என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியம் அருகே உள்ள செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன் மகன் கவுதம்(வயது 17). இவர் அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
இவரும், அதே கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் தனசேகரன் என்பவர் ரிஷிவந்தியத்தை அருகே காட்டு எடையார் எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் வேலைக்காக டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார். உடன் கவுதமும் அந்த டிராக்டரில் அமர்ந்திருந்தார்.
காட்டு எடையார் எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் டிராக்டர் இறங்கியபோது அதில் அமர்ந்து இருந்த கவுதம் தவறி கீழே விழுந்தார். அப்போது டிப்பர் சக்கரம் அவரது உடலில் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த கவுதமை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
தியாகதுருகம் அருகே பொறையூர் கிராமத்தில் தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ் மண்வள அட்டை மற்றும் மண் வளம் குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் தலைமை தாங்கினார்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மலையரசன், வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தினகரன் கலந்துகொண்டு மண் வளம் பாதுகாப்பது குறித்தும், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் விதம் குறித்தும், பேராசிரியர் ஜான்சன் தங்கராஜ் எட்வர்டு மக்காச்சோள பயிர்களில் படைபுழு கட்டுப்பாடுகள் குறித்தும், பேராசிரியர் அய்யாதுரை உழவியல் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
அதனை தொடர்ந்து சுமார் 100 விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு அட்டை வழங்கப்பட்டது. அப்போது உதவி வேளாண் அலுவலர் இளையராஜா, பயிர் அறுவடை அலுவலர்கள் முருகன், சதீஷ்குமார் மற்றும் விவசாயிகள் பலரும் உடனிருந்தனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் நகரில் ஏற்பட்ட திடீர் மின்தடை காலை வரை சீராகாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பொது மக்கள் ஏராளமானோர் புகார் தெரிவித்தும் அதற்கு உரிய பதில் மற்றும் காரணம் தெரிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருக்கோயிலூர் துணை மின் நிலையம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் கொடுக்கப்பட்டு கிராமத்தில் துரிஞ்சல் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றில் இருந்து மணல் ஏற்றிய நிலையில் நின்று கொண்டிருந்த 7 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தரணி, விஜயகுமார், செல்வம், சிவக்குமார், சரவணன், வாசுதேவன், ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் மீது அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே விருத்தாசலம் செல்லும் சாலையில் மரக்கடை மற்றும் டூ வீலர் ஒர்க் ஷாப் உள்ளது. நேற்று வழக்கம்போல் வேலை முடிந்து இரவில் கடையில் பணிபுரிவார்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் கடைக்கு வந்தனர்.
அப்போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடையினுள் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை கடை உரிமையாளர் பணியாளர்கள் கடைக்கு வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் உள்ளே சென்று பார்த்தபோது மரக் கடையில் இருந்து ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் டூ வீலர் ஒர்க் ஷாப் கடையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூபாய் 5 ஆயிரம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை நடந்த கடைகளை பார்வை யிட்டு இரவு நேரத்தில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி கேமராக்களை பார்வையிட்டு கொள்ளையர்களை பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நகை கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மலையரசன், பேரூராட்சி தலைவர் வீராசாமி, துணை தலைவர் சங்கர், பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் குப்புசாமி, ஆரிய வைசிய கன்னிகா பரமேஸ்வரி கூட்டுறவு சங்க செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் மூர்த்தி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசு அறிவித்த 5 சவரனுக்கு உட்பட்ட தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 66 லட்சத்து 34 ஆயிரத்து 904 மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி 679 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்று மற்றும் அவர்களது நகைகள் வழங்கப்பட்டது.
இதேபோல் ஆரிய வைசிய கன்னிகாபரமேஸ்வரி கூட்டுறவு சங்கத்தில் ரூ. 25 லட்சத்து 89 ஆயிரத்து 59 மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் 62 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகை வழங்கப்பட்டது. ஆக மொத்தம் 741 பேருக்கு கடன் தள்ளுபடி சான்று மற்றும் நகை வழங்கப்பட்டது.
அப்போது நகர அவைத்தலைவர் ராதா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சிலம்பரசன், ராஜசேகர், மகாதேவி, ஜெயசித்ரா, உமாமகேஸ்வரி, கோபால், மூக்காயி, கிருஷ்ணவேனி மற்றும் பயனாளிகள் பலரும் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து சிறந்த முறையில் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடிசெய்து வருகிறார்கள். எனவே விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ஊக்கத்தொகை பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 2021-2022-ம் ஆண்டிற்கு தரிசுநிலங்கள் வாயிலாக சிறந்த முறையில் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தரிசு நிலங்கள் சாகுபடியில் சிறந்துவிளங்கும் விவசாயிகளை தேர்வு செய்து, பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
தோட்டக்கலைப்பயிரில் எளிய தொழில்நுட்பங்களை கையாண்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளை மாவட்ட அளவில் தேர்வு செய்து, அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000ம், 2-ம் பரிசாக ரூ.10,000ம், 3-ம் பரிசாக ரூ.5,000-ம் வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலைத் துறையின் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விவசாயிகளின் முழு விபரத்தினை பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி, இணையத்தின் மூலமாக மார்ச் 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை தோட்டக்கலைப்பயிர் செய்து வரும் விவசாயிகள் பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் கரும்பு மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் பயிரிடப்படும் கரும்பு பயிரை விவசாயிகள் அறுவடை செய்து மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்புகளை பதிவு செய்து அதை குறிப்பிட்ட காலத்திற்குள் வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு 9, 10-வது மாதம் முடிய கரும்புகள் பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் அவற்றை வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ஆண்டு பயிராக கரும்பு பயிர் சாகுபடி செய்து வருகிறோம். ஒரு ஆண்டு முடிந்து பல மாதங்கள் ஆன பின்னரும் கரும்பு பயிரை வெட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் கரும்பின் தரம் குறைந்து வருவது மட்டுமல்லாமல் எடையும் அதிகளவில் குறைந்து வருவதால் பல ஆயிரம் செலவு செய்து பயிரிடப்பட்ட கரும்பு பயிர்கள் வீணாகி வருகிறது.
கடந்த ஆண்டு மழை பெய்ததால் கரும்பு பயிர் சேதம் அடைந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருகிறது. எனவே பதிவு செய்த கரும்புகளை வெட்டுவதற்கு சர்க்கரை ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் இவரது மனைவி சங்கீதா (வயது 25). கட்டிட மேஸ்திரி. இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தன்விகா என்கிற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின் போது சங்கீதாவுக்கு 11 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் வரதட்சணை கொடுத்தனர். இந்த நிலையில் தன்விகாவிடம் கணவர் வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் மனமுடைந்த சங்கீதா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கலியன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சங்கீதாவுக்கு திருமணமானமாகி 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதாலும், வரதட்சனை கொடுமை காரணமாக இருந்ததாலும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை பஸ் நிலையம் எதிரே வணிக வளாகம் உள்ளது. அங்கு அய்யங்கார் பேக்கரி மற்றும் கடை அமைந்துள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
இன்று காலை 7 மணி அளவில் பேக்கரியில் இருந்து திடீரென புகை வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதனால் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது.
அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடிய வில்லை.
இதுபற்றி உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
என்றாலும் பேக்கரி மற்றும் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இங்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.






