search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்
    X

    கன்னியாகுமரி அருகே மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

    • கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
    • மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரை கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்து உள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன்பிடித்தொழில் ஆகும்.

    இங்கு 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இந்த கடல்சீற்றத்தின் போது ஏற்படும் ராட்சத அலையில் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது.

    இதனால் கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம்அடைந்துவிட்டன.

    இதனால் சேதம் அடைந்த இந்த தூண்டில்வளைவு பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவுப் பாலம் நீட்டிக்கப்பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    தூண்டில்வளைவு பாலத்தில் பெரியபெரிய பாறாங்கற்களை போடாமல் சிறிய கற்களை போட்டு தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    இதனால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் ராட்சதஅலையில் சிக்கி அடிக்கடிக வீழ்ந்து உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் பகுதி மீனவர்கள் நாடோடி போன்று ஊரு விட்டு ஊரு சென்று கன்னியாகுமரி, சின்னமுட்டம்போன்ற பகுதிகளுக்கு தங்களது நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும் நீளமாகவும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவளம் பகுதியைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் இங்கு உள்ள நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் மற்றும் வள்ளங்கள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் கடற்கரையில் உள்ள மீன் சந்தைகளும் மீன் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

    Next Story
    ×