search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    அரகண்டநல்லூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்

    மக்காச்சோளத்துக்கு கூடுதல் விலை வழங்கக்கோரி அரகண்டநல்லூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது மக்காச்சோளம் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தினசரி 500 முதல் 600 மூட்டைகள் விற்பனைக்காக வருகிறது. மக்காச்சோளம் கடந்த வாரம் மூட்டை ஒன்று ரூ.1,810 வரை விலை போனது. ஆனால் இந்த வாரம் சற்று குறைந்து ரூ.1,700-க்கு விலை போகிறது. இதனால் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இருந்தும் அதிகபட்ச விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் மூட்டை ஒன்றுக்கு ரூ.1,710 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் கடந்த வாரம் விலை நிலவரம் அதிகப்படியாக இருந்ததாகவும், தற்போது இதுதான் மார்க்கெட் நிலவரம் எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இதை ஏற்க மறுத்து ஆத்திரம் அடைந்த விவசாயிகள் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகளின் சாலை மறியலால் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×