின் தலைமை டாக்டரும், முக சிறப்பு நிபுணருமான தினக்ஸ்குமார் வரவேற்று பேசினார்.
- முன்னாள் பேராசிரியர் நேசமணிதலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மற்றும் முகசீர மைப்பு மருத்துவமனையில் 16-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. விழாவில் கற்கோவில் ஆலய போதகர்கள் விக்டர் ஞானராஜ், ராஜ ஜெய்சிங், ஜெரோம் ஆகியோர் ஜெபம் செய்தனர். மருத்துவமனையின் தலைமை டாக்டரும், முக சிறப்பு நிபுணருமான தினக்ஸ்குமார் வரவேற்று பேசினார்.
குழந்தைகள் நல டாக்டர் மனேஷ்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் பேராசிரியர் நேசமணிதலைமை தாங்கி கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் ஸ்டெலின் தினக்ஸ் நன்றி கூறினார்.
- இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.
- 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இன்று காலை ஒரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.
இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரிகடல்நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும்திருவள்ளுவர்சிலை அமைந்துஉள்ளவங்ககடல் பகுதிநீர்மட்டம்தாழ்ந்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா படகுகள் தரைதட்டி நின்றன.
அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப் படவில்லை.
இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்றகடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல்15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டன. வட்ட கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- தமிழகத்தில் தனியார் நெய் ஒரு கிலோ 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
- தமிழக அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருகிறது.
நாகர்கோவில்:
அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
தமிழக அரசு அறிவித்தபடி கலைஞர் மகளிர் உரிமை தொகை தகுதியான பெண்களுக்கு கிடைத்துள்ளது. இதில் யாரேனும் விடுபட்டு இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பை அரசு வழங்கி உள்ளது. இந்த உதவித்தொகையானது கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உந்துதளாக அமையும்.
தமிழகத்தில் தனியார் நெய் ஒரு கிலோ 960 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆனால் ஆவினில் அதிகபட்சமாக விலையை உயர்த்திய பிறகும் கூட 700 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதை விலை உயர்வு என்று கூறினால் என்ன செய்வது? பால் கொள்முதலுக்கு விவசாயிகள் பாதிக்கப்படாத அளவுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
ஆனால் தனியாருக்கு சாதகமாக ஆவின் நெய் விலை உயர்த்தி இருப்பதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அப்படி எனில் விவசாயிகளுக்கு விலை கொடுக்க வேண்டாமா? தனியார் நெய் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்று அவருக்கு தெரியுமா? எனவே இதைப்பற்றி பேசும் உரிமை அவருக்கு கிடையாது.
தமிழக அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருகிறது. ஆனால் மத்திய அரசு தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயா்த்தி உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது மிகப்பெரிய கேள்வியாக பா.ஜனதா முன் வைக்கப்படுகிறது. இதற்கு முதலில் அவர்கள் பதில் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னி பூ அறுவடை முடிவடைந்த நிலையில் கும்பப்பூ சாகுபடி பணியை முன் கூட்டியே தொடங்கி உள்ளனர்.
- சுசீந்திரம், தேரூர், புத்தேரி பகுதிகளில் வயல் உழவு பணி நடைபெற்று வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவு பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலிருந்து மழை நீடித்தது.
நாகர்கோவிலில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. குளச்சலில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 42.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பூதப்பாண்டி, களியல், குழித்துறை, மயிலாடி, சுருளோடு, தக்கலை, கோழி போர்விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அருவிக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.
பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னி பூ அறுவடை முடிவடைந்த நிலையில் கும்பப்பூ சாகுபடி பணியை முன் கூட்டியே தொடங்கி உள்ளனர்.
சுசீந்திரம், தேரூர், புத்தேரி பகுதிகளில் வயல் உழவு பணி நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காக 781 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.60 அடியாக உள்ளது. அணைக்கு 462 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.85 அடியாக உள்ளது. அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 10.2, பெருச்சாணி 24.2, சிற்றார் 1-12.2, சிற்றார் 2-15, பூதப்பாண்டி 5, களியல் 16.2, கன்னிமார் 6.2, கொட்டாரம் 8.2, குழித்துறை 16.4, மயிலாடி 30.2, நாகர்கோவில் 26, புத்தன்அணை 24.2, தக்கலை 21.4, குளச்சல் 42.6, இரணியல் 34, பாலமோர் 10.4, மாம்பழத்துறையாறு 17, திற்பரப்பு 14.6, கோழிப்போர்விளை 20.2, அடையாமடை 7.2, குருந்தன்கோடு 24, முள்ளங்கினா விளை 12.8, ஆணைக்கிடங்கு 15.2, முக்கடல் 2.
மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக மழை பெய்த போதும் முக்கடல் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. தொடர்ந்து மைனஸ் அடியாகவே உள்ளது. இன்று காலை அணை நீர்மட்டம் மைனஸ் 10.90 அடியாக உள்ளது.
- கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
- மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்து உள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன்பிடித்தொழில் ஆகும்.
இங்கு 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
இந்த கடல்சீற்றத்தின் போது ஏற்படும் ராட்சத அலையில் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது.
இதனால் கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம்அடைந்துவிட்டன.
இதனால் சேதம் அடைந்த இந்த தூண்டில்வளைவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவுப் பாலம் நீட்டிக்கப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
தூண்டில்வளைவு பாலத்தில் பெரியபெரிய பாறாங்கற்களை போடாமல் சிறிய கற்களை போட்டு தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் ராட்சதஅலையில் சிக்கி அடிக்கடிக வீழ்ந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் பகுதி மீனவர்கள் நாடோடி போன்று ஊரு விட்டு ஊரு சென்று கன்னியாகுமரி, சின்னமுட்டம்போன்ற பகுதிகளுக்கு தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும் நீளமாகவும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவளம் பகுதியைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் இங்கு உள்ள நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
- குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
- 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன
நாகர்கோவில் :
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஏராள மானோர் விண்ணப்பித்தனர்.
நாளை தொடக்க விழா
இந்த விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன. வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப் பட்டன.
இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா நாளை (15-ந் தேதி) நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கி றார்.
தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் அவர் திட்டத்தை தொடங்கி வைக்கி றார். குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோட்டில் தொடக்கவிழா நடக்கிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது






