என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    தியாகதுருகத்தில்கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்டாச்சிமங்கலம்:

    தியாகதுருகம் புகையிலை தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் மகன் உதய பாரதி(வயது 37). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 23-ந் தேதி இரவு திடீரென மாயமானார். இதையடுத்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.

    இந்த நிலையில் நேற்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் உதய பாரதி இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உதயபாரதியின் உடலை மீட்டு தியாகதுருகம் போலீசார் மூலம் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உதயபாரதி கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரத்தில் பொது இடத்தில் புகைபிடித்த 6 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். தொடர்ந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், சுகாதாரத்துறையினர் சங்கராபுரம் பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பொது இடத்தில் புகைபிடித்த 6 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். தொடர்ந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, மேற்பார்வையாளர் பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ரிஷிவந்தியம்:

    ரிஷிவந்தியம் அருகே லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் வல்லரசு (வயது 20). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தை சேர்ந்த பச்சை மகன் அஞ்சாமணி என்பவரது வயலில், கிணற்றில் இருந்த நீர் மூழ்கி மோட்டாரை வெளியே எடுத்து வரும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிணற்றினுள் இருந்த மோட்டாரில் கயிறு கட்டுவதற்காக நீருக்குள் சென்ற வல்லரசு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. மேலும் கயிறும் அறுந்து விழுந்துவிட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் கிணற்றில் குதித்து தேடி பார்த்தும், கிடைக்கவில்லை.

    இதற்கிடையே தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 3 மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். அதில் கிணற்றுக்குள் வல்லரசு இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து தீயணைப்புவீரர்கள் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.

    இதுகுறித்த தகவலின்பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் ரூ.5 லட்சம் நகைளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மூங்கில்துறைப்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே புத்திராம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மதிவாணன் மனைவி சொர்ணம் (வயது 50) விவசாயி. இவரது கணவரும், மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சொர்ணம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததோடு, வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் 2 வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்து சொர்ணம் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குர்ஷித்பாஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சொர்ணம் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ.5½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    சின்னசேலத்தில் கல்வீசி 2 அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் புறவழிச்சாலையில் மூங்கில்பாடி பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவில் 2 அரசு பஸ்கள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் சிலர் அந்த பஸ்களின் மீது கல்வீசி தாக்கினர். இதில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவமாக பயணிகள் உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
    திருக்கோவிலூர் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீ்ட்டில் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 55). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சீனிவாசன் கடந்தவாரம் வீட்டை பூட்டி விட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது பெற்றோரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

    பின்னர் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த சீனிவாசன் வீ்ட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. சீனிவாசன் வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டு யாரோ மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது. கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சாய்னா கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    மழையால் சேதம் அடைந்த திருக்கோவிலூர் தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் கார்த்திகேயன் தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருக்கோவிலூர் கீழையூர்-அரகண்டநல்லூரை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் கடந்த சில ஆண்டுகளாக புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் பல்வேறு நிலைகளில் சேதமடைவதும், அதை அவ்வப்போது நெடுஞ்சாலை துறையினர் சீர்செய்வதுமாக இருந்து வருகிறது. இந்த தரைப்பாலத்தில் பாதசாரிகள், வாகன ஒட்டிகள் குறிப்பாக அரகண்டநல்லூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை வாகனங்கள் மூலம் இந்தவழியாகத்தான் கொண்டு செல்கிறார்கள்.

    கடந்த மாதம் பெய்த மழை மற்றும் அதனால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பாலத்தின் பெரும்பகுதி சேதம் அடைந்துள்ளதால் இந்த வழியாக செல்ல பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து நிகழ்வதற்கு முன்னதாக தரைப்பாலத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து பாலத்தை முழுமையாக சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    மக்காச்சோளத்துக்கு கூடுதல் விலை வழங்கக்கோரி அரகண்டநல்லூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது மக்காச்சோளம் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தினசரி 500 முதல் 600 மூட்டைகள் விற்பனைக்காக வருகிறது. மக்காச்சோளம் கடந்த வாரம் மூட்டை ஒன்று ரூ.1,810 வரை விலை போனது. ஆனால் இந்த வாரம் சற்று குறைந்து ரூ.1,700-க்கு விலை போகிறது. இதனால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இருந்தும் அதிகபட்ச விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,710 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரம் விலை நிலவரம் அதிகப்படியாக இருந்ததாகவும், தற்போது இதுதான் மார்க்கெட் நிலவரம் எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதை ஏற்க மறுத்து ஆத்திரம் அடைந்த விவசாயிகள் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் சாலை மறியலால் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருக்கோவிலூர் அருகே 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன வாலிபர் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் அருகே உள்ள திருப்பாலப் பந்தல் போலீஸ் சரகம் கரையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் காமராஜ்(வயது 30). கரும்பு வெட்டும் தொழிலாளியான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிவுசெய்து காமராஜைதேடி வந்தனர்.

    இந்த நிலையில் கரையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் கரும்பு வயலில் உள்ள வேப்பமரத்தில் சேலை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதற்கு கீழே எலும்புக்கூடு கிடந்தது. இதைப்பார்த்து அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே திருப்பாலப்பந்தல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் எலும்புக்கூட்டுடன் கிடந்த லுங்கிு மற்றும் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சேலை ஆகியவற்றை வைத்து பார்த்தபோது அவர் காணாமல் போன தொழிலாளி காமராஜ் என்பது தெரியவந்தது.

    பின்னர் அந்த எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காமராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன தொழிலாளி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் கரையாம்பாளையம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருக்கோவிலூர் அருகே கைக்குழந்தையை கொன்று நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். அவரது மனைவி ஆஷா (வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு கவியாழினி என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. வினோத் குமார் திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஆஷா மணலூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில தினங்களாக குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. தான் வேலை பார்த்து வந்த தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கும் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் குழந்தையின் நிலைமையில் எதுவும் முன்னேற்றம் இல்லாததால் கணவர் வினோத் குமாருக்கு தகவல் தெரிவித்த அவரது மனைவி ஆஷா உடன் புறப்பட்டு ஊருக்கு வரும்படி கூறியிருக்கிறார். ஆனால் வினோத்குமார் ஊர் திரும்பவில்லை.

    இதனால் மனமுடைந்த ஆஷா வீட்டில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். வீட்டின் கதவு வெகுநேரம் திறக்கப்படாமல் இருக்கவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்தனர்.

    அப்போது தூக்கில் ஆஷா பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது குழந்தை கவியாழினி இறந்து கிடந்தது.இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்தவுடன் மணலூர்பேட்டை போலீசார் விரைந்து சென்றனர். குழந்தை, ஆஷா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆஷா தனது குழந்தையை கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். என்றாலும் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    கள்ளக்குறிச்சி, திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,500 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2019-ம் ஆண்டு நவம்பர் மாத சம்பளம், 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான கொரோனா கால ஊதியம், நிலுவை ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    இதில் அனைத்துதுறை கவுரவ விரிவுரையாளர்களும் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும், உயர்கல்வித் துறையும் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
    சங்கராபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் (வயது 46). இவர் தற்போது மூரார்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து மூட்டை தூக்கும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டு திண்ணையில் மயங்கி கிடந்த விஜய்யை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். வயிற்றுவலி தாங்க முடியாமல் விஜய் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×